கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அகோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.
படம் குறித்து பேசிய கஸ்தூரி ராஜா, இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதியில் உள்ள அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்று கூறப்படுகிறது. அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள்.
அங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தியபோது, நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட நாங்கள் பயந்து செய்வதறியாது நின்றபோது ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. இதனை தொடர்ந்து இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை. கோயிலை சுற்றியுள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.
ஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.