மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில் நடிகை நல்லதொரு குடும்பம் மற்றும் முஸ்தஃபா உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சார்மிளா மலையாளத் திரையுலகம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “எனக்கு மலையாளத் திரையுலகில் இருந்துதான் எனக்கு இதுபோன்ற தொல்லைகள் வந்தன. காலம் மாறிப் போச்சு படத்தின் மலையாள ரீமேக்கில் நான் நடித்தபோது பொள்ளாச்சியில் இறுதிகட்ட ஷூட்டிங் நடந்தது. அப்போது அந்த பட தயாரிப்பாளர் என்னை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார். நான் அவர் கையைக் கடித்துவிட்டு ஓடிவந்துவிட்டேன்.
இது ஏதோ எனக்கு மட்டும் நடக்கவில்லை. பல முன்னணி நடிகைகளுக்கே நடந்துள்ளது. பலரும் இது சம்மந்தமாக என்னிடம் பேசியுள்ளார். இப்போது நான் அம்மா வேடங்களில் நடிக்கிறேன். மூன்று இளைஞர்கள் ஒரு படத்தை எடுத்தார்கள். அதில் எனக்கொரு வேடம் கொடுத்தார்கள். முதலில் மரியாதையாக பேசினார்கள். ஆனால் ஷூட்டிங் சென்றதும் ஒருநாள் என் அறைக்கு வந்து எங்கள் மூன்று பேரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கிறதோ, அவர்களோடு செல்லலாம் எனக் கூறினர். நான் அவர்களிடம் என் வயசு என்னப்பா... உங்க வயசு என்னப்பா எனக் கேட்டால், “சின்ன வயசுல இருந்தே எங்களுக்கு உங்க மேல க்ரஷ் மேடம் என சொல்றாங்க. அதனால் இப்போதும் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கதான் செய்யுது” எனக் கூறியுள்ளார்.