நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி படுமோசமாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் எடுத்திருந்தார்
பந்துவீச்சை பொருத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் ஆனியன் தேஷ் பாண்டே மூன்று விக்கெட்டுகளையும் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த நிலையில் 138 என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 15 ரன்களில் அவுட் ஆனாலும் கேப்டன் ருத்ராஜ் மிகவும் பொறுப்புடன் விளையாடி சிஎஸ்கே அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்
இந்த நிலையில் சிஎஸ்கே அணி 17.3வது ஓவரில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தபோது களத்தில் இருந்த தோனி நினைத்திருந்தால் இரண்டு ரன்களை எடுத்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு ரன் மட்டும் எடுத்து வின்னிங் ஷாட்டை ருத்ராஜ் அடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ருத்ராஜ் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கேவை வெற்றி பெற செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.