சச்சினுக்கு எதிராக தொடர்ந்த மோசமான தீர்ப்புகள்

புதன், 4 பிப்ரவரி 2009 (11:11 IST)
webdunia photoWD
இலங்கையில் நடைபெறும் இந்திய-இலங்கை ஒரு நாள் தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக இந்திய நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கருக்கு தவறாக எல்.பி.டபிள்யூ தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதல் போட்டியில் நடுவராக இருந்த முன்னாள் இலங்கை ஆஃப் ஸ்பின்னர் தர்மசேனா டெண்டுல்கருக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தார் ஆனால் இடது கை வேகப்பந்து வீச்சாளர் துஷாராவின் பந்து லெக்ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆகிச் சென்றது. கிரிக்கெட் விதிகளின் படியே இது நாட் -அவுட் தான்.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நடுவர் காமினி சில்வா மீண்டும் ஸ்டம்புகளை விட்டு விலகிச் செல்லும் பந்திற்கு எல்.பி.டபிள்யூ. கொடுத்தார்.

நேற்று மீண்டும் மிகவும் வெளியே செல்லும் பந்திற்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தார் நடுவர் காமினி சில்வா.

இலங்கை நடுவர்கள் தமாஷான சில தீர்ப்புகளை வழங்குவதில் வல்லவர்கள் ஒரு முறை இந்தியா கபில்தேவ் தலைமையில் இலங்கைக்கு சென்றிருந்தபோது, ஒரு நாள் போட்டி ஒன்றில் அப்போதைய துவக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மேலேறி வந்து ஒரு பந்தை தூக்கி அடித்தார். அதனை நடுவர் உடனடியாக சிக்சர் என்று அறிவித்தார். ஆனால் கடைசியில் எல்லைக்கோட்டருகே பந்து கேட்ச் பிடிக்கப்பட்டது.

பிறகு ஒருவாறாக ஸ்ரீகாந்தே வெளியேறினார். முதன் முதலாக இலங்கையுடன் டெஸ்ட் போட்டிகளை இந்தியா விளையாடியபோது இலங்கை இந்தியாவை 1- 0 என்று வீழ்த்தியது ஆனால் நடுவர்களின் மிக மோசமான தீர்ப்புகளினால் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.

ருமேஷ் ரத்னாயகாவும், அசந்தா டீ மேலும் தொடர்ந்து நோ-பால்களாக வீசிவந்தனர். ரன்னர் முனையில் உள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் பல முறை இதனை எடுத்துக் கூறியும் இலங்கை நடுவர்கள் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

மாறாக இலங்கை வீரர்கள் என்னதான் ஸ்டம்புகளுக்கு நேராக காலில் வாங்கினாலும் அது நிபந்தனையின்றி நாட் அவுட்தான்.

ஒரு நேரத்தில் பாகிஸ்தானின் மோசடி நடுவர்கள் என்று ரவி சாஸ்திரியால் ஒரு முறை நகைச்சுவையாக வர்ணிக்கப்பட்ட கிஸர் ஹயாத், சகூர் ரானா ஆகியோரையும் விஞ்சி விடும் அளவிற்கு இலங்கை நடுவர்களிடம் தவறுகள் மலிந்து கிடந்தன.

webdunia photoWD
டெஸ்ட் தொடரை தோற்ற கபில் தேவ் மிகவும் கோபமாக இந்த அணி வெளியில் வந்தால் அதன் உண்மையான பலம் தெரிந்து விடும் என்று கூறிவிட்டு வந்தார்.

பாகிஸ்தான் இலங்கைக்கு இம்ரான் தலைமையில் சென்றபோதும் பாகிஸ்தானை டெஸ்ட் போட்டியில் இலங்கை வீழ்த்தியது. அந்த டெஸ்ட் போட்டியிலும் சர்ச்சைக்குறிய பல தீர்ப்புகளை பாகிஸ்தானுக்கு எதிராக வழங்கினர் இலங்கை நடுவர்கள். இம்ரானும், வாசிம் அக்ரமும், வசை மொழியை முணுமுணுத்துக் கொண்டே பந்து வீசியது அப்போது நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்தவர்கள் அறிவர்.


பாகிஸ்தானின் நடுவர் மோசடி உத்தியை பாகிஸ்தானுக்கு எதிராகவே இலங்கை பயன்படுத்தி அதிர்ச்சியளித்தது. அப்போதுதான் வலியை உணர்ந்த இம்ரான் முதன் முதலாக தன் நாட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு தானாகவே முன் வந்து நடு நிலை நடுவர்களை நியமித்து டெஸ்ட் தொடர் ஒன்றை விளையாடி இன்றைய ஐ.சி.சி.க்கு முன் மாதிரியாக திகழ்ந்தார்.

அசோக டிசில்வா என்ற நடுவரை நாம் இப்போதெல்லாம் அடிக்கடி பார்ப்பதில்லை. ஒரு நேரத்தில் இந்தியா விளையாடும் எந்த டெஸ்ட் தொடராயிருந்தாலும் அசோக டிசில்வாவை நாம் நடுவராய் பார்த்திருக்கிறோம்.

webdunia photoWD
அவர் சுமார் 6 அல்லது 7 முறை அப்போதைய இந்திய அணித்தலைவர் கங்கூலிக்கு எல்.பி.டபிள்யூ. தீர்ப்பை தவறாக வழங்கியுள்ளார். அதாவது மட்டையின் உள் விளிம்பில் பட்டுச் சென்றதை கவனிக்காமல் அவுட் என்று தீர்ப்பளித்துள்ளார்.

பலமுறை கங்கூலி கடுப்புடன் ஓய்வறைக்கு திரும்பியுள்ளார். அதன் பலன். அடுத்த சில தினங்களில் ஐ.சி.சி. உயர் மட்ட குழுவில் அசோக டிசில்வா இல்லை. இந்தியா விளையாடும் போட்டிகளிலும் அவரை அதன் பிறகு அதிகம் பார்க்க முடியவில்லை.

இவையெல்லாம் கங்கூலி, டெண்டுல்கர் போன்ற நட்சத்திர - தங்களை உலக கிரிக்கெட்டில் நன்றாக நிறுவிக்கொண்ட - வீரர்களுக்கு நடப்பதால் விளைவுகள் தெரியவில்லை. மாறாக திறமையான ஒரு இளம் வீரருக்கு எதிராக இத்தகைய மோசடி தீர்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், அந்த வீரரது கிரிக்கெட் கனவே அல்லவா முடிந்து போயிருக்கும்.

நடுவர் மோசடி தீர்ப்புகளால் சமீபத்தில் நடந்த மோசமான நிகழ்வுகள் 2002 ஓவல் டெஸ்ட், இந்தியா-ஆஸ்ட்ரேலியா சிட்னி டெஸ்ட், 2007 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. சமீபத்தில் மேத்யூ ஹெய்டனுக்கு தொடர்ந்து தப்பும் தவறுமாக பாகிஸ்தான் நடுவர் தீர்ப்பளித்தது இவையெல்லாவற்றையும் ஐ.சி.சி. கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நடுவர்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தது எல்.பி.டபிள்யூ தீர்ப்பில் பேட்டில் பட்டதா இல்லையா என்பதையாவது 3-வது நடுவரிடம் விசாரிக்க முயல வேண்டும்.

webdunia photoWD
இ‌தி‌ல் எதையும் செய்ய முடியவில்லையா? நமது டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் எல்.பி.டபிள்யூ. என்ற ஒன்றே கிடையாது. அது போல் ஒரு நாள், இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்பை நீக்கி விடலாமே. இதுவும் ஐ.சி.சி.யின் வியாபார உத்திக்கு உகந்ததுதான். பேட்ஸ்மென்கள் சுதந்திரமாக பந்தை காலால் உதைத்தே பவுண்டரிக்கு அனுப்பலாம். ஒரு பேட்ஸ்மென் 5 பவுண்டரிகளை மட்டையால் அடித்தால் காலால் உதைத்து 10 பவுண்டரிகளை அடிக்கலாம். காலால் உதைத்து பவுண்டரி அடித்த வகையில் "சிறந்த உதைபந்து பவுண்டரி வீரர்" என்ற ஐ.சி.சி. விருதையும் உருவாக்கலாம்.

மோசமான நடுவர் தீர்ப்புகளுக்கு அதிக முறை பாதிக்கப்பட்ட இரண்டு வீரர்களின் பெயரை குறிப்பிட வேன்டுமென்றால் அது சச்சின் டெண்டுல்கரும், பிரையன் லாராவும்தான்.

கடந்த 20 ஆண்டுகளில் அதிக சாதனைகளை முறியடித்து, உலகின் தலை சிறந்த வீரர்கள் என்று பெயர் நாட்டிய இந்த இரண்டு வீரர்கள், நடுவரின் மோசமான தீர்ப்புகளுக்கும் அதிகம் பாதிக்கப்பட்ட வீரர்கள் என்ற சாதனையை எட்டியிருப்பது ஐ.சி.சி. நடுவர்களுக்கும் ஐ.சி.சி.க்கும் ஏற்பட்ட இழுக்காகும்.