கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் நாளுக்கு நாள் வணிகமயமாகி வரும் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகையே உற்சாகத்தில் ஆழ்த்தும் ஒலிம்பிக் போட்டிகளும் அரசியல் வயப்படுத்தப்படுவது விளையாட்டு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி பீஜிங்கில் துவங்குள்ள 28வது ஒலிம்பிக் போட்டிகளுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காரணம் திபெத்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு வித்திட்ட கிரேக்க நாட்டின் ஒலிம்பஸ் நகரத்திலிருந்து நேற்று ஒலிம்பிக் ஜோதி பீஜிங்கை நோக்கிப் புறப்பட்ட அதே நேரத்தில், “திபெத் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுவரும் சீன அரசைக் கண்டித்து பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கலாமா என்று தாங்கள் ஆலோசித்து வருவதாக” ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.
போரினாலும், நாடுகளுக்கிடையிலான அரசியலாலும் ஒலிம்பிக் போட்டிகள் பாதிக்கப்பட்ட வரலாறு ஏற்கனவே உள்ளது என்றாலும், ஒலிம்பிக் போட்டிகளை அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒரு ஆயுதமாக்குவது சரிதானா என்பதை முன்னேறிய நாடுகள் யோசிக்க வேண்டும்.
ஆஃப்கானிஸ்தானிற்குள் ரஷ்ய ராணுவம் நுழைந்ததைக் கண்டித்து நேட்டோ ஒப்பந்த (அமெரிக்க, ஐரோப்பிய) நாடுகள், 1980 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்தன.
அதற்கு பதில் நடவடிக்கையாக 1984ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை ரஷ்யாவும், கம்யூனிச (வார்சா ஒப்பந்த) நாடுகளும் புறக்கணித்தன.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் காணப்படும் கடும் போட்டியும், படைக்கப்படும் சாதனைகளும் இவ்விரு ஒலிம்பிக் போட்டிகளில் பெரிதாக இடம்பெறத் தவறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இப்படி ஒரு நாட்டின் அல்லது உள்நாட்டின் பிரச்சனைகளை சர்வதேச அரசியலாக்குவதற்கு...
,,, எதற்காக ஒலிம்பிக் போட்டிகளை கருவியாக்க வேண்டும்? அப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒலிம்பிக் போட்டிகளை கருவியாக்குவதால் தீர்வு ஏற்படுமா?
webdunia photo
WD
1974ஆம் ஆண்டு மூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 13 இஸ்ரேலிய வீரர்களை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலைகள் மூலம் தங்களுடைய பிரச்சனையை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக யாசர் அராஃபத்தின் இயக்கம் கூறியது.
நமது கேள்வி: பாலஸ்தீன விடுதலை இயக்கம் நடத்திய அந்தப் படுகொலை அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வைத் தந்ததா? அல்லது இஸ்ரேலிடமிருந்ததான் விடுதலையைப் பெற முடிந்ததா? எதுவும் இன்று வரை நடக்கவில்லையே.
எல்லாவற்றிற்கும் மேலாக கொல்லப்பட்ட அந்த இஸ்ரேலிய வீரர்களுக்கும் பாலஸ்தீன பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?
மாஸ்கோ ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்ததே ஆப்கானிஸ்தானிற்குத்தான் விடிவு பிறந்துவிட்டதா?
எனவே, உள்நாட்டுப் பிரச்சனையாகட்டும், நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையாகட்டும் அதனை விவாதிக்க வேண்டிய இடம் ஐ.நா. பொதுச் சபை அல்லது பாதுகாப்புப் பேரவை. இதில் விளையாட்டை கருவியாக்குவது தவறு.
webdunia photo
WD
திபெத் பிரச்சனை இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. அப்பிரச்சனைக்கு உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்பிரச்சனையில் சீன அரசு கையாண்டுவரும் அடாவடித்தனங்கள் எதுவும் உலகமறியாதது அல்ல. ஆனால் அதற்கு ஒலிம்பிக்கை கருவியாக்க அனுமதிக்கக் கூடாது.
அமெரிக்காவாயினும், ஐரோப்பிய நாடுகளாயினும் விளையாட்டை விளையாட்டாகவே பார்க்க மற்ற உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும். ஒலிம்பிக்கை அரசியல் விளையாட்டாக்க அனுமதிக்கக் கூடாது.