சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் - சமகால பேட்டிங் மேதைகள்

வியாழன், 16 ஜூலை 2009 (20:46 IST)
webdunia photoFILE
நடப்பு ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் தனது 38-வது சதத்தை எட்டியதோடு, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 11,000 ரன்களை எட்டிய 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் அவர் இந்திய பேட்டிங் மாஸ்ட்ரோ சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு மிக அருகில் இருப்பதால், இருவரது பேட்டிங் குறித்து ஒரு ஒப்பு நோக்கு பார்வையை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

இருவரும் ரேஸ் குதிரைகள் போல் ஒருவருக்கு ஒருவர் சாதனை படைப்பதில் சளைத்தவர்கள் அல்ல என்ற திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் 159 டெஸ்ட் போட்டிகளில் 12,773 ரன்களைக் குவித்து 54.58 என்ற சராசரியுடன் 42 சதங்களை எடுத்துள்ளார். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 425 போட்டிகளை விளையாடியுள்ள சச்சின் 44.37 என்ற சராசரியுடன் 16,684 ரன்களைக் குவித்து அதில் 43 சதங்களை எடுத்துள்ளார்.

ரிக்கி பாண்டிங் 132 டெஸ்ட் போட்டிகளில் 56.68 என்ற சராசரியுடன் 11,110 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 38 சதங்களையும் 46 அரை சதங்களையும் எடுத்துள்ளார்.

ஒரு நாள் சர்வதேச பொட்டிகளில் ரிக்கி பாண்டிங் 315 போட்டிகளில் விளையாடி 11,523 ரன்களைக் குவித்து 26 சதங்களை மட்டும் எடுத்துள்ளார்.

ஒருவர் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக கருதப்படும் டான் பிராட் மேன் மண்ணில் பிறந்து வளர்ந்தவர். மற்றவர் அதே டான் பிராட்மேனால், தன்னைப் போன்று விளையாடுகிறார் என்று புகழாரம் சூட்டப்பட்டவர்.

webdunia photoFILE
1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையில் பாகிஸ்தானில் விளையாடச் சென்ற இந்திய அணியில் 16 வயது வீரராக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டது முதல் அவரைச் சுற்றி பலத்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அன்று உருவாகிய அந்த எதிர்பார்ப்பு இன்றளவும் சச்சினை பொறுத்தவரை ரசிகர்களிடையே நீடித்து வருகிறது.

ஒவ்வொரு முறை சச்சின் களமிறங்கும் போதும் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதனால் அவருக்கு இருந்து வரும் மன அழுத்தம் ரிக்கி பாண்டிங்கிற்கு இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளவேண்டும்.

webdunia photoFILE
அந்த பாகிஸ்தான் தொடரில் சிறப்பாக விளையாடிய சச்சின் டெண்டுல்கரின் புகழ் இங்கிலாந்தில் மான்செஸ்டர் மைதானத்தில் 119 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்ததது முதல் உச்சத்தை எட்டியது. அடுத்ததாக பயணம் மெற்கொள்ளவிருக்கும் ஆஸ்ட்ரேலியா வரை இவரது புகழ் இங்கிலாந்து வாயிலாக சென்றடைந்தது. அங்கு இவர் சிட்னி, பெர்த் மைதானத்தில் அடித்த சதங்களை பார்வையிட்ட டான் பிராட்மேன், சச்சின் தன் பாணி ஆட்டத்தின் வாரிசு என்று அறிவித்ததையடுத்து ஆஸ்ட்ரேலியாவிலும் சச்சினின் புகழ் பெரிதும் வளர்ந்தது.

பெற்றோர்கள் தங்கள் குழைந்தைகளில் ஒருவருக்கேனும் சச்சின் என்ற பெயரை சூட்டி மகிழ்ந்து வந்துள்ளனர். அந்த 1991- 92 தொடரின் போது ஆஸ்ட்ரேலிய வானொலிக்கு ஒரு முறை பேட்டி அளித்த சச்சின் டெண்டுல்கர், பேட்டி கண்டவரிடம் குறிப்பிடும்போது, என்னைப் போலவே விளையாடும் ஒரு வீரர் உங்கள் நாட்டிலும் உள்ளார் அவர்தான் ரிக்கி பாண்டிங் என்று கூறினார்.

அப்பொழுது டாஸ்மேனியா அணிக்காக ரிக்கி பாண்டிங் ஆடிக் கொண்டிருந்தார். அவரை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வாரியம் அடையாளம் காணும் முன்னரே சச்சின் அவரை ஆஸ்ட்ரேலியர்களுக்கு அடையாளம் காட்டினார் என்றே கூறவேண்டும்.

ஆனால் அதன் பிறகு 4 ஆண்டுகள் கழித்தே ரிக்கி பாண்டிங் ஆஸ்ட்ரேலிய அணிக்குள் நுழைய முடிந்தது. ஆனால் டெண்டுல்கருக்கு கிடைத்த அந்த பலமான வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆஸ்ட்ரேலியாவில் ஹீரோ தகுதி பெற அவர் தன்னை பெரிய அளவில் நிரூபிக்க வேண்டியிருந்தது.

பாண்டிங் 1995ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடினார். அதில் முதல் இன்னிங்சில் 96 ரன்களையும், 2-வது இன்னிங்சில் 71 ரன்களையும் எடுத்து தன் வரவை அறிவித்தார்.

ஆனால் இவரது ஆட்டம் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு விதமான ஷாட்களையும் கொண்டிராமல், ஒரு மரபான பேட்ஸ்மென் என்ற அளவிலேயே சிறப்பாக அமைந்தது. இவரும் சச்சின் டெண்டுல்கர் போலவே இங்கிலாந்து அணிக்கு எதிராக 1997ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் 127 ரன்கள் எடுத்து தன் முதல் சதத்தை எட்டினார்.

ஆனால் 1997ஆம் ஆண்டுவாக்கில் பாண்டிங்கை யாரும் சச்சினுடன் ஒப்பிட்டு பேச மாட்டார்கள். ஏனெனில் அப்போது சச்சினும், மேற்கிந்திய மேதை பிரையன் லாராவும் உலக பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

webdunia photoFILE
1994ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் கொடி கட்டி பறந்த காலமாகும். இந்த காலக்கட்டத்தில் 125 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய சச்சின் டென்டுல்கர் சுமார் 8 ஆண்டுகள் ஐ.சி.சி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைகளில் முதலிடம் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிங் தன் முதல் சதத்தை 1997ஆம் ஆண்டு அடிப்பதற்குள் சச்சின் டெண்டுல்கர் 10 சதங்களை அடித்து கிளென் மெக்ரா, கூட்னி வால்ஷ், கர்ட்லி ஆம்புரோஸ், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆலன் டொனால்ட், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன் என்று அனைத்து சிறந்த பந்து வீச்சாளர்கள் மத்தியிலும் பேட்டிங்கில் தன்னை சூரப்புலி என்று நிரூபித்துக் கொண்டிருந்தார்.

1995ஆம் ஆண்டு துவங்கிய பாண்டிங் 2001ஆம் ஆண்டின் புகழ் பெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு வரும்போது 7 சதங்களை மட்டுமே எடுத்திருந்தார். அந்த தொடர் அவருக்கு பெரும் சரிவாக அமைந்தது. 0, 6, 0,0, 11 என்று பாண்டிங் மிக மோசமாக ரன் எடுத்ததோடு ஹர்பஜன் சிங்கின் 'செல்லப் பிள்ளை" (அதாவது ஹர்பஜன் வீசினால் பாண்டிங் அவுட் என்று பொருள்) ஆனார் பாண்டிங்.

webdunia photoFILE
ஆனால் சச்சின் டெண்டுல்கர், 1997ஆம் ஆண்டு டெய்லர் தலைமையில் ஆஸ்ட்ரேலியா இங்கு வந்த போது, ஷேன் வார்ன் ஒருவர்தான் தனது கிரிக்கெட் வாழ்விற்கு அச்சுறுத்தல் என்பதைக் கணித்து எல்.சிவராம கிருஷ்ணன், ரவி சாஸ்திரி ஆகியோரை பந்து வீசச் செய்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். அந்த பயிற்சியின் பலன் ஷேன் வார்ன் பின்பு ஒரு முறை குறிப்பிட்டது போல் 'இரவு கண் மூடினால் சச்சின் டெண்டுல்கர் என்னை அடித்து நொறுக்கியதுதான் கண் முன் வருகிறது' என்றவாறு அமைந்தது.

இதே போல் ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை, அதுவும் சிறந்த பந்து வீச்சாளரை குறி வைத்து தாக்கி ஆதிக்கம் செலுத்தியதாக நாம் பாண்டிங்கிடம் காண முடியாது. நம் விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளரை அடித்து நொறுக்கும் பழி தீர்க்கும் மனோ நிலை எல்லா வீரர்களிடத்திலும் இருக்கும் என்றாலும் சச்சின் டெண்டுல்கர் விஷயத்தில் இது வெளிப்படையாக இருந்தது.

ஸ்ட்ரைக் ரேட் என்ற அளவில் பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இவ்வளவு ஷாட்களை குறைத்தும் 85 விழுக்காடு என்று வைத்துள்ளார். பாண்டிங் 80 விழுக்காடு மட்டுமே வைத்துள்ளர். டெஸ்ட் போட்டி ஸ்ட்ரைக் ரேட் விகிதத்திலும் சச்சினுக்கும், பாண்டிங்கிற்கும் பெரிய வேறுபாடு இருந்ததில்லை.

ஆனால் பேட்டிங் பாணி என்று எடுத்துக் கொண்டால் இப்போது சச்சின் விளையாடும் முறையை நீக்கி விட்டு பார்த்தால் அதிரடி முறையில் விளையாடும் வீரர் சச்சினாகவே இருப்பார். மேலும் சச்சின் அவரது உச்சக் கட்ட அதிரடி பேட்டிங் காலத்தில் விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் ஆகியோருடன் ஒப்பிடப்பட்டு பேசப்பட்டார். எதிரணியினரின் ஓய்வறை விவாதங்களில் சச்சினை எப்படி வீழ்த்துவது என்பதே பெரிதும் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டதுண்டு. பாண்டிங் பற்றி எதிரணியினர் அவ்வளவாக கவலைப்பட்டதில்லை ஏனெனில் அப்போது ஹெய்டன், லேங்கர், கில்கிறிஸ்ட் என்று அதிரடி வீரர்கள் ஆஸ்ட்ரேலிய அணியில் இருந்தனர்.

2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் வரை சச்சின் டெண்டுல்கரின் ஆதிக்கம் ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கொடி கட்டிப் பறந்தது. அதன் பிறகு காயம் காரணமாக பல்வேறு தொடர்களில் அவர் விளையாட முடியாமல் போனது. கிரிக்கெட் வாழ்வை அச்சுறுத்தும் 'டென்னிஸ் எல்போ' என்ற முழங்கை காயத்தில் சிக்கினார் சச்சின் டெண்டுல்கர். அந்த காயத்திற்கு பிறகு அவர் நிறைய ஷாட்களை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. குறிப்பாக அவரது பயங்கரமான புல் ஷாட்கள், ஹுக் ஷாட்கள், சில வகையான ஸ்லாக் ஸ்வீப் ஷாட்கள், ஸ்பின்னர்களை மேலேறி வந்து அடிக்கும் ஷாட்கள், வேகப்பந்து வீச்சாளர்களை அனாயசமாக எதிரே நிற்கும் சைட் ஸ்க்ரீனிற்கு மேல் தூக்கி சிக்சர் அடிக்கும் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தும் ஷாட்களை அவர் அதிகம் பயன்படுத்த முடியாமல் போனது.

இதனால் வேகமாக ரன் குவிக்கும் தன்மையும் நாளடைவில் குறைந்தது. அவர் அப்படியே தலைகீழாக தன் ஆட்டத்தை மாற்றிக் கொண்டு காயத்தை தவிர்க்கும், ஆனால் ரன் குவிப்பு வேகமும் குறையாத வகையில் சில புதிய ஷாட்களை (உதாரணமாக பெடல் ஷாட்) அவர் கண்டு பிடித்துக் கொண்டார். அதே போல் பவுன்சர் பந்துகளை ஸ்லிப் திசையில் மேல் தூக்கி அடிக்கும் ஷாட் அவரது முத்திரை ஷாட்டாகவே சமீபமாக இருந்து வருகிறது.

webdunia photoFILE
பாண்டிங் 2003ஆம் ஆண்டு மெல்போர்னில் செளரவ் கங்கூலி தலைமை இந்திய அணிக்கு எதிராக 257 ரன்களை எடுத்த பிறகு... சொன்னால் நம்ப முடியாது... அதாவது 26 டிசம்பர் 2003-ற்கு பிறகு பாண்டிங் ஜனவரி 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிராக 205 ரன்கள் எடுத்தார். இடையில் பாண்டிங் 12 மாதங்கள் எந்த ஒரு சதத்தையும் எடுக்கவில்லை.

சச்சின் டெண்டுல்கருக்கு அவரது உச்ச கட்ட பேட்டிங் காலத்தில் சதங்களுக்கு இடையே இவ்வளவு நீண்ட இடைவெளி இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிங்கின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் வரைபடம் 2004ஆம் ஆண்டிற்கு பிறகே முன்னேற்றப் பாதையில் சென்றுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ஆட்ட வரைபடம் 2004ற்கு பிறகு சற்றே பின்னடைந்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய வீரர்களில் எவரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகே சிறப்பின் உச்சத்திற்கு செல்வர். இதனை நாம் ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர், டேவிட் பூன் ஆகியோரது புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரியும்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு, அதாவது ஒரு 8 ஆண்டுகளில் பேட்டிங்கில் நிகழ்த்திய ஆதிக்கம் என்பது போல் ரிக்கி பாண்டிங்கிற்கு கூற முடிவதில்லை. மேலும் ரிக்கி பாண்டிங் சர்வதேச அரங்கில் கிளென் மெக்ரா, ஜேசன் கில்லஸ்பி, ஷேன் வார்ன் ஆகியோரது பந்து வீச்சை எதிர்கொள்ளவில்லை.

சச்சின் டெண்டுல்கரை நம்பி, அதாவது இந்தியா என்றால் சச்சினின் விக்கெட் எடுத்தால் போதுமானது என்று ஒரு காலக் கட்டம் இருந்தது. இது அவரது பேட்டிங்கை சிறிது பாதிக்கக் கூடச் செய்தது. ஆனால் இத்தைய நெருக்கடி பாண்டிங்கிற்கு ஏற்பட்டதில்லை. அவர் எப்போதும் அவரை விடவும் சிறந்த வீரர்களின் பாதிகாப்பிலேயே இருந்தார். இதனால் அவரது ஆட்டம் அழுத்தம் காரணமாக பாதிக்கப்ப்டவில்லை.

எப்போதும் ஒரு டெஸ்ட் இல்லையென்றால் இன்னொரு டெஸ்டில் சாதிக்கலாம் என்ற அவகாசம் பாண்டிங்கிற்கு இருந்தது. ஆனால் இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சின் விக்கெட் விழுந்தால் அதன் பிறகு தோல்வியடையும் என்ற நிலை ஒரு காலக்கட்டம் வரை இருந்தது. அதாவது ராகுல் திராவிட், கங்கூலி, லக்ஷ்மண் ஆகியோர் சிறப்பாக விளையாடும் வரையில், 2001ஆம் ஆண்டு கங்கூலி தலைமை இந்திய அணி ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்திய போது திராவிட், லக்ஷ்மண் ஆகியோர் உலக அரங்கில் மிகப்பெரிய பேட்ஸ்மென்களாக எழுச்சி பெறும் வரை இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மீதான சுமை அதிகமாகவே இருந்து.

இத்தகைய சுமைகளை பாண்டிங் தான் கேப்டனாகும் வரை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படவில்லை. மேலும் தோல்விகளையே பெரும்பாலும் சந்தித்து வந்த இந்திய அணியில் 85 சதங்களையும், சுமார் 28,000 ரன்களையும் குவித்து, சீரான போக்கில் தன் ரன்களை எடுக்கும் ஒரு வீரர் உருவாகியுள்ளார் என்றால் அது சச்சின் டெண்டுல்கரின் தனிப்பட்ட சாதனைதான்.

ஆஸ்ட்ரேலியாவில் மிகச்சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பு உள்ளது. அதில் ஒருவர் 8 ஆண்டுகள் விளையாடினாலே 5 ஆண்டுகளுக்கான சர்வதேச அனுபவம் பெற்றதற்கு சமம். ஆனால் ஒரு அதிவேகப்பந்து வீச்சாளர் கூட, ஏன் ஒரு சதாரண வேகத்துடன் வீசி பேட்ஸ்மென்களை திணறச் செய்யும் பந்து வீச்சாளர்களும், சாதகமான மைதானங்களும் இல்லாத சூழலில் சச்சின் டெண்டுல்கர் உலகம் போற்றும் ஒரு வீரராக உருவாகியுள்ளார் என்பது மிகப்பெரிய சாதனைதான்.

ஆஸ்ட்ரேலியா அதன் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பின் மூலம் இன்னொரு பாண்டிங், இன்னொரு ஸ்டீவ் வாஹ் ஆகியோரை உருவாக்கி விடலாம். ஆனால் சச்சின் டெண்டுல்கர் போல் இன்னொரு வீரர் இந்தியாவில் உருவாவது கடினமே.

webdunia photoFILE
ஆனால் இவர்கள் இருவர் பற்றிய ஒப்பீடு தற்போதுதான் பெருகி வருகிறது. ஏனெனில் பாண்டிங் தன் முதல் சதத்தை எடுத்த போது சச்சின் 10 சதங்களை எடுத்திருந்தார். ஆனால் தற்போது பாண்டிங் டெஸ்ட் போட்டிகளில் டெண்டுல்கரைக் காட்டிலும் 4 சதங்களே பின் தங்கியுள்ளார். மொத்த ரன்களில் 1000 ரன்களே பின் தங்கியுள்ளார். 10 சத இடைவெளி 4 சதங்களாக குறைந்திருப்பது பாண்டிங் சமீபகாலமாக விளையாடி வரும் அபார கிரிக்கெட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு.

பொதுவாக சச்சின் டெண்டுல்கருக்கு பந்து வீசிய தலை சிறந்த வீச்சாளர்கள், அதாவது ஆலன் டொனால்ட், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், முரளிதரன், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் பலவீனம் இன்னது என்று அடையாளம் காண முடிந்ததில்லை என்றே கூறிவந்துள்ளனர்.

ஆலன் டொனால்டிடம் ஒரு முறை கேட்டபோது, சச்சின் டெண்டுல்கரை ஒரே பந்தில் இரண்டு முறை சொல்லி வைத்தாற்போல் வீழ்த்த முடியாது. ஏனெனில் தொடர்ந்து அவர் தன் ஆட்டத்தை சோதனைக்குட்படுத்தி அதில் மேம்பாடு செய்து கொண்டே செல்லும் வீரர் என்று கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் தனது ஆக்ரோஷ, அதிரடி உச்சத்தில் இருந்தபோது அவரை சற்றே சிரமப்படுத்திய வீச்சாளர் என்றால் அது மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் கூட்னி வால்ஷ்தான். இதனை சச்சின் டெண்டுல்கர் பல முறை கூறியுள்ளார்.

ஆனால் பாண்டிங்கின் பேட்டிங் அப்படியில்லை. இன்றும் அவர் சுழற்பந்து வீச்சாளர்களை சரிவர ஆட முடிவதில்லை. மேலும் மக்காயா நிட்டினி, இந்தியாவின் இஷாந்த் ஷர்மா போன்றவரகள் வீசும் "இன் டிப்பர்' பந்துகளை சந்திப்பதில் அவருக்கு பலவீனங்கள் உள்ளது. அதனால் அவர்களிடம் அதிக முறை ஆட்டமிழந்தும் உள்ளார் பாண்டிங்.

பிரைன் லாராவை மெக்ராவும், டொனால்டும் 10 அல்லது அதற்கு மேல்பட்ட எண்ணிக்கையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். பான்டிங்கை நிட்டினியும், ஹர்பஜனும் அதிக முறை வீழ்த்தியுள்ளனர். இது போன்று சச்சினை அதிக முறை ஆட்கொண்ட பந்து வீச்சாளர் ஒருவரைக் கூட நாம் குறிப்பிட முடியாது.

webdunia photoFILE
ஆனால் கிரிக்கெட் ஆட்டம் என்றால் அது வெறும் பேட்டிங் மட்டும் தொடர்புடையதன்று. ஃபீல்டிங், தலைமையேற்று நடத்துதலும் அதில் அடங்கும். இந்த இரண்டிலும் ரிக்கி பாண்டிங்குடன் சச்சினை நாம் ஒப்பு நோக்க முடியாது. ஏனெனில் ரிக்கி பாண்டிங் இன்றும் ஒரு மிகச்சிறந்த ஃபீல்டர். ஒரு மிகச்சிறந்த தலைவர். ஆனால் சச்சின் ஒரு தோல்வியடைந்த கேப்டன். ஆனால் ஒரு பாதுகாப்பான ஃபீல்டர் அவ்வளவே.

இருப்பினும் இவ்வளவு தகுதி இருந்தும் ஷேன் வார்ன் தன் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு முதலிடம் கொடுத்திருப்பதன் காரணம், சச்சினின் மனோதிடம், விமர்சனங்களை மீண்டும் மீண்டும் பொய்யாக்கும் சிறப்புத் திறமை, ஃபார்ம் இல்லாத நிலையிலிருந்து ஃபார்மிற்கு வரும் விதம், கடினமான மனோ நிலை, தன் விக்கெட்டை விலை மதிப்பில்லாததாக கருதும் சிறப்பு ஆகியவையே என்று கூறியுள்ளார்.

webdunia photoFILE
இந்த விதங்களில் பிரையன் லாரா ஒரு ஊசிமுனை அளவு குறைவாக உள்ளதால் லாராவிற்கு இரண்டாவது இடம் அளித்தார் ஷேன் வார்ன்.

லாரா ஓய்வு பெற்று விட்ட நிலையில், ஒப்பீடுகளையும், வித்தியாசங்களையும் தாண்டி சம கால கிரிக்கெட்டில் இரண்டு பேட்டிங் மேதைகள் உள்ளனர் என்றால் அது சச்சினும், பாண்டிங்கும்தான். கெவின் பீட்டர்சனை தற்போது ஆஸ்ட்ரேலியர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால் இவர்கள் இருவருடனும் அவரை ஒப்பு நோக்கினால் அவர் இன்னமும் நீண்ட நெடுந்தொலைவு வரவேண்டியுள்ளது.