பாரம்பரிய முறையில் ஹாக்கியை விளையாடி வந்த இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் ஹாக்கி விளையாட்டில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு செய்த மாற்றங்கள் பெரும் அதிர்ச்சியையும், சவாலையும் ஏற்படுத்தின.
கால்பந்தாட்டத்தில் கடைபிடிக்கப்படும் ஆஃப் சைட் நெறிமுறை ஹாக்கியிலும் இருந்தது. மாற்றப்பட்ட விதிமுறைகளில் அது கைவிடப்பட்டது. இதனால், எதிரணியின் கோலிற்கு அருகே பந்து இருக்கும் போதும், அந்த அணியின் வீரர் ஒருவர் அல்லது இருவர் அங்கிருந்து பந்து அடிக்கப்பட்டால் அதனை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் போது, வேகமாக கொண்டு சென்று சிரமமின்றி கோலடிக்கும் வாய்ப்பு (!) ஏற்பட்டது. இந்தப் புதிய முறையை - அதுவரை ஹாக்கியை ஆடாத ஐரோப்பிய அணிகள் - மிக வேகமாகக் கற்றுக்கொண்டு சாதகமாகப் பயன்படுத்தின. ஓரிரு கோல்களில் முடிவுகள் நிர்ணயிக்கப்படும் ஹாக்கி விளையாட்டில் 10-8, 13-7 என்றெல்லாம் முடிவுகள் வரத் துவங்கின.
இந்த புதிய விதிகளின்படி பழகிக் கொண்டு ஆடுவதற்கு இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு பல ஆண்டுகள் ஆயின.
இது மட்டுமின்றி, மேலேறிச் செல்லும்போது பந்தை பின்னால் தள்ளினால் (மைனஸ் போடுவது), தவறு (ஃபவுல்) என்பது போன்ற பல ஆட்ட விதிகள் மாற்றப்பட்டன. ரிவர்ஸ் ஃபிளிக் ஏற்கப்பட்டது. இவைகள் அனைத்தும் ஐரோப்பிய அணிகளுக்கு சாதமாகவே செய்யபட்டதாக அப்பொழுதெல்லாம் பெரிதாக குற்றம் சாற்றப்பட்டது. இந்த மாற்றங்களை இந்திய, பாகிஸ்தான் ஹாக்கி அமைப்புகள் பெரிய எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டன.
(கால்பந்தாட்டத்தில் ஆஃப் சைட் விதிமுறையை நீக்கிவிட்டு ஆடினால் எப்படியிருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதேபோல, ஆஃப் சைட் விதிமுறையுடன் ஹாக்கி மீண்டும் ஆடப்பட்டால் ஐரோப்பிய, ஆஸ்ட்ரேலிய அணிகளால் இந்திய, பாகிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள முடியுமா என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்)
இந்த புதிய விதிமுறைகள் ஏற்கப்பட்டதனால் பாரம்பரிய ஹாக்கி பெரும் பாதிப்பிற்கு உள்ளானது. புதிய ஆட்ட முறை வேகமான ஆட்டத்திற்கு வழிவகுத்தது. இந்த சவாலை எதிர்கொள்ள, ஐரோப்பிய அணிகளுக்கு இணையாக தாங்களும் வேகமாக ஆட முற்பட்ட இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களின் பாரம்பரிய ஆட்ட முறைகளை கைவிட்டன.
இதுவே சர்வதேச அளவில் இந்திய, பாகிஸ்தான் அணிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டது என்றால் அது நிச்சயம் மிகையில்லை.
இது எங்குபோய் முடிந்தது தெரியுமா? இந்திய, பாகிஸ்தான் அணிகளை பயிற்றுவிக்க ஐரோப்பிய பயிற்சியாளர்களை நியமிப்பதில் சென்று முடிந்தது. அந்தப் பயிற்சியாளர்கள், நமது வீரர்களிடம் ஒட்டிக் கொண்டிருந்த மிச்ச மீதி ஆட்டத்திறனையும் கிள்ளி எறிந்துவிட்டு, ஐரோப்பிய ஆட்டக்காரர்களைப் போல இயந்திர கதியில் ஆடவிட்டனர்.
ஹாக்கி விளையாட்டு அதன் உன்னதங்களை இழந்து சப்பென்று ஆனது, அபாரமான அந்த பாரம்பரிய விளையாட்டு முறைக்கு சங்கு ஊதப்பட்டது.
ஆஸ்ட்ரோ டர்ஃப் ஏற்படுத்திய அடுத்த சவால்!
ஆஸ்ட்ரோ டர்ஃப் (Astro Turf) என்றழைக்கப்படும் செயற்கை புல் களம் ஹாக்கி விளையாட்டிற்கு பயன்படுத்துவதற்கு முன்னரே பேஸ் பால் உள்ளிட்ட பல விளையாட்டுக்களில் பயன்படுத்தப்பட்டது. 1975 ஆம் ஆண்டில் மான்ட்ரியலில் மோல்சான் மைதானத்தில் முதன் முதலாக ஆஸ்ட்ரோ டர்ஃப் களம் போடப்பட்டு ஒரு சர்வதேச ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது.
webdunia photo
FILE
1983 ஆம் ஆண்டில் நடந்த உலக மகளிர் ஹாக்கிப் போட்டிகள் இந்த செயற்கைப் புல் களத்தில்தான் நடத்தப்பட்டது. அதன் பிறகு 13 ஆண்டுகள் கழித்துதான் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் செயற்கைப் புல் களத்தில் ஆடவர் ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்பட்டன்.
எதிர்காலத்தில் ஹாக்கிப் போட்டிகள் செயற்கைப் புல் களங்களில்தான் நடத்தப்படும் என்பது நன்கு முன்னறிவிக்கப்பட்டும், அதனை அமைப்பதற்காக எந்தத் தீவிரத்தையும் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு காட்டவில்லை.
விதிமுறைகள் மாற்றப்பட்டதால் ஹாக்கியை ஆடுவதில் ஏற்பட்ட மாற்றங்களை இந்திய, பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் படுவேகமாக மாற்றிக் கொண்டனர். ஆனால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை புல் கள வசதி மிக மிகக் குறைவாக இருந்ததால் அதில் பயிற்சி பெறும் வாய்ப்பு அவர்களுக்கு கிட்டவேயில்லை. இந்த உண்மைகள் எல்லாம் நீண்ட காலமாகவே வசதியாக மறைக்கப்பட்டு, நமது வீரர்களின் திறமையின்மையே காரணம் என்று பேசப்பட்டது.
இன்றைக்கு எடுத்துக் கொள்ளுங்கள், ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் சுழல் சுற்றிலும் பிறகு இறுதியிலும் இந்தியாவை வென்ற இங்கிலாந்தில் உள்ள செயற்கை புல் களங்கள் 600. ஆனால் இந்தியாவில் - இன்றைக்கு உள்ளது எத்தனைத் தெரியுமா? வெறும் 20 மட்டுமே! எப்படியிருக்கிறது உண்மை?
நமது மாநிலத்தில் - பஞ்சாபிற்கு அடுத்தப்படியாக, கர்நாடகத்திற்கு இணையாக அதிக ஹாக்கி வீரர்களை உருவாக்கும் - தமிழ்நாட்டில் இன்று உள்ளது வெறும் 3 செயற்கை புல் களங்களே!
ஒன்று சென்னை எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், மற்றொன்று நெல்லையில் உள்ள கல்லூரியில் - இது சமீபத்தில் இடப்பட்டது. ஏற்கனவே ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் போடப்பட்டுள்ளது.
பெங்களுரில் ஒரு செயற்கை புல் கள மைதானம் உள்ளது. மிக அதிக அளவிற்கு (ஆனால் போதுமான அளவிற்கு இல்லை) பஞ்சாபிலும், டெல்லியிலுமே உள்ளன.
மிக அருமையான ஹாக்கி விரர்களை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த வசதி எங்கு உள்ளது? கண்டுகொண்டதா இந்திய ஹாக்கிக் கூட்டமைப்பு?
ஹாக்கி கூட்டமைப்பும் கண்டுகொள்ளவில்லை, மத்திய இளைஞர் - விளையாட்டுத் துறையும் கண்டு கொள்ளவில்லை. சென்னையில் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு விளையாட்டு நடைபெற்ற போது, அப்பொழுது தமிழக முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயல்லிதா ஆர்வத்துடன் மேற்கொண்ட முயற்சியினால் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் புதிதாக, தரம் வாய்ந்த ஆஸ்ட்ரோ டர்ஃப் இடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டு வசதிகளை மேம்படுத்த செல்வி ஜெயலலிதா காட்டிய ஆர்வத்தை மற்ற மாநில முதல்வர்கள் அன்றைக்குக் காட்டியிருந்தால் இன்றைக்கு திறமையான பல ஹாக்கி வீரர்கள் இந்தியாவிற்குக் கிடைத்திருப்பார்கள்.
எனவே, ஹாக்கி விளையாட்டில் ஏற்பட்ட மாற்றங்களுக்கும், முன்னேற்றங்களுக்கும் நமது நாடு எந்த வகையிலும் ஈடுகொடுக்கவில்லை.
பிறகு என்னதான் செய்தது இந்திய ஹாக்கி கூட்டமைப்பு என்று கேட்கத் தோன்றுகிறதா? நாளை பார்ப்போம்.