இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திற்கு முன்னும், பின்னும் இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பிற வீரர்கள் பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்ததால், இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
இந்த சம்பவம் குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அக்கோரிக்கையை ஐ.சி.சி. முதலில் நிராகரித்த போதும், பாகிஸ்தான் அணி போட்டியில் இருந்து விலகக்கூடும் என தகவல்கள் வெளியானதால், ஐ.சி.சி. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து விலகியிருந்தால், சுமார் 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். எனவே, ஒரு சமரச முயற்சியாக, பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்தும் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.