மெர்சல் படத்திற்கான தடை நீக்கம்....

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (15:46 IST)
மெர்சல் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

 
அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் வருகிற தீபாவளியன்று வெளியாகவுள்ளது.    
 
அந்நிலையில், தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். 2014ம் ஆண்டு ‘ மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பை பதிவு செய்திருந்தேன். ஆனால், மெர்சல் என விஜய் படத்திற்கு தலைப்பு வைத்துள்ளனர். எனவே, அந்த தலைப்பில் விளம்பரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.   
 
அவரின் மனுவை விசாரித்த நீதிபதி ‘மெர்சல்’ என்ற தலைப்பை வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை விளம்பரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என கடந்த செப்டம்பர் 22ம் தேதி தடை விதித்தார். மேலும், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.   
 
அந்நிலையில், மெர்சல் தலைப்பிற்கு நீதிமன்றம் தடை விதித்தால், ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடல் வரியையே தலைப்பாக வைத்துவிடலாம் எனப் படக்குழு ஆலோசித்து வருவதாகவும் அப்போது செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில், அந்த வழக்கு கடந்த 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை வருகிற 6ம் தேதிக்கு (இன்று) ஒத்தி வைத்தார். மேலும், அதுவரை மெர்சல் என்ற பெயரில் விளம்பரம் செய்யக்கூடாது என அவர் உத்தரவு பிறப்பித்தார். 

எனவே மெர்சல் என்கிற பெயரிலேயே இப்படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.
 
இந்நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மெர்சல் படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும், மெர்சல் என்ற பெயரிலேயே விளம்பரம் செய்யவும், படத்தை திரையிடவும் அவர் அனுமதி அளித்தார்.
 
இந்த தீர்ப்பு படக்குழுவினரையும், விஜய் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்