இந்தோனேசியாவின் யோக்யகர்தாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. பேட்மிண்டன் போட்டிகளில் சீன வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியின் போது சீனாவின் 17 வயதான ஜாங் ஜிஜீ ஜப்பானின் கசுமா கவானோவை எதிர்கொண்டு விளையாடினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 11 – 11 என்ற செட் கணக்கில் இருந்தபோது, ஜாங் ஜிஜி-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் விழுந்து துடித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உள்ளூர் நேரப்படி அன்று இரவு 11:20 மணிக்கு ஜாங் ஜிஜி உயிரிழந்ததாகவும், பேட்மிண்டன் உலகம் ஒரு திறமையான வீரரை இழந்துள்ளது என்றும் பேட்மிண்டன் ஆசியா மற்றும் இந்தோனேசியா பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது. ஜாங் ஜிஜி களத்தில் விழுந்த துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.