கர்நாடகா பிரீமியர் லீக் கிரிக்கெட்! தொடரும் அபாயப் போக்குகள்

திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (16:14 IST)
எப்போது இந்தியன் கிரிக்கெட் லீக் என்ற ஒரு தனியார் அமைப்பு இருபதுக்கு 20 கிரிக்கெட் என்ற ஒரு வடிவத்தை துவங்கி வீரர்களை விலை பேசத்தொடங்கியதோ அப்போது முதல் கிரிக்கெட் உலகை பணம் என்ற ஒன்று மிகவும் மோசமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஐ.சி.எல்.-ஐக் கண்டு அஞ்சிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதனை தடை செய்து, ஐ.பி.எல். கிரிக்கெட்டை களமிறக்கியது!

மிகப்பெரிய தனியார் நிறுவனங்களும், நடிகர், நடிகைகளும் அணி உரிமைகளைப் பெற்று அதிர்ச்சி தரும் தொகைகளுக்கு உலகம் முழுதும் கிரிக்கெட் வீரர்களை தங்களுக்குள் ஏலம் எடுத்தனர்.

இப்போழுது இந்த ஐ.பி.எல். காய்ச்சல் உலகம் முழுதும் பரவி வருகிறது. அமெரிக்காவில் கூட ஐ.பி.எல். பாணி கிரிக்கெட் வரப்போகிறது. இனி வீரர்களுக்க்கு டெஸ்ட் கிரிக்கெட்டிலோ, ஒரு நாள் சர்வதேச போட்டிகளிலோ விளையாடுவதற்கு ஏது நேரம்? குறைந்த அளவில் கிரிக்கெட், ஆனால் மிகப்பெரிய தொகையை ஈட்டுவது. இதுபோன்ற ஒரு போக்கைத்தான் நாம் இப்போது கண்டு வருகிறோம்.

இது உலக அளவில் நடக்கிறது. அதன் நடைமுறைகளைக் கட்டுப்படுத்த கிரிக்கெட் அமைப்புகள் உள்ளன.

ஆனால் சமீபத்தில் கர்நாடகா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள கர்நாடகா பிரீமியர் லீக் என்ற உள் மாநில இருபதுக்கு 20 தொடர் அபாய மணியை ஒலித்துள்ளது.

FILE
ஐ.பி.எல். போலவே 8 அணிகள், ஐ.பி.எல். போலவே தனியார் உரிமைதாரர்கள் அதே பாணியில் அனைத்தும் என்ற வகையில் இறங்கியுள்ளது கர்நாடகா கிரிக்கெட் சங்கம். கிரிக்கெட் போட்டிகளுக்கான தேதிகள் கூட குறித்தாகிவிட்டது. செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது மாவட்ட அளவில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்கள், தேசிய அளவில் வளர்ச்சி பெறுவதற்காக இந்த யோசனை நடைமுறைபபடுத்தப்பட்டுள்ளதாக, கர்நாடகா கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீகண்டதத்தா உடையாரும், பிரிஜேஷ் படேலும் கூறியுள்ளனர்.

8 அணிகளுக்கான உரிமையாளர் பொறுப்பிற்கு 40க்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஒரு முன்னாள் நிழலுலக தாதாவும் இருப்பதாக‌த் தெரிகிறது. ஆனால் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை.

FILE
இந்த கே.பி.எல். கிரிக்கெட் என்ற யோசனையையே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கர்நாடகாவைச் சேர்ந்தவருமான அனில் கும்ளே கடுமையாக எதிர்த்துள்ளார். "கே.பி.எல். என்றால் என்ன? இதுபோன்ற ஒன்றை துவங்கியிருப்பதன் முழு நோக்கம் என்ன? அப்படி துவங்குவதென்றால் கர்நாடகா கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ. ஒதுக்கும் தொகையிலிரு‌‌ந்தே நடத்தலாமே? ஏன் தனியார் உரிமையாளர்களை அழைக்க வேண்டும்? என்று தொடர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதேபோல் கிரிக்கெட்டில் பிரதானமாக இயங்கும் மற்ற மாநிலங்களும் பிரீமியர் லீக் கிரிக்கெட்டை துவங்கினால் என்ன ஆகும் என்பதை யோசிக்க முடியவில்லை. அரசியல்வாதிகளும், பணம் கொழிக்கும் தாதாக்களும் இதனை எடுத்து நடத்தினால் வீரர்களின் நிலை என்ன? கிரிக்கெட்டின் நிலை என்ன?

இதுபோன்ற ஒரு கிரிக்கெட் தொடர் எப்படி நடத்தப்பட முடியும்? இதற்கான விதிமுறைகள் உள்ளனவா? உண்மையில் கிரிக்கெட்டிற்கு இது நல்லதா? வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்லதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் எதிர்மறையானதாகவே இருக்கும்.

உடனே இந்த அபாயப் போக்கை பி.சி.சி.ஐ. தடுத்து நிறுத்த வேண்டும். கிரிக்கெட் திறன்களை ஒரு நாளும் இதுபோன்ற முறையில் வளர்த்தெடுக்க முடியாது.

ஏற்கனவே பலமான உள் மாநில, மாவட்ட கிரிக்கெட் அமைப்புகள் நம் நாட்டில் உள்ளன. லீக் கிரிக்கெட் போட்டிகள், மாவட்ட கிரிக்கெட், மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட், கல்லூரி, பல்கலைக் கழகம், பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றின் மூலம் மாநில ரஞ்சி போட்டி அணிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த உள் மாநில, மாவட்ட, கிரிக்கெட் போட்டிகள் தவிர சில பெரிய நிறுவனங்கள் தங்கள் அணியை முறைப்படி லீக் கிரிக்கெட்டில் நுழைக்கும். அதாவது கெம்ப்ளாஸ்ட் மெட்ராஸ் என்ற நிறுவனம் ஒரு அணியை களமிறக்குகிறது என்றால் அது தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு நாக்-அவுட் போன்ற கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றே டிவிஷன் லீகிற்குள் நுழைய முடியும்.

அவ்வாறு நுழைந்து புகழ் பெற்ற அணிகள் உள்ளன. கெம்ப்ளாஸ்ட் மெட்ராஸ், ஸ்பிக், இந்தியா பிஸ்டன்ஸ் போன்ற அணிகள் இவ்வாறு புகழ் பெற்றன. இது போன்ற நிறுவன அணிகளிலிருந்து ஒரு வீரர் ரஞ்சியிலோ அல்லது இந்திய அணியிலோ இடம்பெறும் போது அது அந்த நிறுவனத்திற்கு புகழ் சேர்ப்பதாய் அமையும்.

அதே வேளையில் லீக் கிரிக்கெட்டில் அபாரமாக திறமை கொண்ட அணி, நிதிப் பற்றாக்குறையால் கிரிக்கெட்டை தொடர முடியாமல் கலைக்க நேரிடும்போது பெரிய நிறுவனங்கள் அந்த அணிக்கு நிதியுதவி செய்து கிரிக்கெட்டை வளர்த்து வந்தனர்.

இவ்வாறுதான் கிரிக்கெட் வளர்ந்துள்ளது. இன்றும் அத்தகைய முறைகளையே கடைபிடிக்க வேண்டும். ஒரு முறைப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் நிறுவனமோ அல்லது தனி நபர்களோ இணைந்து ஸ்பான்சர் செய்து கிரிக்கெட் அணிகளை வளர்க்கலாம்.

அவ்வாறுதான் இப்போதும் இருந்து வருகிறது. ஆனால் கர்நாடகா சங்கம் தற்போது அறிவித்துள்ள கர்நாடகா பிரீமியர் லீக் போல் நாடு முழுதும் துவங்கப்பட்டால், கிரிக்கெட் வணிக மயமாவதோடு, அரசியல்வாதிகள், தாதாக்கள் நுழைவால் குற்றமயமாகிவிடும் அபாயமும் உள்ளது. ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கக் கூடிய சூதாட்டங்களுக்கு அது வழி வகுக்கும் அபாயமெல்லாம் உள்ளது.

உள் மாநில அல்லது மாவட்ட கிரிக்கெட்டை தனியார் குத்தகைக்கு எடுத்துக் கொண்டால் தகராறுகளும், வெட்டுக் குத்துக்களும் தெருச் சண்டை நிலைக்குப் போய், வளரும் கிரிக்கெட் வீரர்களெல்லாம் ஒரு காலத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம்!

இந்த உள்-அமைப்புகளை மேலும் சீரான முறையில் நடத்துவதுதான் மாநில கிரிக்கெட் சங்கங்களின் வேலையே தவிர, உள்ளூர் கிரிக்கெட்டையும் தனியாரிடம் அடகு வைப்பதன் மூலம் கிரிக்கெட் திறமைகளை வளர்த்தெடுக்க முடியாது.

நாம் எவ்வளவோ கிரிக்கெட் ஆட்டங்களை 'டோர்னமென்ட்' என்ற பெயரில் நம் ஊர்களில் பார்த்திருப்போம், 40 அணிகள் 50 அணிகள் மோதும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் தொடர்கள், லெதர் பந்து கிரிக்கெட் தொடர்கள் ஆகியவை நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த கிரிக்கெட் தொடர்களிலெல்லாம் குண்டர்களின் ஆதிக்கமே பெரிதாக இருக்கும். மிகப்பெரிய மோதல்கள் ஏற்பட்டு கொலைகளெல்லாம் கூட நடந்துள்ளதாக நாம் பத்திரிக்கை செய்திகளில் படித்திருக்கிறோம்.

கர்நாடாகா பிரீமியர் லீக் போன்று ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பிரீமியர் லீக் கிரிக்கெட்டைத் துவங்கி அது தாதாக்கள், அரசியல்வாதிகள் கையில் சிக்கினால் நாம் மேலே குறிப்பிட்ட உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் போலத்தான் இதுவும் இருக்கும்.

இந்த ஆபத்தான போக்கிற்கு பி.சி.சி.ஐ. முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எந்த விளையாட்டு ஆனாலும் அதன் உணர்வுடன் ஆடப்படும்போதுதான் அந்த விளையாட்டு உண்மையான உணர்வையும், ஆட்டக்காரர்களின் திறனையும் வெளிப்படுத்துவதாக அமையும். எனவே பணத்தின் ஆதிக்கம் நுழையும் போது முதல் களப்பலி ஆவது ஆட்டவுணர்வே. இதனை தடுத்து கிரிக்கெட் ஆட்டத்தை காப்பாற்ற பி.சி.சி.ஐ. முன்வர வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்