ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராகவும், மிகச்சிறந்த பேட்ஸ்மென் என்று பண்டிதர்களால் பாராட்டப்பட்டவருமான விக்டோரியா அணி வீரர் பிராட் ஹாட்ஜ் முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
எனினும் அவர் தொடர்ந்து விக்டோரியாவிற்காக ஒரு நாள், 20-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.
கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி கிளப் மட்ட 20-20 கிரிக்கெட்டில் இன்று அதிக ரன்களைக் குவித்த ஒரே வீரர் பிராட் ஹாட்ஜ்தான்.
பேட்டிங்கில், தற்போது ஆஸ்ட்ரேலிய அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களைக் காட்டிலும், இதற்கு முன்னால் இருந்த வீரர்களில் பலரைக் காட்டிலும், மிகச்சிறந்த வீரரான பிராட் ஹாட்ஜ் பல நல்ல இன்னிங்ஸ்களை உள் நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய போதும் 2005ஆம் ஆண்டு 32வது வயதில் தன் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வாய்ப்பை பெற்றார்.
இவருக்கென்று தனி இடம் அளிக்கப்படவில்லை. கேப்டன் ரிக்கி பாண்டிங் அணியில் இல்லையெனில் இவரை அணியில் தேர்வு செய்வது வழக்கம்.
மொத்தம் 6 டெஸ்ட் போட்டிகளையே விளையாடிய இந்த அருந்திறமையாளரான ஹாட்ஜ் 503 ரன்களை 55.88 என்ற சராசரியில் குவித்தார் என்றால் திறமையை நாம் பார்த்துக் கொள்ளலாம். இதில் ஒரு சதம், 2 அரை சதம்.
மிகக்குறுகிய, அநீதி இழைக்கப்பட்ட பிராட்ஜின் கிரிக்கெட் வாழ்வில், உலகின் அதிவேக ஆட்டக்களமான பெர்த் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் குலை நடுங்கும் வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அவர் 203 ரன்களை விளாசினார். அந்த இன்னிங்சில் அவர் நாட் அவுட் என்பது குறிப்பிடத்தகக்து.
மொத்தம் 222 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற பிராட் ஹாட்ஜ் அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கையான 302 நாட் அவுட்டுடன் 17,012 ரன்களை குவித்துள்ளார். சராசரி 48.88. இதில் 53 சதங்களையும், 63 அரைசதங்களையும் எடுத்துள்ளார். அரைச் சதங்களை சீராக சதங்களாக பிராட் ஹாட்ஜ் மாற்றியிருக்கும் சர்வதேச கிரிக்கெட் தரத்தை இந்த புள்ளி விவரம் எடுத்துரைக்கிறது.
ஆனால் ஆஸ்ட்ரேலியாவிற்கு விளையாட இது போதாது. அதனால்தான் இவரை விட திறமை குறைவான டேமியன் மார்டின், மைக்கேல் கிளார்க், ஆண்ட்ரூ சைமன்ண்ட்ஸ், தற்போது ஷேன் வாட்சன், மார்கஸ் நார்த், (இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...,) போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு தொடர்ந்து அளிக்கப்பட்டு இவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
2005- 06ஆம் ஆண்டில் இவரை ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கிய போது இவரது சராசரி 58.42.
2006- 07ஆம் ஆண்டு உள் நாட்டு புரா கோப்பை கிரிக்கெட்டில் இவரது சராசரி 85 ரன்கள் உடனேயே இவர் ஆஸ்ட்ரேலிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இவர் அடித்த ரன்களுக்காக அல்ல, ரிக்கி பாண்டிங் காயமடைந்தார் என்பதற்காக.
நியூஸீலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 99 வெற்றி ரன்களையும், 97 வெற்றி ரன்களையும் இவர் ரிக்கி பாண்டிங் இல்லாத போது ஆஸ்ட்ரேலியாவிற்காக எடுத்துள்ளார்.
அதன் பிறகு 2007 உலகக் கோப்பையில் இவர் தேர்வு செய்யப்பட்டார். ஹாலந்து அணிக்கு எதிராக 89 பந்துகளில் 123 ரன்கள் எடுத்தார். ஆனால் அதுதான் அவர் அந்த உலகக் கோப்பையில் கடைசியாக மட்டையை தொட்டது. இறுதி போட்டி வரை பெவிலியன் பார்வையாளர்தான் ஹாட்ஜ்.
வேகப்பந்து வீச்சிற்கு எதிராக இவர் பலவீனமானவர் என்று தப்பும் தவறுமாக சதிகார முத்திரை குத்தப்பட்டு இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 60 ரன்களுக்கும் மேல் சராசரி ஆனால் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் கூட அவர் தேர்வு செய்யப்படவில்லை.
1993- 94ஆம் ஆண்டு விக்டோரியா அணிக்காக விளையாடத் துவங்கினார் பிராட் ஹாட்ஜ், அன்றிலிருந்து இன்று வரை எந்த சீசனிலும் அவரது சராசரி 60க்கு கீழ் இறங்கியதில்லை.
இப்போது ஓய்வு அறிவித்துள்ள சீசனிலும் அவரது சராசரி 102 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பலமுறை வாய்ப்பிற்காக காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போய் தற்போது ஓய்வு அறிவித்துள்ளார் பிராட் ஹாட்ஜ்.
விக்டோரியா வீரர்களை ஆஸ்ட்ரேலிய அணித் தேர்வுக் குழுவினர் புறக்கணிக்கின்றனர் என்ற அதிரடி கருத்து ஒன்றையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தார் பிராட் ஹாட்ஜ். நியூ சவுத் வேல்ஸ் அணியினர் ஆஸ்ட்ரேலிய அணியில் அதிகம் இடம்பெறுவது ஸ்டீவ் வாஹ் தலைமைப் பொறுப்பு ஏற்ற பிறகே நிறைவேறியது.
அந்தக் காலக்கட்டத்தில்தான் விக்டோரிய துவேஷம் வளர்ந்ததாகவும் பிராட் ஹாட்ஜ் அதிரடியாகக் கூறிவந்தார்.
இப்போது ஓய்வு அறிவிப்பிற்கான காரணமாக , தனக்கு அளிக்கப்படாத டெஸ்ட் வாய்ப்பைத்தான் கூறியுள்ளார் பிராட் ஹாட்ஜ்.
"டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வாய்ப்பளிக்கப்படாததுதான் காரணம் என்று கருதுகிறேன், எப்போதுமே ரிக்கி பாண்டிங் விளையாட முடியவில்லை என்றால் அவர் இடத்தை நிரப்புவதுதான் என் வேலை." என்று கூறியுள்ளார் ஹாட்ஜ்.
"நான் ஏன் கிரிக்கெட் ஆட்டத்தை தொடரவேண்டும் என்பதற்கான காரணத்தை கண்டுபிடிக்க போராடினேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவே விருப்பம், ஆனால் இப்போது மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பளிக்கப்படலாம் ஆனால், நான் 30 அல்லது 35 டெஸ்ட் போட்டிகளை விளையாட விருப்பம் கொண்டுள்ளேன், அது இனிமேல் நடக்காது. எனவே ஓய்வு பெறுவதுதான் ஒரே வழி." என்றார் ஹாட்ஜ்.
திறமையான் வீரர் ஒருவரின் கிரிக்கெட் வாழ்வு முதல் தர கிரிக்கெட்டுடன் முடிவடைவது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் தேர்வுக் கொள்கைக்கு ஏற்பட்டுள்ள இழிவாகவே பார்க்கப்படவேண்டும்.
இந்தியாவிலும் இது போன்று நடந்துள்ளது. ராஜிந்தர் கோயெல் என்ற சுழற்பந்து வீச்சாளர் முதன் முதலில் உள் நாட்டு கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தவர், ஆனால் அவரை யாராவது டெஸ்ட் போட்டிகளில் பார்த்திருக்கிறோமா? இல்லை.
பத்மாகர் ஷிவால்கர் என்ற மும்பை அணியின் லெக் ஸ்பின்னர், ஹைதராபாத் ஆல்ரவுண்டர் நரசிம்ம ராவ், கர்நாடகாவின் மிகச்சிறந்த இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பட். பந்துகளை முரளிதரன் போல் திருப்பும் ஹைதராபாதின் ஆஃப் ஸ்பின்னர் கன்வல்ஜீத் சிங், கர்நாடகாவிற்காக அதிக ரன்களைக் குவித்த சுதாகர் ராவ், தமிழக வீரர் டி.இ.ஸ்ரீனிவாசன், மும்பைக்காக ரன்களை குவித்த அஷோக் மன்கட், மிகச் சமீபமாக அமோல் மஜூம்தார், மைக்கேல் டால்வி, ரமேஷ் டாண்டன், கோபால் போஸ், பஞ்சாபின் குருசரண் சிங்,
மும்பை துவக்க வீரர் குலாம் பார்க்கர், ரஜிந்தர் சிங் ஹான்ஸ் என்ற சுழற்பந்து வீச்சாளர், கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் டொட்டா கணேஷ் (இவர் மேற்கிந்ய அணிக்கு எதிராக மேற்கிந்திய களத்தில் ஒரு இன்னிங்சில் 5/31 என்று விக்கெட் எடுத்தவர், இந்த விக்கெட்டில் லாராவின் விக்கெட்டும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) பட்டியலை இன்னும் கூட நீட்டிக்க முடியும்.... ஆகியோரது கிரிக்கெட் வாழ்வும் சர்வதேச கிரிக்கெட்டையே விளையாடமலோ அல்லது சர்வதேச கிரிக்கெட் வரை சென்று ஓரிரு போட்டிகளில் விளையாடிய பிறகு வாய்ப்பு மறுக்கப்பட்டோ ஒழிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு புறம் உள் நாட்டு கிரிக்கெட்டில் இரண்டு சதங்களை எடுத்தாலே போதும் உடனடியாக சர்வதேச கிரிக்கெட்டிற்குள் அந்த வீரரை தேர்வு செய்வது. அல்லது பிராட் ஹாட்ஜ் போன்று 17,000 ரன்களை அடித்திருந்தாலும் டெஸ்ட் வாய்ப்புகள் அளிக்கப்படாமல் ஒழிக்கப்படுவது ஆகிய இரண்டும் கிரிக்கெட்டின் வினோத துருவ முரண்களாகும்.
ஆனால் பிராட் ஹாட்ஜ் என்னதான் வெளியில் விக்டோரியா அணிக்காக தான் விளையாடிய காலங்கள்,
webdunia photo
FILE
ஆஸ்ட்ரேலியாவிற்காக 6 டெஸ்டில் பங்கேற்ற பெரும் "பேறு" என்றெல்லாம் பேசினாலும், உள் மனதில் தனது இந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு எதற்காக வாழப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறாமல் போன ஒரு வெற்றுக் காலக் கட்டமாக போனதை நினைத்து வருந்துவதும் நிகழும்.
அவர் இது போன்று வருந்தும் கணங்களுக்காக ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணித் தேர்வுக் குழு தனது அற ரீதியான பொறுப்பை ஏற்கவேண்டும். அது ஹாட்ஜிற்கு செய்த நியாயமாகாது என்றாலும், ஒரு மகா வீரருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான குற்ற உணர்வின் வெளிப்பாடாக அமையும்.
மிகச்சிறந்த பேட்ஸ்மென் ஒருவரின் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வை ஆஸ்ட்ரேலிய கேப்டன்களும், தேர்வுக் குழுவினரும் இருட்டடிப்பு செய்துள்ளனர்.
பிராட் ஹாட்ஜிற்கு இழைக்கப்பட்ட அநீதி இனி எந்த கிரிக்கெட் வீரருக்கும் இழைக்கப்படக்கூடாது என்பதில் எந்த ஒரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் உறுதியுடனும், விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம்.