தமிழில் வின்னர், நரசிம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ரியாஸ்கான். சென்னையில் பனையூர் பகுதியில் வசித்து வரும் ரியாஸ்கான் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அவர் வீட்டின் அருகே சிலர் கூடி நின்று பேசிக்கொண்டிருந்திருக்கின்றனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கூடி பேசுவதை தவிர்க்க சொல்லி அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளார் ரியாஸ்கான். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் எதிர் தரப்பினர் ரியாஸ்கானை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரியாஸ்கான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தாக்குதல் பற்றி இப்போது ரியாஸ்கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘என் வீட்டுக்கு வெளியே பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக நின்றனர். அப்படி நிற்பது அவர்கள் உட்பட எங்களுக்கும் ஆபத்து என்பதால் நாங்க பக்கத்து ஏரியாக் காரர்கள்… இங்கு காற்று வாங்க வந்தோம் என்றார்கள். உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று காற்று வாங்குங்கள் என்று சொன்னேன்.
நீங்கள் நடிகராக இருந்தால் அதையெல்லாம் சினிமாவில்… எங்களிடம் வேண்டாம் என்றார்கள். நான் சாதாரண பொது மனிதனாக தான் சொல்லுகிறேன் என்று கூறினேன். பேசிக்கொண்டே இருந்தபோது அந்த கும்பலிலிருந்த ஒருவன் கேட் எகிறி குதித்து என் தலையில் தாக்க வந்தான். அது என் தோளில் பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர்.’ எனக் கூறியுள்ளார்.