நடிகராக மட்டுமின்றி, பாடலாசிரியர் மற்றும் பாடகராக அறியப்படுபவர் அருண்ராஜ் காமராஜ். ‘ராஜா ராணி’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கும் இவர், சிலபல பாடல்களையும் எழுதியும், பாடியும் உள்ளார். ஆனால், இயக்குநராக வேண்டும் என்பதுதான் இவருடைய நோக்கமாம். அதற்காகத்தான் சினிமா துறைக்கு வந்தாராம். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், ‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். ஆனால், சரியான வாய்ப்பு அமையாமல் போகவே, நடிக்கத் தொடங்கி, பாடலாசிரியராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளாராம்.
இவருடைய கனவுப்படி, விரைவில் இயக்குநராக அறிமுகமாகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையை இவர் இயக்கப் போகிறார். ஆமிர் கானின் ‘தங்கல்’ போல அப்பா – மகளுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான கதையாக இது அமைந்துள்ளது. பலரிடம் இந்த ஸ்கிரிப்ட்டைச் சொன்னபோது ஒதுக்கியவர்கள், பெண்கள் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையில் ஜெயித்தபிறகு அருண்ராஜா காமராஜை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கை தான் அவரை இயக்குநர் அவதாரம் எடுக்கச் செய்திருக்கிறது.