சமந்தா கூறிய மருத்துவ குறிப்புக்கு கண்டனம் தெரிவித்த மருத்துவர் ஒருவர் சமந்தாவை சிறையில் தள்ள வேண்டும் என்று கூறிய நிலையில் சமந்தா இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கம் இதோ:
கடந்த சில ஆண்டுகளாக நான் பலவகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்த நிலையில் எனக்கு பரிந்துரைக்கப்பட்ட மருத்துவத்தை எடுத்துக்கொண்டேன். நிபுணர்களின் அறிவுறுத்தல்படி, சுய ஆய்வுக்குப் பின்னர் தான் அந்த மருத்துகளை எடுத்துக்கொண்டேன்.
இந்த சிகிச்சைகள் பெரும்பாலும் விலை உயர்ந்தவை. என்னால் அந்த சிகிச்சையை பெற முடிகிறது. ஆனால், இந்த விலை உயர்ந்த சிகிச்சைகளை பெற முடியாதவர்கள் குறித்தும் நான் சிந்திப்பேன். நான் மேற்கொண்ட வழக்கமான சிகிச்சைகள் எதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை. இது ஒருவேளை மற்றவர்களுக்கு பயனளிக்கலாம்.
விலை உயர்ந்த சிகிச்சைகள், பலனளிக்காத நீண்ட நாள் சிகிச்சைகள் ஆகிய இரண்டும் என்னை மாற்று சிகிச்சையை நோக்கி நகர்த்தியது. சில பரிசோதனைகள், சிகிச்சைகள் எனக்கு சிறப்பான முறையில் பலனளித்தன. செலவும் குறைவாக இருந்தது.
போகிற போக்கில் நான் எந்த சிகிச்சையையும் பரிந்துரைக்கவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்டதன் அடிப்படையிலும், நல்ல நோக்கத்துக்காகவும் தான் இதனை பரிந்துரைத்தேன்.
என்னுடைய நோக்கத்தை தவறாக சித்தரித்தும் கருத்துகளை பகிர்ந்ததை அறிந்தேன். மருத்துவரான அவர், என்னைவிட அதிகம் அறிந்திருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய கருத்து நல்ல நோக்கத்துக்கான என்பதையும் அறிவேன். ஆனால் அவர் கனிவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என அவர் பரிந்துரைத்துள்ளார். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.
ஒருவேளை நான் பிரபலமாக இருப்பதால் இப்படியான கருத்துகள் வருகிறது என நினைக்கிறேன். சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவாகத்தான் அதனை வெளியிட்டேனே தவிர, பிரபலானவர் என்ற முறையில் எந்தக் கருத்தையும் கூறவில்லை. இதனால் பணம் ஈட்டும் தவறான நோக்கமும் எனக்கில்லை. நான் கற்ற அனுபவத்திலிருந்து, பரிந்துரைத்தேன்.
நான் பரிந்துரைத்த முறையானது எனக்கு பலனளித்தது. அதனை ஒரு ஆப்ஷனாகத்தான் தெரிவித்தேன். எல்லா சிகிச்சைக்கும் ஆதரவாகவும், எதிராகவும் இருவேறு நிலைபாடுகள் இருக்கும். இதனை கண்டறிவது கடினமானது என்று கூறியுள்ளார்.