தொடக்கமும் முடிவும் ஜாகீர்! இடையில் பாண்டிங்!

வியாழன், 9 அக்டோபர் 2008 (18:35 IST)
webdunia photoFILE
இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான பரபரபான டெஸ்ட் போட்டித் தொடர் இன்று தொடங்கியது. முதல் ஓவரில் ஜாகீர்கான், அபாய வீரர் மேத்யூ ஹெய்டனை வீழ்த்தி சிறப்பானத் துவக்கத்தை அளித்தார், பிறகு ஆட்டத்தின் கடைசி ஓவரில் கடந்த முறை பெங்களூரில் சதம் அடித்த மற்றுமொரு ஸ்டைலிஷ் வீரர் மைக்கேல் கிளார்க்கை வீழ்த்தி அபாரமாக முடித்தார். ஆனால் இடையில்...? ரிக்கி பாண்டிங் நமது ஊடகங்களின் நக்கல் நையாண்டிகளை தவிடு பொடியாக்கினார்.

ஆஸ்ட்ரேலியா, அவர்கள் மிகவும் பாராட்டும் துவக்க வீரர் ஃபில் ஜாக்கை உட்கார வைத்தது சரியே என்று கேடிச்சின் ஆட்டத்தை பார்த்த பிறகு திருப்தி அடைந்திருப்பார்கள் என்று கூறலாம்.

சுமார் 12 ஆண்டுகளாக இந்தியாவில் அவரது ஆட்டத்திறன் பற்றிய சந்தேகங்களை இன்று நிவர்த்தி செய்தார் பாண்டிங். ஹெய்டனை முதல் ஓவரிலேயே பறிகொடுத்த நிலையில், தன் சொந்த ரன் எண்ணிக்கையின் துர்க்கனவுகளுடன் களமிறங்கிய ரிக்கி பாண்டிங், நிலைமையை தன்னுடைய புதிய உத்திகளின் மூலம் சமாளித்தார்.

ஹர்பஜனையும் கும்ளேயையும் தேவைப்படும்போது பந்துகளுக்கேற்ப முன்னால் வந்தும், பின்னால் சென்றும், மட்டையை பேடிற்கு பின்னால் ஒளிய வைத்துக் கொண்டும் தனது உத்தியை மாற்றிக் கொண்டு ஆடினார். அவர் இன்று ஆடியது, சச்சின் டெண்டுல்கர் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் முறையை ஒத்திருந்தது.

webdunia photoFILE
துவக்கத்தில் இஷாந்த் ஷர்மா தனது இன் ஸ்விங்கர் மூலம் பாண்டிங்கை திணறடித்தார். ஆனால் இயன் சாப்பல் கூறியது போல் நிதானமாக ஆடிய பாண்டிங் உணவு இடைவேளை வரையும் தனது இயல்பான தாக்குதல் உணர்வை கட்டுப்படுத்திக் கொண்டு ஆடினார்.

ஹர்பஜன் சிங்கின் பந்துகளில் அவர் ஸ்ட்ரைக் ரேட் இன்று 100 சதவீதமாக இருந்தது. கும்ளே பந்து அரைகுறை பளபளப்புடன் இருந்த போது அதிகமாக பாண்டிங்கின் கால்காப்பில் போட்டு இலவச ரன்களை வழங்கினார். ஹர்பஜனும் பந்தை தூக்கி வீசாமல், நேராக வீசத் துவங்கினார். இதனால் பாண்டிங் நிலை சற்று எளிதாக ஆனது.

தேநீர் இடைவேளை வரை அவரும் சைமன் கேடிச்சும் இந்திய அணி வீரர்களை கவலைகொள்ள செய்தனர். நடுவர்களின் தீர்மானமற்ற குழப்பமான முடிவுகள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஹெட்யன் ஆடிய பந்து அவரது மட்டையில் படவில்லை, ஆனால் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

கேடிச் ஒரு முறை நேராக கால்காப்பில் வாங்கினார் அவுட் கொடுக்கப்படவில்லை. பாண்டிங் கும்ளேயிடம் கேட்ச் கொடுத்தார், ஆனால் நடுவர்கள் எந்தவித தீர்மானமுமின்றி நாட் அவுட் என்றனர். பாண்டிங் ஆட்டமிழந்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகி லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்து ஆனால் அவுட் கொடுக்கப்பட்டார்.

நடுவர்களின் தீர்மானமின்மையை பார்க்கும் பொழுது இந்திய பேட்ஸ்மென்கள் எச்சரிக்கையுடன் ஆடுவதே சிறந்தது என்று தோன்றுகிறது.

முதலிலும் இறுதியிலும் இந்தியாவிற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், இடையில் பாண்டிங் விளையாடிய ஆட்டம் இந்த தொடரில் பாண்டிங் மேலும் என்ன செய்யப்போகிறாரோ என்ற அச்சத்தை உருவாக்கியிருக்கும்.

மைக் ஹஸ்ஸி இன்னமும் விளையாடிக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க இந்திய ஃபீல்டர்களின் எச்சரிக்கையின்மையால்தான் என்று கூறலாம். ஆனால் இதெல்லாம் கிரிக்கெட் ஆட்டத்தின் ஒரு பகுதியே.

நாளை ஹஸ்ஸியை விரைவில் ஆட்டமிழக்கச் செய்யவேண்டும். ஏனெனில் அவர் பின் கள ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு திறமையாக ஆடுவதில் மிகச்சிறந்த பேட்ஸ்மென். ஒருமுறை மெக்ராவை வைத்துக் கொண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 80- 90 ரன்களை குவித்துள்ளார்.

அதன் பிறகு வாட்சன், விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மென் ஹேடின் ஆகியோரை வீழ்த்தி, பந்து வீச்சாளர்களையும் விரைவில் வீழ்த்தி 350 ரன்களுக்குள் ஆட்டமிழக்கச் செய்தால் இந்தியா மனோ பலத்துடன் களமிறங்கி விளையாட முடியும்.

இன்றைய தினம் ஆஸ்ட்ரேலியாவிற்கும், அதனை வழி நடத்தும் பாண்டிங்கிற்கும் சொந்தமானது என்றால் அது மிகையாகாது.