இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சிறப்பாக செயல்பட்டவர் தோனி. அவருக்கு பிறகு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார். ஆனால் தோனி அளவுக்கு சிறந்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டால் செயல்பட முடியவில்லை. ஒவ்வொரு ஆட்டத்திலும் ரிஷப் சொதப்பும்போதெல்லாம் ரசிகர்கள் ‘தோனி.. தோனி..’ என முழக்கமிடுவார்கள். அப்படி செய்வது மற்ற வீரர்களை தரகுறைவு செய்வது போல என்பதால் அப்படி கூச்சலிட வேண்டாம் என விராட் கோலி சைகை மூலம் காட்டுவார்.
ரிஷப் பண்டுக்கு காயம்பட்டிருப்பதால் கடந்த ஆட்டத்தில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ரிஷப் பண்டை விடவும் சிறப்பாகவே செயல்பட்டாலும் சில இடங்களில் ராகுலுமே தவறுகள் செய்தார். நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு குல்தீப் யாதவ் வீசிய பந்து மட்டையில் பட்டு விலகியபோது ராகுல் அதை தவறவிட்டார். உடனே ரசிகர்கள் பலர் ‘தோனி.. தோனி’ என கத்த தொடங்கினர். அந்த சத்தத்தை கேட்டு விராட் கோலி திரும்பி முறைத்ததும் ரசிகர்கள் பலர் அமைதியாகினர். பிறகு ‘ராகுல்.. ராகுல்..’ என உற்சாகப்படுத்துமாறு கோஷமிட தொடங்கினர்.