‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

Mahendran

சனி, 2 ஆகஸ்ட் 2025 (12:19 IST)
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 71வது தேசிய விருதுகளில், உலக அளவில் பாராட்டுகளை பெற்ற மலையாள திரைப்படமான 'ஆடுஜீவிதம்' ஒரு விருது கூட பெறாதது, சினிமா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. 
 
மலையாளத்தில் பிரபல எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' நாவலை தழுவி, அதே பெயரில் இந்தப் படம் உருவாக்கப்பட்டது. ப்ளெஸ்ஸி இயக்கிய இந்த படத்தில், பிருத்விராஜ் சுகுமாரன் கதாநாயகனாகவும், அமலா பால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம், சுமார் 10 ஆண்டுகள் தயாரிப்புப் பணிகள் நடைபெற்ற பிறகு, 2024 மார்ச் 28 அன்று திரையரங்குகளில் வெளியானது.
 
இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம், தேசிய விருது பட்டியலில் இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
 
தேசிய விருதுக்கான விதிகளின்படி, ஒரு திரைப்படம் டிசம்பர் 31, 2023-க்குள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும். 'ஆடுஜீவிதம்' படம் 2023 டிசம்பர் 31-க்குள் தணிக்கை செய்யப்பட்டிருந்தாலும், அது 2024-ல் வெளியானதால், 72வது தேசிய விருதுக்கான போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் என கூறப்படுகிறது.
 
இந்த தகவல் உறுதியானாலும், இவ்வளவு சிறந்த படைப்புக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படக்குழு இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்