நேர்மையுடன் பழி தீர்த்தது இந்தியா!

வியாழன், 13 நவம்பர் 2008 (10:49 IST)
webdunia photoFILE
கடந்த ஆஸ்ட்ரேலிய தொடரில் நடந்த நடுவர் மோசடிகள் உள்ளிட்ட பல மோசடிகளையும், ஆஸ்ட்ரேலிய அணியின் நேர்மையற்ற நடத்தையும், வெற்றியையும் பின்னுக்குத் தள்ளி, நேர்மையுடன் விளையாடி வெற்றிகளைப் பெற்று தொடரை வென்று பார்டர் - கவாஸ்கர் டிராஃபியை இந்தியாவிற்கு பறித்துத் தந்தது கும்ளே-தோனி தலைமை!

அனைத்திற்கும் மேலாக ஆஸ்ட்ரேலியர்கள் தொடர்ந்து வெறுத்த கங்கூலி ஓய்வு பெறும் தொடரில் ஆஸ்ட்ரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்தது இந்த வெற்றியின் சிறப்பம்சமாகும். மேலும் அவர்கள் தொடர்ந்து வசை பாடிவரும், வெறுப்பை உமிழ்ந்து வரும் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து இருப்பது ஆகியவை இந்தத் தொடரின் மிக முக்கியமான அம்சமாகும்.

இந்த தொடர் துவங்கும் முன் நாம் குறிப்பிட்டிருந்தோம், இந்திய செய்தி ஊடகங்கள், விளையாட்டு வர்ணனை நிருபர்கள் அனைவரும் ஆஸ்ட்ரேலிய அணியை "இன்வின்சிபிள்ஸ்" (invincible) அதாவது வெல்லமுடியாதவர்கள் என்றே குறிப்பிட்டனர். ஆஸ்ட்ரேலிய ஊடகங்களும் தொடர்ந்து தங்கள் அணியினரை "இன்வின்சிபிள்" என்றே நம்பி எழுதி வந்தன.

அதுவும் பெங்களூர் டெஸ்டில் இந்தியா டிரா செய்தவுடன் ஆஸ்ட்ரேலிய ஆதிக்கம் தொடர்கிறது என்றும், வெளிச்சமின்மையை காரணம் காட்டி கங்கூலி டிரா செய்ய வைத்தார் என்றும் தப்பும் தவறுமாக உளறிக் கொட்டி வந்ததை ஆஸ்ட்ரேலிய ஊடகங்களை கவனமாக பின் தொடர்ந்து வாசித்து வரும் எந்த ஒருவரும் அறிவார்கள்.

ஆனால் நடந்தது என்ன? பெங்களூரில் ஆதிக்கம் செலுத்தியதாக ஆஸ்ட்ரேலிய அணியே தங்களை நம்பப் போக மொஹாலியில் ஒரு மிகப்பெரிய தொல்வியும், இன்று நாக்பூரில் ஒரு மிகப்பெரிய உதையையும் தழுவியது.

இந்த 4 டெஸ்ட் போட்டிகளுக்குமே இடப்பட்ட களம் பேட்டிங்கிற்கு சாதகமான களங்களே. இதில் ஆஸ்ட்ரேலியா தோற்றுள்ளது என்றால், எல்லோரும் குறிப்பிடுவது போல் பலவீனமான ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சு மட்டும் காரணமல்ல, அவர்களது பேட்டிங்கும் படு தோல்வியை சந்தித்துள்ளதையும் இப்படிப்பட்ட ஆட்டக்களங்களிலும் நமது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என்பதையும் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.

சிட்னி டெஸ்ட் மோசடி வெற்றிக்கு பிறகு இந்தியாவுடன் விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா 3 டெஸ்ட் போட்டிகளில் படு மோசமாக தோல்வி தழுவியுள்ளது. 3 போட்டிகளில் ஆஸ்ட்ரேலியா எதிர்மறையாக விளையாடி டிரா செய்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஸ்டீவ் வாஹ் தலைமை ஏற்றவுடன் ஆஸ்ட்ரேலிய ஆட்டக்களங்கள் அவர்களது பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டது ஏனெனில் எந்த ஆட்டக்களத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லும் இரண்டு மேதைகள் அந்த அணியில் இருந்தனர். கிளென் மெக்ரா, ஷேன் வார்ண் ஆகியோர் அத்தகைய வெற்றிகளை அவர்களுக்கு பெற்றுத் தந்தனர். பேட்டிங்கிலும் ஹெய்டன், லாங்கர், பாண்டிங், மார்டின், ஆடம் கில்கிறிஸ்ட், மைக் ஹஸ்ஸி, ஸ்டீவ் வாஹ் போன்றவர்கள் இருந்தனர்.

ஆனால் குறைந்த இடைவெளியில் திடீரென முன்னணி வீரர்கள் ஓய்வு பெற்றதும் புதிய பந்து வீச்சாளர்களை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. உள் நாட்டு கிரிக்கெட்டிலும் ஆட்டக்களங்கள் பேட்டிங் ஆட்டக்களமாக மாறியதால் கிளென் மெக்ராவிற்கு பிறகு ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளரை ஆஸ்ட்ரேலியா உருவாக்க முடியாமல் போயுள்ளது. வார்னின் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது என்பதை நாம் ஒப்புக் கொள்வோம். ஆனால் ஒரு நல்ல சுழற்பந்து வீச்சாளரைக்கூட உருவாக்க முடியாமல் போயுள்ளது. மெக்கைன், காஸ்பான் போன்றவர்களுக்கும் வயது 33ற்கும் மேல் ஆகிவிட்டது.

உடனே ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் ஆஸ்ட்ரேலிய அணி மாற்றத்தின் காலக்கட்டத்தில் உள்ளது என்று மழுப்பி வருகிறது. மாறும் காலக்கட்டத்தில் உள்ளது என்றால் "பெஞ்ச் ஸ்ட்ரெங்க்த்" (Bench Strength) தங்களுக்கு அதிகமாக உள்ளது என்று மார்தட்டுவது ஏன்? "பெஞ்ச் ஸ்ட்ரெங்க்த்" இருந்தால் ஏன் கிளென் மெக்ரா போன்று ஒருவரை இன்று உருவாக்க முடியவில்லை. பிரட் லீ இந்தத் தொடரில் பந்து வீசியதை பார்க்கும்போது ஆஸ்ட்ரேலிய அணியில் அவரது இடம் இன்னும் சொற்ப காலங்களுக்கே நீடிக்கும் என்றுதான் தெரிகிறது.

சிட்னி டெஸ்டில் நடந்த மோசடி வெற்றியை தவிர்த்து விட்டு அந்த ஊடகங்களும், ஓய்வு பெற்ற வீரரான "போலி நேர்மைத் திலகமுமான" ஆடம் கில்கிறிஸ்டும் இன்னமும் ஹர்பஜன் நிறவெறிப் புகார் என்ற பிணத்தை சுமந்து திரிந்து வருகிறார்கள். பாண்டிங்கும் இதில் இப்போது மூக்கை நுழைத்து, இந்திய மூத்த வீரர் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு நிறவெறிப் புகாரை கைவிடுமாறு கூறினார் என்று தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.

அந்த மோசடி வெற்றிக்கு பதிலளிக்குமாறு இந்தியா தற்போது மிகவும் நேர்மையாக வென்று தொடரை கைப்பற்றியதோடு ஆஸ்ட்ரேலிய அணிக்கு பாடம் கற்பித்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணியினர் கிரிக்கெட்டை ஆடுவதை விடுத்து பேசாமல் ஏதாவது புத்தகம் எழுதி பிழைக்கலாம், அது அவர்களுக்கு நன்றாக வருகிறது. அந்த புத்தகத்தை விற்க ஆஸ்ட்ரேலிய ஊடகங்களும் விக்ரமாதித்திய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தொடரிலும் கூட ஜாகீர் கானை கோபமூட்டி அவருக்கு அபராதம் வாங்கித் தந்தது, கவுதம் கம்பீரை கோபமூட்டி அவரை ஒரு டெஸ்ட் போட்டிக்கு தடை செய்யுமாறு செய்தது. மாறாக இந்திய அணியினர் இது போன்ற பள்ளிச் சிறார்கள் செய்யும் எந்தக் காரியத்தைச் செய்யவில்லை.

நாக்பூர் டெஸ்டில் 3-ம் நாள் ஆட்டத்தின் போது தோனி ஆஸ்ட்ரேலிய பேட்ஸ்மென்களுக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தினார். அதாவது ரன்களை நாங்கள் அவ்வளவு சுலபத்தில் கொடுக்கப் போவதில்லை, நீங்கள் முடிந்தால் ரன் எடுங்கள் என்ற நெருக்கடியை ஏற்படுத்தினார். அந்த சவாலை சந்திக்க திராணியற்று முதல் 25 ஓவர்களில் வெறும் 41 ரன்களையும், அடுத்த 25 ஓவர்களில் வெறும் 49 ரன்களையும் எடுத்ததோடு விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் இந்தியா முன்னிலை பெற்றது.

அதற்கு மறு நாள் ஆஸ்ட்ரேலிய ஊடகங்களை பார்த்திருக்க வேண்டுமே! தோனியின் எதிர்மறை உத்தி, டெஸ்ட் கிரிக்கெட்டை சாகடித்து விட்டனர் இந்திய அணியினர், மைதானத்தில் கும்பல் இல்லை என்றவாறு தப்பும் தவறுமாக எழுதியது. இறுதியில் என்ன ஆனது? ஆஸ்ட்ரேலியா தோல்வியைத் தழுவியது. இதே போன்ற ஒரு களத் தடுப்பு உத்தியை அதாவது ஆஃப் திசையில் 8 வீரர்களை நிறுத்தி நம் விரேந்திர சேவாகிற்கு அவர்களால் பந்து வீசி கட்டுப்படுத்த முடிந்திருக்குமா என்பதுதான் கேள்வி.

சவாலை சந்திக்காத எந்த ஒரு ஆட்டத்தையும் நாங்கள் விரும்ப மாட்டோம் என்று ஆஸ்ட்ரேலிய அணித்தலைவர்கள் மார் தட்டி வந்தது என்ன ஆயிற்று? மொஹாலியிலும், நாக்பூரிலும் தோனி ஏற்படுத்திய நெருக்கடிக்கும் சவாலுக்கும் அவர்கள் பதில் தோல்வியாகத்தான் இருந்தது.

ஊடகங்களை வைத்து மார்க்கெட்டிங் செய்வது, ஊடகங்களில் மார்தட்டுவது, மைதானங்களில் எதிரணி வீரர்களை வசை பாடுவது, போட்டிக்கு முன்பு இதைச் செய்வோம் அதைச் செய்வோம் என்று வீரவசனங்கள் பேசுவது இவற்றையெல்லாம் தவிர்த்து ஆஸ்ட்ரேலியா வரும் தொடர்களில் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

எதிரணி வீரர்களின் திறமையை மதிக்காமல் ஆதிக்க மனோபாவத்துடன் இருந்த காலங்க்கள் முடிந்து விட்டது. கங்கூலியை தொடர்ந்து தோனி ஆஸ்ட்ரேலியாவிற்கு இரண்டு முறை பாடங்களை கற்பித்துள்ளார். முதலில் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இம்முறை டெஸ்ட் போட்டியில் நேர்மையாக விளையாடி தொடரை வென்று பாடம் கற்பித்துள்ளார்.

பாடங்களிலிருந்து சாரத்தை கற்றுக் கொள்ளுமா ஆஸ்ட்ரேலிய அணி என்பதை பொறுத்திரும்து பார்ப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்