அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, 200 கோடி ரூபாய் வசூலை ஒரு பக்கம் பெற்றிருந்தாலும், இன்னொரு பக்கம் திரை விமர்சகர்கள் இந்த படத்தை நடுநிலையுடன் விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே புளூசட்டை மாறன், இந்த படம் 'குப்பை படம்' என்று விமர்சனம் செய்த நிலையில், தற்போது திருப்பூர் சுப்ரமணியம், 'குட் பேட் அக்லி படம் வெற்றி படம் இல்லை என்றும், 'விஸ்வாசம்' அளவுக்கு அந்த படம் வசூலை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல், ஃபேன்பாய் படங்களுக்கு எதிர்காலம் இல்லை என்றும், நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எடுத்தால் மட்டுமே அனைத்து தரப்பினரும் தியேட்டருக்கு வருவார்கள் என்றும் கூறியுள்ளார். ரசிகர்களை மட்டுமே நம்பி படம் எடுத்தால், முதல் மூன்று நாள் மட்டும் தான் கலெக்ஷன் வரும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மாஸ் நடிகர்களின் படங்கள் பெரும்பாலும் தோல்வியடைவதற்கான காரணம், அவர்கள் கதையில் தலையிடுவதால் தான் என்றும் தெரிவித்தார். 'விஜய் சினிமாவை விட்டு போய்விட்டால், சினிமாவுக்கு எதிர்காலமே இல்லை' என்ற அர்த்தமில்லை என்றும், 'விஜய் போய்விட்டால், இன்னொருவர் வருவார்' என்றும் அவர் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.