இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடந்து வருகிறது. இதில் முதல்நாளில் பேட் செய்த இந்திய அணி 233 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. இன்று பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியா மேலும் 11 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அதையடுத்து களமிறங்கிய ஆஸி அணியை மிரட்டும் விதமாக இந்திய பந்துவீச்சாளர்களும் பந்து வீசினர். இதனால் மளமளவென விக்கெட்கள் விழ ஆரம்பித்தன. அந்த அணியின் மார்னஸ் லபுஷேன் மற்றும் டிம் பெய்ன் மட்டுமே சிறிது நேரம் தாக்குப் பிடிக்க முடிந்தது. அவர்கள் முறையே 47 மற்றும் 73 ரன்கள் சேர்த்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க ஆஸி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் அதிகபட்சமாகக் கைப்பற்றினர். பூம்ரா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி சற்று முன்பு வரை 9 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. பிருத்வி ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மயங்க் அகர்வாலும், பூம்ராவும் களத்தில் உள்ளனர்.