மலிங்காவின் விக்கெட் அரைசதம் – சாதனையாளர்கள் பட்டியலில் நான்காவது இடம் !

சனி, 22 ஜூன் 2019 (11:23 IST)
நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்று அசத்தியுள்ளது.

232 ரன்கள் எனும் சராசரிக்குக் கீழான இலக்கை வைத்துக்கொண்டு பலம் பொருந்திய இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 12 ஆண்டுகால சாதனையைத் தக்கவைத்துள்ளது இலங்கை அணி. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர்களில் லசித் மலிங்காவும் ஒருவர்.

10 ஓவர்கள் வீசிய அவர் 43 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து பேர்ஸ்டோ, வின்ஸ், ரூட் மற்றும் பட்லர் ஆகிய முக்கியப் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் எடுத்த சாதனையாளர்கள் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். மொத்தம் 26 போட்டிகள் விளையாடியுள்ள அவர் 51 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்தப்பட்டியலில் முதலிடத்தில் மெக்ராத்தும் (39 போட்டி, 71 விக்கெட்), இரண்டாவது இடத்தில் முரளிதரனும் (40 போட்டி 68 விக்கெட்) மூன்றாவது இடத்தில் வாசிம் அக்ரம் (38 போட்டிகள் 55 விக்கெட்) ஆகியோரும் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்