'குட் பேட் அக்லி' படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் அர்ஜுன் தாஸ், பாலிவுட் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகிறார். பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் 'டான் 3' படத்தின் மூலம் வில்லனாக அவர் நடிக்க இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'குட் பேட் அக்லி' படத்தில், அர்ஜுன் தாஸ் இரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக, அவரது வில்லத்தனமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த நடிப்புதான், 'டான் 3' படக்குழுவினரின் கவனத்தை ஈர்த்து, அவருக்கு இந்த வாய்ப்பைக் கிடைக்க செய்துள்ளது.
இந்தி திரைப்பட வரலாற்றில் 'டான்' திரைப்படம் ஒரு மைல்கல். தற்போது, இந்த படத்தின் மூன்றாம் பாகத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். அர்ஜுன் தாஸ் இதில் ஒரு சைக்கோ வில்லனாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஜுன் தாஸின் இந்த பாலிவுட் அறிமுகம், அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான குரல் மற்றும் நடிப்புத் திறனால் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ், பாலிவுட்டிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.