தூஸ்ரா பௌலிங்கை முடக்கும் ஆஸ்ட்ரேலியா!

திங்கள், 27 ஜூலை 2009 (17:41 IST)
'தூஸ்ரா' என்றாலே அது 'த்ரோ'வாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறிவரும் ஆஸ்ட்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் (ஷேன் வார்ன், கெவின் ராபர்ட்சன், ஆஷ்லே மாலெட்) ஆஸ்ட்ரேலிய ஆஃப்-ஸ்பின்னர்களுக்கு இதனை ஒரு போதும் நாங்கள் கற்றுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

webdunia photoWD
அதாவது ஐ.சி.சி. அனைத்து விதமான 'த்ரோ'வையும் அங்கீகரித்தாலேயன்றி இந்த 'தூஸ்ரா' என்ற பந்து வீச்சு முறையை ஆஸ்ட்ரேலிய இளம் வீச்சாளர்களுக்கு கற்றுக் கொடுக்கப்போவதில்லை என்று ஆஷ்லே மாலெட் கூறியுள்ளார். மேலும் தூஸ்ரா என்றாலே அது 'த்ரோ'வாக மட்டுமே இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

தூஸ்ரா என்றாலெ "த்ரோ த்ரோ" என்று கூச்சலிடுபவர்களுக்கு முதலில் ஒரு சாதாரண விஷயம் புரிவதில்லை. நாம் எந்த ஒரு பொருளையும் சுழற்றி வீசினாலோ அல்லது தூக்கி வீசினாலோ அந்தப் பொருளின் போக்கில் மாற்றம் இருக்கும், ஆனால் அதே பொருளை வேகமாக விட்டெறிந்தால் அதன் போக்கு ஒரு போதும் மாற்றமடையாது.

தூஸ்ராவில் பயன்படுத்தப்படும் கடைசி நேர மணிக்கட்டு செயல்பாட்டினால் அதனை த்ரோ என்று கூறிவருகின்றனர். அப்படி த்ரோ செய்தால் பந்தில் ஸ்பின்னர்களுக்கு கிடைக்கும் ஆர்க், ஃபிளைட், ட்ரிஃப்ட் போன்றவை கிடைக்காது போய்விடும்.

முதலில் நேராக கையை வைத்துக் கொண்டு செய்தால்தான் அது த்ரோ. பந்து வீச்சாளர்கள் செய்வது போல், அதுவும் சுழற்பந்து வீச்சாளர்கள் செய்வது போல் கையை சுழற்றி வீசும்போது த்ரோ என்பது உடல் ரீதியாகவே சாத்தியமில்லை.

கிரிக்கெட்டில் 'தூஸ்ரா' என்ற ஒரு சுழற்பந்து வீச்சு முறை தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஆஃப் ஸ்பின்னர்கள் பொதுவாக பந்துகளை, வீசும் திசையிலிருந்து நோக்கும்போது, இடது புறத்திலிருந்து வலது புறமாக திருப்புவார்கள். ஆஃப் ஸ்பின் போலவே 'கிரிப்' வைத்துக் கொண்டு வலது புறத்திலிருந்து இடது புறமாக திருப்பும் 'தூஸ்ரா' என்ற கலையை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் கண்டுபிடித்த போது உலக பேட்ஸ்மென்கள் அதிர்ந்தனர்.

அதாவது ஆஃப் ஸ்பின் போலவே பந்தை பிடித்துக் கொண்டு பந்தை அதன் வழக்கமான திசைக்கு எதிர் திசையில் திருப்புவது (லெக் ஸ்பின்ன்னாக) தூஸ்ராவாகும்.

webdunia photoWD
இதனைக் கண்டு பிடித்த சக்லைன் முஷ்டாக் தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடுவதில்லை என்றாலும் அதனை இலங்கை சுழற்பந்து மன்னன் முத்தையா முரளிதரன் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி பேட்ஸ்மென்களுக்கு மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் மேம்படுத்தினார்.

இதனைப் பின்பற்றி இந்தியாவின் ஹர்பஜன் சிங் அதிக விக்கெட்டுகளைக் குவித்து வருகிறார்.


இந்த புதிர்ப் பந்தை புரிந்து கொள்ள முடியாத ஆஸ்ட்ரேலிய, தென் ஆப்பிரிக்க, இங்கிலாந்து வீரர்கள் அதை வீசும் பந்து வீச்சாளர்களை 'ஏமாற்றுக்காரர்கள்' என்றும் 'சக்கர்கள்" (அதாவது பந்தை எறிபவர்கள்) என்றும் இழிவு படுத்தி வந்துள்ளனர்.

இன்று தனது மரபான ஆஃப்-ஸ்பின் பந்து வீச்சை வைத்துக் கொண்டு பந்தை திருப்பவும், விக்கெட்டுகளை வீழ்த்தவும் திணறி வரும் நேதன் ஹாரிட்ஸ் தூஸ்ராவை கற்றுக் கொள்ள கடும் முயற்சி செய்தும் கடைசி வரை அவர் அதில் வெற்றி பெற முடியவில்லை.

webdunia photoWD
ஆஸ்ட்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களின் இந்த முடிவை ஆஸ்ட்ரேலிய வீரர்களும், வாரியமும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஒரு மோசமான முடிவாகும். ஏற்கனவே ஷேன் வார்னுக்கு முன்னும் பின்னும் சில காலமாக சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்க முடியாமல் தத்தளித்து வரும் ஆஸ்ட்ரேலியா போன்ற அணிகளுக்கு இது போன்ற வறட்டுத் தனமான, பாசாங்குத் தனமான தடை உத்தரவுகள் தேவையற்ற ஒன்று.

முதன் முதலாக இந்த தூஸ்ரா பந்து வீச்சை மேற்கிந்திய தீவுகளின் ராமாதின் 1950ஆம் ஆண்டுகளில் வீசியதாக தெரிகிறது. ஆனால் அப்போதே இது "த்ரோ பால்" என்று சில வெள்ளை வீரர்கள் குற்றம்சாட்டியதாகவும் தெரிகிறது.

முதன் முதலில் இந்தியாவில் இந்த பந்து வீச்சை முயற்சி செய்து பார்த்தார் ராஜேஷ் சவான் என்ற ஆஃப்-ஸ்பின்னர். உடனே அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருக்கிறது என்று மார்க் டெய்லர் தலைமையிலான ஆஸ்ட்ரேலிய அணி குற்றம்சாட்டி அவர் பந்து வீச தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு முத்தையா முரளிதரனுக்கு ஆஸ்ட்ரேலிய நடுவர்கள் செய்த துரோகம் (இது அப்போதைய ஆஸ்ட்ரேலிய கேப்டன், அணி நிர்வாகத்தின் துண்டுதல் இல்லாமல் நடைபெற வாய்ப்பில்லை என்பது உறுதி) கிரிக்கெட் வரலாற்றின் மிக அசிங்கமான அத்தியாயமாகும்.

அதனையெல்லாம் கடந்து வந்து இன்று சுழற்பந்து உலகில் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார் முத்தையா முரளிதரன்.

அதேபோல் ஹர்பஜன் சிங்கின் தூஸ்ரா குறித்தும் லேசாக ஆஸ்ட்ரேலிய வீரர்கள் சந்தேகம் எழுப்ப, டிசம்பர் 2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், எல்லாம் தெரிந்த(!), ஆனால் பாரபட்ச ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட், ஹர்பஜனின் தூஸ்ரா குறித்து ஒரு நீண்ட புகாரை தயார் செய்து ஐ.சி.சி. பார்வைக்கு அனுப்பினார். விளைவு அவர் தூஸ்ராவை சிறிது காலம் வீச முடியாமல் போனது.

அதே ஆண்டு ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெறவிருக்கும் வேளையில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் மாலிக் மீது "த்ரோ" புகார் எழுந்து அந்த தொடரில் அவர் பேட்ஸ்மெனாக மட்டுமே விளையாட முடிந்தது.

மீண்டும் 2005ஆம் ஆண்டு இவர் பந்து வீசலாம் என்று அனுமதியளிக்கப்பட்டபோது, இங்கிலாந்து அணியினர், முல்டான் டெஸ்ட் போட்டியின் போது 'தூஸ்ரா ஒரு த்ரோ" என்று புகார் எழுப்பினர். இதன் பிறகு தன் பந்து வீச்சில் குறை உள்ளதாக மாலிக்கே கருத நேர்ந்து பந்து வீச்சை சரி செய்ய முழங்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு 2006ஆம் ஆண்டு மீண்டும் பந்து வீச வந்த மாலிக் தூஸ்ராவை இன்று வரை வீசுவதில்லை.

தென் ஆப்பிரிக்காவின் சிக்கனமான ஆஃப் ஸ்பின்னர் ஜோஹன் போத்தா, இவரது பந்து வீச்சையும் சரியாக விளையாட முடியாத ஆஸ்ட்ரேலிய அணியினர் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் போது புகார் எழுப்பினர். இதனால் அவர் மீது தற்காலிக தடை விதிக்கப்பட்டது. பிறகு தடை நீங்கி பந்து வீச வந்த அவர் 'தூஸ்ரா'வா வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.

போத்தாவிற்கு பிறகு மீண்டும் ஆஸ்ட்ரேலியா தனது தூஸ்ரா குறித்த அச்சத்தை வெளியிட்டது பாகிஸ்தானுக்கு எதிராக் துபாயில் நடைபெற்ற ஒரு நாள் தொடரின் போது. இந்த முறை அதனை பயன்படுத்தி முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணியினினரை திணறச் செய்தவர் சயீத் அஜ்மல் என்ற இளம் ஆஃப் ஸ்பின்னர். உடனேயே அவர் மீதும் புகார் பறந்தது, அவர் தூஸ்ரா பந்து வீச்சை ஒழுங்காக வீசவேண்டும் இல்லையேல் 'பயோ மெக்கானிக்கல்' சோதனை, அதன் பிறகு தடை ஜாக்கிரதை! என்று எச்சரிக்கப்பட்டார்.

இவ்வாறு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்து புதிய முறை பந்து வீச்சின் மீது தங்களது பாரம்பரிய ஒழுக்கவாத பார்வைகளை செலுத்தி அடக்கி ஒடுக்கி வருகின்றனர்.

ஆஸ்ட்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் தூஸ்ராவை கற்றுத் தர மாட்டோம் என்று வெட்டி சபதம் எடுப்பதற்கு பதிலாக அதனை அவர்கள் நாட்டு வீரரகள் எப்படி விளையாட வேண்டும் என்று கற்றுத் தருவதில் நேரத்தை செலவிடலாம்.

பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் 'ரிவர்ஸ் ஸ்விங்" என்ற ஒன்றை கண்டுபிடித்த போதும் இவர்களின் கண்காணிப்பு அதன் மேல் செலுத்தப்பட்டு, ஷோயப் அக்தர் உள்ளிட்ட வீரர்கள் மீது அவ்வப்போது புகார்களை எழுப்பியே வந்துள்ளது. ஆனால் இந்தியாவின் தலை சிறந்த ஐ.சி.சி. நடுவரான வெங்கட்ராகவன் ஒரு முறை ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீயின் பந்து வீச்சு முறையை எதிர்த்து ஐ.சி.சி. நடுவரிடம் புகார் கொடுத்தார். ஆனால் அவருக்கு எந்த விதமான 'பயோ-மெக்கனிக்கல்' பரிசோதனையும் நடத்தப்படவில்லை.

வெங்கட்ராகவன் செய்த புகாரும் அடியோடு மூடி மறைக்கப்பட்டது.


'பாடி லைன்' தொடர் என்று அழைக்கப்படும் கிரிக்கெட் தொடரில் லார்வுட், லின்ட்வால் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் கவசம் அணியாத காலக் கட்டங்களில் பேட்ஸ்மென்களை காயப்படுத்தும் விதமாக வீசியது இன்று வெள்ளை கிரிக்கெட் புராணமாகவும், அரும்பெரும் சாதனையாகவும் பேசப்பட்டு வருகிறது.

ஆனால் மேற்கிந்திய அணியின் கிரிஃபித், ராபர்ட்ஸ், ஹோல்டிங், கார்னர், கிராஃப்ட், டேனியல், மார்ஷல், பேட்டர்சன், வால்ஷ், ஆம்புரோஸ் ஆகிய படு பயங்கர வீச்சாளர்களின் பௌன்சர்கள் இங்கிலாந்து வீரர்களை காயப்படுத்தியபோது (ஆஹா... நம்ம பாடத்த நம்ம கிட்டயே காண்பிக்கறாங்கையா...) இதனை எப்படியாவது ஒழித்து விட திட்டம் தீட்டியது எம்.சி.சி.

அதுவும் ஒரு முறை மால்கம் மார்ஷல் பந்தில், ஹெல்மெட் அணிந்து கொண்டிருந்த போதும் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங் மூக்கின் மீது வாங்கிய அடி இங்கிலாந்து வீரர்களை அச்சுறுத்துவதாய் இருந்தது. உயரம் குறைவாக இருக்கும் கேட்டிங், மார்ஷல் வீசிய பௌன்சரை சரியாக ஆடாமல் அது அவரது மூக்கை தாக்கியது. மூக்கின் ஒரு பகுதி மைதானத்தில் கிடந்தது. அதன் பிறகு அவர் இங்கிலாந்து சென்று அறுவை சிகிச்சை செய்து அதனை ஒட்ட வைத்தார். அதன் பிறகு பயங்கரமாக(!) யோசித்த இங்கிலாந்து ஓவருக்கு இரண்டு பௌன்சர்களுக்கு மேல் வீசினால் 'நோ-பால்' ஆகும் என்று விதி செய்தது.

1974- 75 ஆம் ஆண்டில் ஜமைக்காவில் இந்திய - மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இதற்கு முந்தைய போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த கோபத்தில், ஹோல்டிங், ஹோல்டர் படு ஆக்ரோஷமாக வீசினர். மொகிந்தர் அமர்நாத், பிரிஜேஷ் படேல், கெய்க்வாட், குண்டப்பா விஸ்வநாத் என்று முன்னணி வீரர்கள் அனைவரும் காயமடைந்தனர். சரி! பந்து வீச்சாளர்களாவது அடியிலிருந்து தப்பட்டும் என்று அப்போதைய இந்திய அணித் தலைவர் பிஷன் சிங் பேடி இந்திய அணி 196/6 என்று இருந்த போது டிக்ளேர் செய்ய நேரிட்டது.

அப்போதெல்லாம் பௌன்சர் வீசி காயப்படுத்தும் உத்தி அப்போதைய கிரிக்கெட் நிர்வாகக் குழுவான இங்கிலாந்திற்கு தெரியவில்லை. தங்களது வீரர்களுக்கென்று வரும்போது ஓவருக்கு 2 பௌன்சர்கள் மட்டுமே வீசவேண்டும் என்று சட்டம் போடுகிறது.

இன்றைய கிரிக்கெட்டில் உலகம் முழுதும் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வித வாய்ப்பையும் அளிக்காமல் பேட்டிங்கிற்கு சாதகமான ஆட்டக்களங்கள் அமைக்கப்பட்டு வணிக நலனில் ஐ.சி.சி.யும் கிரிக்கெட் வாரியங்களும் அக்கறை செலுத்தி வருகின்றன.

இதனால் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்த தங்களது சொந்த முயற்சியில் புதிய பந்து வீச்சு முறையை கண்டுபிடித்துக் கொள்கின்றனர். ரிவர்ஸ் ஸ்விங் என்பது பஞ்சு போன்ற ஆட்டக்களங்களை எதிர்கொள்ளவே வேகப்பந்து வீச்சாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல், எல்.பி.டபிள்யூ. விதிமுறைகளும் பேட்ஸ்மென்களுக்கு சாதமாக இருக்கும் நிலையில் ஆஃப் ஸ்பின்னர்களால் கண்டுபிடிக்கப்பட்டது தூஸ்ரா.

இன்று அஜந்தா மென்டிஸ் மேலும் சில மேம்பாடுகளைச் செய்து என்ன வீச போகிறாரோ என்ற அச்சத்தை எதிரணி பேட்ஸ்மென்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவர் இன்னமும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை விளையாடவில்லை. அப்படி விளையாடும்போது இவரது பந்து வீச்சில் புதிய கோளாறுகளை அவர்கள் கண்டுபிடித்து அவர் இனிமேல் சாதாரணமாக வீசவேண்டும், விரல்களின் வழியாக பந்தை வீசக்கூடாது, கேரம் ஸ்ட்ரைக்கரை சுண்டி விடுவது போல் சுண்டிவிடுவது முறையற்ற பந்து வீச்சு என்றெல்லாம் கூறி அவரை முடக்க முயற்சிப்பார்கள் என்பது உறுதி.

கிரிக்கெட் ஆட்டத்தை அதன் சவாலான போட்டித் திறனுடன் விளையாடுவதாகவும், விளையாட்டு உணர்வுகளுக்கு தங்கள் வாழ்வையும் அர்ப்பணிப்போம் என்றெல்லாம் புருடா விட்டுத் திரிந்து கொண்டு இருக்கும் ஆஸ்ட்ரேலியா, 'தூஸ்ரா'-வை தங்கள் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க மாட்டோம் ஏனெனில் அது 'விதி மீறல்' என்று கட்டுப்பாடு விதித்து கொண்டுள்ளது எந்த கிரிக்கெட் ஆட்ட உணர்வுடன் ஒத்துப் போகிறது?

டெஸ்ட் கிரிக்கெட் அழிந்து வருகிறதே... என்று புலம்பி இரவு நேர டெஸ்ட் கிரிக்கெட் நடத்தலாமா என்று யோசித்து வரும் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகள், கிரிக்கெட் ஆட்டத்தின் உயிர் நாடியான வேகப்பந்து வீச்சு, புதிய முறை சுழற்பந்து வீச்சு ஆகியவற்றை ஒடுக்கியதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டை அறுவை ஆட்டமாக மாற்றியிருக்கிறது என்று யோசிப்பார்களா?

தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டொனால்ட் இது குறித்து கூறியுள்ளது இங்கு மேற்கோளுக்கு உகந்தது. அதாவது, பந்து வீச்சாளர்களின் புதிய உத்திகளை ஒடுக்கும் விதிமுறைகளை ஒழிக்கவேண்டும், பந்தை சேதம் செய்கிறார்கள் என்று விதி மீறலாக பார்க்காமல், பந்தின் நிலையை பந்து வீச்சாளர்கள் மாற்றுவதற்கான உரிமையை வழங்கவேண்டும், அதாவது பந்தை சேதம் செய்து புது விதமாக வீசுவதற்கான வாய்ப்புகளை பந்து வீச்சாளர்களுக்கு வழங்கி அதனை விதியாக மாற்றவேண்டும் என்று தீவிர நிலைப்பாடு எடுத்துள்ளார் டொனால்ட்.

இந்த நிலையில் ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்கள் 'தூஸ்ரா'வை இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க மாட்டோம் என்ற உடன்படிக்கையை எட்டியிருப்பது குறித்து ஐ.சி.சி. கண்டனம் வெளியிட்டு இத்தகைய அராஜக முடிவுகளுக்கு முடிவு கட்டவேண்டும்.

செய்யுமா ஐ.சி.சி?