இந்திய ஹாக்கியை சீர்படுத்த சரியான வாய்ப்பு!

வெள்ளி, 25 ஏப்ரல் 2008 (14:50 IST)
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் செயலர் ஜோதிகுமரன் இந்திய அணிக்கு விரர்களைத் தேர்வு செய்ய லஞ்சம் பெற்றதை ஆஜ் தக் தொலைக்காட்சி ரகசியமாக படம்பிடித்து வெளியிட்டதன் மூலம், இந்திய ஹாக்கிக்கு புத்துயிரூட்ட வழி பிறந்துள்ளது.

webdunia photoFILE
தான் லஞ்சம் பெற்றதை மறைக்க ஜோதிகுமரன் வெளியிட்ட அறிக்கையை ஆழ்ந்து படித்த எவரும், அவர் உண்மையை மூடி மறைக்க அவிழ்த்துவிட்ட கதையை நம்பமாட்டார்கள். ஸ்பான்சர் செய்ய முன்வரும் நிறுவனம், இவரை இப்படித் தனியாக சந்தித்து முன்பணம் கொடுக்குமா? உண்மையை மூடுவதற்கு பெரிய பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்.

இந்திய ஹாக்கியின் உள் நடைமுறை உண்மைகளை அறிந்துவர்களுக்கு இதெல்லாம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை என்பது நன்றாகவே தெரியும்.

அதையும் விட மோசமானது, ஜோதிகுமரன் செய்த ஊழலை விசாரிக்க இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் கே.பி.எஸ். கில் அறிவித்துள்ள விசாரணைக் குழு. ஜோதிகுமரனின் ஊழலிற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டியவர், அது குறித்து விசாரணை குழு அமைப்பது நேர்மையான நடவடிக்கையல்ல.

இந்திய ஹாக்கி கூட்டமைப்பு என்றாலே கில்லும், ஜோதிகுமரனும்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர்கள் இருவரும் வைத்ததுதான் அங்கு நடைமுறைச் சட்டம். ஜோதிகுமரன் விவகாரம் வெளிவந்த மறுநாளே அறிக்கை வெளியிட்ட இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் துணை செயலர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகத்தில் எதுவுமே வெளிப்படையாக நடக்கவில்லை என்பதே இதன்மூலம் வெளிப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எனவே, மத்திய அரசின் விளையாட்டுத் துறையும், வரும் 28ஆம் தேதி கூடவுள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழுவும் முதல் வேலையாக இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் இன்றைய நிர்வாகத்தை முழுமையாக நீக்க வேண்டும்.

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த முன்னாள் வீரர்களைக் கொண்ட தற்காலிக அமைப்பை ஏற்படுத்திட வேண்டும். அதுவே இந்திய ஹாக்கியை காத்திடும் உடனடி நடவடிக்கையாக இருக்கும்.

இதனை தமிழ்.வெப்துனியா.காம் கடந்த மார்ச் மாதத்தில், இந்திய ஹாக்கியின் வீழ்ச்சிக்குக் காரணம்” எனும் தலைப்பில் வெளியிட்ட 5 கட்டுரைகளில் தெளிவாக கூறியிருந்தது. இந்திய ஹாக்கியுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் வீரர்களிடம் ஆழமாக உரையாடி அறிந்து கொண்ட விவரங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தக் கட்டுரையிலேயே, இவர்கள் இருவரின் நிர்வாகத்தின் கீழ் இந்திய ஹாக்கி சந்தித்த சரிவை தெளிவாக விளக்கியிருந்தோம்.

சிலியில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தோற்று ஒலிம்பிக் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இந்திய அணி இழந்த அந்த துக்கமான தருணத்தில், நமது ஹாக்கிக்கு ஏற்பட்ட வீழ்ச்சிக்கான காரணங்களை தெளிவாக விவாதித்திருந்தோம்.

அது மட்டுமின்றி, ஜோதிகுமரனின் ஊழல் வெளியான நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் எல்ஸ் வான் பிரீடா விரீஸ்மேன் கடிதமெழுதியுள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, இன்று வெடித்துள்ள இந்த விவகாரத்தை சாதகமான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்திய ஹாக்கியை இவர்களின் பிடியில் இருந்து மீட்டு உயிர்ப்பிக்க மத்திய விளையாட்டு அமைச்சகமும், இந்திய ஒலிம்பிக் சங்கமும் முன்வரவேண்டும்.

இதுவே ஹாக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பு.