உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர்-8 சுற்றின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் அதிரடியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்-8 சுற்றில் 'இ' பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதின. பூவா தலையா வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக சல்மான்பட் 34 ரன்களும், உமர்அக்மல் 30 ரன்களும் எடுத்தனர். அணித் தலைவர் அப்ரிடி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து தரப்பில் சைடுபாட்டம், ஸ்டூவர்ட் பிராட், மைக்கேல் யார்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மைக்கேல் லம்ப்பும் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார், இதில் 3 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.
கீஸ்வெட்டர் (25) சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தார். இதன் பின்னர் 2-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கெவின் பீட்டர்சன் நிலைத்து நின்றதுடன், பாகிஸ்தான் பந்து வீச்சை அதிரடியாக துவம்சம் செய்து இங்கிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் விளாசி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீட்டர்சன் 52 பந்தில் 70 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.