எனது சகோதரா… நீங்கள் மிகவும் நேர்மையான மனிதர் - டிவில்லியர்ஸுக்கு கோஹ்லி ஆதரவு !

ஞாயிறு, 14 ஜூலை 2019 (12:08 IST)
டிவில்லியர்ஸின் ஓய்வு குறித்து இப்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக கோஹ்லி மற்றும் யுவ்ராஜ் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா அணி வழக்கம்போல இந்த ஆண்டும் சொதப்பி உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்த மோசமான ஆட்டத்துக்கு அந்த அணியின் சூப்பர்ஸ்டார் டிவில்லியர்ஸ் அணியில் இல்லாததும் ஒருக் காரணம் என அனைவரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆண்டு அதிர்ச்சியளிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது உலகக் கிரிக்கெட் ரசிகர்களிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் ஐபிஎல் உள்ளிட்ட பல டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதனால் அவர் மேல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் உலகக்கோப்பைப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட விரும்புவதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகரித்துவிட்டது என செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

இந்நிலையில் இது குறித்து டிவில்லியர்ஸ் முதல் முதலாக பதிலளித்துள்ளார். அதில் ‘நான் 2018ஆம் ஆண்டின் மே மாதமே எனது ஓய்வை அறிவித்துவிட்டேன். எனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவே நான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் நான் பணத்துக்காக செயல்படுவதாக என் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனது ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் அணி நிர்வாகத்துடன் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தேன். அணித்தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்னர் டூபிளசிஸிடம் நட்பு ரீதியாகப் பேசியபோது உலகக் கோப்பை அணியில் நான் ’தேவைப்பட்டால்’ விளையாடுவேன் எனக் கூறினேன். ஆனால் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இதைப் பொதுமைப்படுத்தி விட்டனர். ’ எனக் கூறி தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி ‘எனது சகோதரா, நான் அறிந்த மிகவும் நேர்மையான உறுதியான மனிதர் நீங்கள்தான். இப்போது உங்களுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை துரதிர்ஷ்டவசமாக உள்ளது. நாங்கள் (மனைவி அனுஷ்கா சர்மா) எப்போதுமே உங்களுக்கு ஆதரவாக இருப்போம். உங்கள் மீது நம்பிக்கை உள்ளது’ என ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதுபோல மற்றொரு இந்திய வீரரான யுவ்ராஜ் ‘நீங்கள் இல்லாமல் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையை வெல்வது சாத்தியமில்லை, சாதனையாளரே’ எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்