பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை. அதுபோலவே பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு கங்கனாவை வைத்து சிம்ரன் என்ற படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஹன்சால் மேத்தா தான் கங்கனாவோடு பணியாற்றியது மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் “கங்கனா ஒரு சிறந்த நடிகர். ஆனால் அந்த திறமைக்கு ஒரு வரையறை உள்ளது. சிம்ரன் படத்தில் நாங்கள் எழுதியிருந்த பல காட்சிகளை அவர் எடுக்கவிடவில்லை. அவர் விரும்பிய காட்சிகளை மட்டுமே படமாக்க விரும்பினார். நீங்கள் நினைப்பதை எல்லாம் உங்கள் கதாபாத்திரங்கள் மேல் ஏற்றக்கூடாது. அவரோடு சேர்ந்து பணிபுரிந்தது மிகப்பெரிய தவறு” என்று கூறியுள்ளார்.