தோனியின் தலைமையில் மற்றுமொரு மகுடம்!

செவ்வாய், 7 ஏப்ரல் 2009 (19:26 IST)
webdunia photoFILE
இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ளது தோனி தலைமையிலான இந்திய அணி.

முதல் முறையாக இந்தியாவிற்கு வெளியே - அதுவும் இந்திய துணைக் கண்டத்திற்கு அப்பால் - டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை ஒருசேர வென்று ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்திய அணி.

2000ஆம் ஆண்டு கங்கூலி தலைமையின் கீழும், பொறுப்புள்ள விஷயதாரமுள்ள பயிற்சியாளரான ஜான் ரைட்டின் பயிற்சியிலும் வளர்த்தெடுக்கப்பட்ட இந்திய அணி இடையில் புகுந்த நாசகார சக்திகளையும் மீறி இன்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் உலகில் ஒரு அசைக்க முடியாத உறுதியான அணியாக வளர்ந்துள்ளது.

இந்த தொடரைப் பொறுத்த மட்டில் வெற்றி என்பது எப்போதும் இந்தியாவிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனால் வெற்றி பெற்ற விதம்தான் 2000ஆம் ஆண்டிற்கு முந்தைய இந்திய அணியின் ஆட்டத்தில் நாம் காணாதது. அதாவது நியூஸீலாந்து அணியை அந்நாட்டு மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தி, இளம் நியூஸீலாந்து அணியின் தன்னம்பிக்கைக்கு ஊறு விளைவித்து விட்டது.

அயல் நாட்டு மண்ணில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வரலாற்றை பார்த்தோமானால் 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி ருசித்து வரும் வெற்றி நமக்கு ஒரு மிகப்பெரிய விஷயமாக தெரிய வரும்.

1932ஆம் ஆண்டு இந்தியா முதன் முதலில் அதிகாரபூர்வ டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அந்த ஆண்டிலிருந்து 1959ஆம் ஆண்டு வரை அயல் நாட்டு மைதானங்களில் இந்தியா 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளது. இதில் 17 போட்டிகளில் தோல்வியடைந்து 14 போட்டிகளில் போராடி டிரா செய்துள்ளது.

27 ஆண்டுகளில் அயல் நாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியைக் கூட இந்திய அணியால் சாதிக்க முடியவில்லை.

1960ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரையிலான அயல் நாட்டு பயண டெஸ்ட் புள்ளி விவரங்களை ஆராய்ந்தால், இந்த 19 ஆண்டுகளில் 46 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள இந்திய அணி 9 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 25 போட்டிகளில் தோல்வி தழுவி, 12 டெஸ்ட் போட்டிகளில் டிரா செய்துள்ளது.

ஆகவே 1932 முதல் 1979 வரையிலான 77 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றது வெறும் 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே.

1980 முதல் 1999ஆம் ஆண்டு வரை நம் அணி 78 டெஸ்ட் போட்டிகளை அயல் நாட்டில் விளையாடியது, இதில் 4 டெஸ்ட் போட்டிகளிலேயே வென்றுள்ளது. 27இல் தோல்வியடைந்து 47 டெஸ்ட் போட்டிகளில் டிரா செய்துள்ளது.

கங்கூலி பொறுப்பேற்ற பிறகு, அதாவது 2000ஆம் ஆண்டிற்கு பிறகான இந்த 9 ஆண்டுகளில் இந்தியா அயல் நாட்டு மண்ணில் 57 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 19 டெ‌ஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று, 19 போட்டிகளில் தோல்வியைத் தழுவி 18 டெஸ்ட் போட்டிகளில் டிரா செய்துள்ளது.

இந்த 9 ஆண்டுகளில் அயல் நாட்டு மைதானங்களில் பெற்ற வெற்றியின் எண்ணிக்கை 19. ஆனால் 1931ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையிலான மொத்த வெற்றிகளோ 13தான்.

webdunia photoFILE
எனவே 67 ஆண்டுகால வரலாற்றில் சாதிக்க முடியாததை இந்த 9 ஆண்டுகளில் இந்தியா சாதித்ததற்கான புறக்காரணங்கள் பலவாறாக இருக்கலாம். ஆனால் நாம் பார்க்க வேண்டியது கங்கூலி, கும்ளே, அதன் பிறகு தற்போது தோனி ஆகியோரது தலைமைகளில் அடைந்த மாபெரும் வெற்றிகளே.

அதே போல் 1980ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரையிலும் கூட அயல் நாட்டு மண்ணில் இந்தியா பெற்ற 4 வெற்றிகளுக்கும் காரணமானவர் கபில் தேவ் என்ற ஒரு அரிய சக்திதான். 1989ஆம் ஆண்டு முதல் வளர்ந்து இன்று பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள சச்சின் டெண்டுல்கரும் ஒருவிதத்தில் சீரிய பங்காற்றியுள்ளார் என்று கூறலாம்.

ஆனால், 2005ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இந்திய கிரிக்கெட்டை பரிசுத்தமாக்கி அதன் பாவங்களை கழுவி வெற்றி எனும் பொன்னுலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதான போலி உறுதி மொழிகளுடன் வந்த கௌ பாய் மீட்பர் கிரெக் சாப்பலின் அத்தியாயம் மட்டும் இதில் இடம்பெறவில்லையெனில் இந்த வெற்றிகளும் இந்த உறுதி மனோபாவமும் முன்னமேயே கூட இந்திய அணி பெற்றிருக்கக் கூடும். போகட்டும்... என்று விட்டு விடுவதுதான் இந்திய மனோபாவம்.

தோனி தலைமையின் கீழ் நடந்த சில முக்கிய உள் நிகழ்வுகளை நாம் இங்கு குறிப்பிடுவது அவசியம். பேட்டிங்கை பொறுத்த வரை பேட்ஸ்மென்கள் அவரவர்களுக்கு சாதகமாக, இயல்பாக வரும் ஆட்டத்தை கடைபிடிக்க (அது எந்த சூழ் நிலையாக இருந்தாலும்) தோனி வலியுறுத்தினார். அவரது இந்த முடிவிற்கு பயிற்சியாளர்கள் உள்ளிட்ட மற்ற அனைவரின் ஏகோபித்த ஆதரவு தோனிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.

webdunia photoFILE
பந்து வீச்சை எடுத்துக் கொண்டால், கங்கூலி தலைமையின் கீழ் ஒரு சக்தியாக உருவான ஜாகீர் கானிற்கு சில புதிய பொறுப்புகளை வழங்கினார் தோனி. இந்தியா ஃபீல்டிங் செய்யும்போது பந்து வீச்சுப் பிரிவின் கேப்டனாக ஜாகீர் கான் செயல்பட்டார் என்பது நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய ஒரு புதிய உத்தி. அவருக்கு இந்த பொறுப்பை அளித்தவர் தோனி. இஷாந்த் ஷர்மா பந்து வீசினாலும், முனாஃப் படேல் பந்து வீசினாலும் கள அமைப்பு ஜாகீர் கான் அமைப்பதுதான்.

அவரது உத்தி பலனளிக்கவில்லையெனில் தோனி சிறிது நேரம் அந்த பொறுப்புகளை கவனிப்பார். அதிலும் வெற்றி கிட்டவில்லையெனில் மூத்த வீரர்களான சேவாக் அல்லது சச்சின், லக்ஷ்மண் என்று அனைவரையும் ஒரு குட்டி கேப்டனாகவே தோனி பயன்படுத்தினார். ஹர்பஜன் சிங்கிற்கு அவர் அளித்து வரும் முழு சுதந்திரம் அயல் நாட்டு மண்ணில் அவர் தற்போது வீசி வரும் பந்து வீச்சில் தெரிகிறது.

இலங்கை சுழற்பந்து மேதை முத்தையா முரளிதரனுக்கு பிறகு அதே அளவு பேட்ஸ்மென்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்றால் அது ஹர்பஜன் சிங்தான் என்பதை நாம் உறுதியாக கூற முடியும். மற்ற அணிகளில் சுழற்பந்து வீச்சாளர்களின் பணி ரன்களை கட்டுப்படுத்துவதாகவே இருந்து வருவதையும் நாம் பார்க்கிறோம்.

இரண்டாவது டெஸ்டில் தோனி இல்லை. அதனால் நமக்கு இழப்பு இல்லை என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

மூன்றாவது டெஸ்டிலும் கூட அவர் உடல் நிலையில் தேறியிருக்கவில்லை, முதுகு வலி குணமாகமலே விளையாட வந்துள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் நடந்தது என்ன? 6 கேட்ச்களை பிடித்து இந்திய சாதனையை நிகழ்த்தினார்.

190/5 என்று முதல் நாள் தேனீர் இடைவேளையின் போது சரியும் நிலையில் இருந்த இந்திய அணியை தனக்கே உரிய பேட்டிங்க் திறமையினால் மீட்டார். தேனீர் இடைவேளைக்கு பிறகு 35 ஓவர்களில் 185 ரன்களை இந்தியா குவித்தது. அதாவது முதல் 4 மணி நேர ஆட்டத்தில் எடுத்த ரன்களை விட அதிவேக ரன் குவிப்பு. இதுதான் இந்த டெஸ்ட் போட்டியை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றியது.

அதன் பிறகு காற்றின் வேகம் உந்த 10 அடிகள் ஓடி வந்து ஜாகீர் கான் மணிக்கு 140கி.மீ. வேகப்பந்துகளை சீரான முறையில் வீசி, நியூஸீலாந்து பேட்ஸ்மென்களால் அவர் பந்துகளை கடைசி வரை புரிந்து கொள்ள முடியாமல் திணறச் செய்தார்.

webdunia photoFILE
இந்தியாவின் இந்த சமீபத்திய வெற்றிகளுக்கு பின்னணியில் கௌதம் கம்பீரின் எழுச்சி ஒரு மிகப்பெரிய காரணமாகும். வசை பாடும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக ஒரு இரட்டை சதம், ஒரு சதம். தற்போது நியூஸீலாந்துக்கு எதிராக இரண்டு சதங்கள். 2வது டெஸ்ட் சதம் இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றியது என்றால், 3வது டெஸ்ட் சதம் வெற்றிக்கான சதம்தான். மழை வந்து குறுக்கிட்டு விட்டாலும் இந்தியா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதாக்வே நாம் கொள்ளலாம்.

ஆஸ்ட்ரேலிய தொடர் முடிந்தவுடன் ஆஸ்ட்ரேலிய முன்னாள் கேப்டனும் தற்போதைய சிறந்த வர்ணனையாளருமான இயன் சாப்பல் கணித்தது போல், விரேந்திர சேவாகும், கௌதம் கம்பீரும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு உலக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள் என்றார். அதற்கான அடித்தளத்தை நாம் இன்று பார்க்கிறோம்.

ஆஸ்ட்ரேலியாவில் எப்படி மேத்யூ ஹெய்டனும், ஜஸ்டின் லாங்கரும் ஸ்டீவ் வாஹ்வின் தலைமையின் கீழ் அவரது தொடர் வெற்றிகளை நிர்ணயித்தனரோ அது போன்று இன்றைய தினம் கம்பீரும் சேவாகும் விளையாடி வருகின்றனர்.

குறிப்பாக உடல் வாகு அடிப்படையில் ஹெய்டனுடன் எந்த விதத்திலும் ஒப்பிட முடியாத கம்பீர் கிரிக்கெட் ஆட்ட உத்திகளில், அணுகுமுறைகளில் பெரும்பாலும் ஹெய்டனும், லாங்கரும் கலந்த கலவையாக திகழ்கிறார். தான் ஆட்டமிழப்போம் என்ற கவலையில்லாமல் ஆடி வருகிறார். இது போன்ற தெளிவான மனோ நிலை இல்லையெனில் நியூஸீலாந்திற்கு முதன் முறையாக சென்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இவ்வளவு சிறப்பாக விளையாட முடியாது.

இதற்கு முன்னர் முதன் முதலில் நியூஸீலாந்து சென்ற தமிழக வீரர் வொக்கேரி ராமன், அதற்கு முன்பு சென்ற சுரேந்தர் அமர்நாத் ஆகியோர் கம்பீர் அளவுக்கு விளையாட முடியவில்லை. இந்திய அணி மட்டுமல்ல புதிய வீரர்களுடன் செல்லும் எந்த அணியாக இருந்தாலும் நியூஸீலாந்தில் சிறப்பாக விளையாடுவது என்பது கடினமே.

எனவே நாம் ஒப்பு நோக்கி பார்த்தோமானால் 1960ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்தியா அயல் நாட்டு மைதானங்களில் பெற்ற 9 வெற்றிகளின் பின்னால் இந்தியாவின் 4 சுழற்பந்து மேதைகளான பேடி, பிரசன்னா, சந்திர சேகர், வெங்கட்ராகவன் இருந்தனர்.

1980களுக்கு பிறகு உலகக் கோப்பை நாயகன் கபில் தேவ் அணிக்கு உத்வேகம் அளித்தார். ஆனால் இந்த காலக் கட்டங்களிலெல்லாம் ஏதோ விதத்தில் ஒரு தனிப்பட்ட வீரரின் திறமையே இந்திய அணியை அதன் குறைவான வெற்றிகளுக்கு இட்டு சென்றுள்ளது.

2000ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது கங்கூலி தலைமைக்கு பிறகான இந்திய அணி பெறும் வெற்றிகள்தான் பேட்டிங், ஃபீல்டிங், பந்து வீச்சு, திட்டமிடுதல். கள வியூகம் என்று ஒரு அணியாக திரண்டு வெற்றிகளை குவித்துள்ளது.

எனவே இப்போது நிபுணர்கள் கூறுவது போல் தோனிக்கு முன் இந்திய கிரிக்கெட் தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் என்று தோ.மு., தோ.பி. என்று பிரிப்பதை விட. கங்கூலிக்கு முன் இந்திய கிரிக்கெட், கங்கூலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அதாவது கி.பி. கி.மூ. போல் க.மு., க.பி. என்று பிரிப்பதே சாலப்பொருந்தும்.