விவேகம் படத்தை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் தியேட்டரில் மயங்கி விழுந்து மரணம்!

சனி, 26 ஆகஸ்ட் 2017 (13:40 IST)
நடிகர் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பின்னர் விவேகம் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதனை அஜித் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர்.


 
 
ஹாலிவுட் லெவலுக்கு படம் இருப்பதாகவும், இந்த படத்துக்கு நடிகர் அஜித் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார் எனவும் அவரை புகழ்ந்து தள்ளுகின்றனர் அவரது ரசிகர்கள். ஆனால் சமூக வலைதளங்களில் படத்துக்கு கலவையான விமர்சனங்களே வருகின்றனர். சிலர் படத்தை எதிர்மறையாகவும் விமர்சிக்கின்றனர்.
 
இந்த சூழ்நிலையில் அஜித் நடித்த விவேகம் படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த அவரது ரசிகர் ஒருவர் தியேட்டரிலேயே மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 
நாகை மாவட்டம் கிளியனூர் கிராமத்தை சேர்ந்த 31 வயதான சபுருதீன் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் சமீபத்தில் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான விவேகம் திரைப்படத்தை பார்க்க சபுருதீன் தனது நண்பர்களுடன் காரைக்காலில் உள்ள ஒரு தியேட்டருக்கு சென்றுள்ளார்.
 
அப்போது படத்தை பார்த்துக்கொண்டிருந்த சபுருதீன் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
 
இது அஜித் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சபுருதீன் இறந்தது குறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்