ஒளிவட்டம் இழந்த ஆஸி.! சமாளிக்குமா இந்தியாவை?

திங்கள், 6 அக்டோபர் 2008 (17:46 IST)
இந்திய ஆஸ்ட்ரேலிய தொடர் அதன் அனைத்து விதமான தொடருக்கு முந்தைய ஊதிப்பெருக்கல் கருத்துக் களத்திற்கிடையே இம்மாதம் 9ஆம் தேதி துவங்குகிறது. இன்னமும் நமது ஊடகங்கள் ஆஸ்ட்ரேலியாவை "வெல்ல முடியாத" (Invincible) என்ற முன் ஒட்டுடன் வர்ணித்து வருகின்றன.

நாம் கடந்த முறை ஆஸ்ட்ரேலியாவிற்கு சென்று விளையாடிய பிறகு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவும், சமீபமாக வங்கதேசத்திற்கு எதிராக மட்டும் ஆஸ்ட்ரேலியா விளையாடியுள்ளது. இந்த இரண்டு "சப்பை" அணிகளையும் அவர்கள் பந்தாடினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இன்னமும் 'வெல்ல முடியாத' என்ற முன் ஒட்டிற்கு அந்த தகுதி பெற்றுள்ளதா என்றால் சந்தேகமே.

webdunia photoFILE
ஆஸ்ட்ரேலிய அணியின் மீது ஏற்றப்பட்ட இந்த ஒளிவட்டம் குறித்து மேத்யூ ஹெய்டன் கூறுகையில், அது கிரிக்கெட் ஆட்டத்தில் படிபடிப்படியாக பெற்ற ஒன்று, ஆனால் அது நிஜமாக இருக்க வேண்டிய தேவையில்லை என்று கூறியுள்ளார். முன்னாள் ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளரோ ஒளிவட்டம் இருந்ததாக ஒப்புக்கொண்டு அது தற்போது மங்கியுள்ளது என்கிறார். ஆனால் கடந்த முறை ஆஸ்ட்ரேலியாவில் இந்தியா விளையாடிய விதம் ஆஸ்ட்ரேலிய அணி வீரர்களிடம் நிறைய சுய சந்தேகங்களை எழுப்பியது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

எனவே இந்த தொடர் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும் என்று நம்பலாம். ஏனெனில் சுழற்பந்து வீச்சிற்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவின் பலவீனம் பயிற்சி போட்டியில் வெளிப்பட்டது. பயிற்சிப் போட்டிக்கு முந்தைய ராஜஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் ஆஸ்ட்ரேலியா 218 ரன்களுக்கு சுருண்டது. வாரியத் தலைவர் அணிக்கு எதிராக பியூஷ் சாவ்லா, பிராக்யன் ஓஜா ஆகியோரிடம் திக்கித் திணறியது.

webdunia photoFILE
இத்தனைக்கும் நம் முன்னாள் பயிற்சியாளரும், தற்போதைய 'உளவாளி’யுமான கிரேக் சாப்பல், ரிக்கி பாண்டிங்கின் கண்களில் "எஃகினாலான மின்னொளியை" (Steely Glint) தேடிக் கண்டுபிடித்துள்ள போதும் சுழற்பந்து வீச்சிற்கு பாண்டிங்கின் மட்டையும் "எஃகினாலானது" போல் செயலற்று இருந்தது.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள கண்களில் மின்னொளியும் தேவையில்லை, அதிரடி ஆட்டமும் தேவையில்லை. நிதானம் தேவை. கிரேக் சாப்பலை விடவும் சற்றே செயல்பாட்டு ரீதியாக யோசிக்கும் இயன் சாப்பல் பாண்டிங்கிற்கு நிதானம்தான் தேவை என்றார். நான் உலக நாயகன் என்று மட்டையை நீட்டிக் கொண்டு செல்லக்கூடாது என்று எச்சரித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில், அவர் திருத்த முயலும் குற்றவாளிகள், எம்.ஜி.ஆரின் கண்களில் இந்த 'எஃகினாலான மின்னொளியை' கண்டபிறகு மனம் மாறுவார்கள். ஆனால் நம் பாண்டிங் கிரேக் சாப்பல் கண்ட மின்னொளி கைகொடுக்காமல் போனால் அதே கண்களில் சிட்னி டெஸ்ட் போட்டியில் செய்த அதே மோசடியின் குறியீடாக 'Stealy glint'-ஐ பார்ப்பாரா? சரி அதை விடுவோம்.

அந்த 4 பேருக்கு...

அணிகளை பொறுத்தவரை நாம் ஆஸ்ட்ரேலிய அணியை பற்றி ஏற்கனவே பலமும் பலவீனமும் என்று அலசியுள்ளோம்.

webdunia photoFILE
இந்திய அணியைப் பொறுத்தவரை, நாமெல்லாம் பேசிப் பேசி வாய் ஓய்ந்து போன "அந்த 4 பேர்" (சச்சின், திராவிட், கங்கூலி, லக்ஷ்மண்) எப்படி ஆடுவார்கள் என்பதை பொறுத்து தொடரின் போக்கு நிர்ணயிக்கப்படும். இந்த 4 வீரர்களில் இன்னிங்ஸிற்கு இரண்டு பேர் நன்றாக திறமையை வெளிப்படுத்தினால் போதுமானது. குறிப்பாக சேவாக் நன்றாக விளையாடி ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களின் கைகளை ஒடித்த பிறகு, இவர்கள் களமிறங்கி அவர்களின் கைகளை ஓங்க விடாமல் பார்த்துக் கொள்வது முதல் குறிக்கோளாக இருக்கவேண்டும்.

தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னமும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று அணியில் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இவர் மூத்த வீரர்களின் கடமையை நினைவூட்டும் அறிக்கைகளை தவிர்த்துக் கொண்டு தனது மங்கி வரும் பேட்டிங் திறன்களை மேம்படுத்த பாடுபட்டால் நல்லது. இவர் களமிறங்கும் இடத்தில் முன்பு இந்திய கண்கள் கபில் தேவை கண்டு மகிழ்ந்துள்ளது என்று யாராவது அவருக்கு நினைவூட்டினால் நல்லது.

திராவிட் போல விளையாட நம்மிடையே கய்ஃப், கோளி, ரோஹித் என்று ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். இவர் இவருக்கேயுரிய அதிரடி ஆட்டத்தை ஆடுவதுதான் சிறந்தது. இதனை பயிற்சியாளர்தான் கூறவேண்டும். ஆமாம், இந்திய அணியின் பயிற்சியாளர் யார்? சச்சினா? தெரிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணி முரளி கார்த்திக்கை அணிக்குள் அழைத்து 3 சுழற்பந்து வீச்சாளர் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்று களமிறங்குவதுதான் சிறந்தது.

எப்படியும் ஆட்டக்களம் பேட்டிங்கிற்கு சாதகமாக முதல் 2 அல்லது இரண்டரை நாட்கள் இருக்கும். இந்த நிலையில் பூவா தலையாதான் டெஸ்ட் முடிவை தீர்மானிக்கும் என்று நம்பலாம். இதனை நாம் இலங்கை தொடரிலும் பார்த்தோம். எனவே 3 சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.

அதேபோல் ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து சோடை போகக்கூடியதல்ல. இந்தியாவில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவர்கள் நிறைய சவாலான கிரிக்கெட் போட்டிகளை விளையாடியவர்களே என்பதில் இந்தியா கவனமாக இருக்கவேண்டும்.

ஆஸ்ட்ரேலிய அணியின் உத்தி, கடந்த 2004- 05 தொடர் போலவேதான் இருக்கும். ஏனெனில் அதே முறையைத்தான் அவர்கள் நாம் ஆஸ்ட்ரேலியா சென்ற போது மெல்போர்ன் டெஸ்டில் கடைபிடித்து வீழ்த்தினர். அது என்ன உத்தி என்றால் ஒரு ஆதிகால கிரிக்கெட் உத்திதான். 2 ஸ்லிப் 2 கல்லி, பாயிண்ட் சற்று தள்ளி, கவர், மிட் ஆஃப் சற்று நெருக்கமாக. ஆன் திசையில் ஷாட் மிட் விக்கெட், ஒரு ஷாட் மிட் ஆன் நிறுத்தி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போட்டு வெறுப்பேற்றுவது.

இல்லையெனில், ஒரு ஸ்லிப் ஒரு கல்லி, பயிண்ட், ஷாட் கவர், மிடாஃப் என்று நெருக்கமாக வைத்து விட்டு, 4 ஃபீல்டர்களை ஸ்கொயர் லெக், மிடான், மிட் விக்கெட் ஒரு டீப் ஸ்கொயர் லெக் என்று வைத்துக் கொண்டு ஸ்டம்புகளுக்கு போட்டு ஃபீல்டிங்கை நெருக்கமாக வைத்து இந்தியாவை பவுண்டரி அடிக்க விடாமல் வெறுப்பேற்றுவது.

webdunia photoFILE
இந்த பழைய கால முறைக்கு இந்திய பேட்ஸ்மென்கள் மடத்தனமாக ஒத்துப் போகுமாறு விளையாடினால்தான் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெறும் என்று இயன் சாப்பல் சமீபத்தில் எழுதியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் முன்பு போல் அதிரடி ஆட்டம் ஆடுவதில்லை, மாறாக மரபான பேட்டிங்கிற்கு அவர் திரும்பியுள்ளதாலும், எந்த கள உத்தி செய்தாலும் பவுண்டரி அடிக்க முடியக்கூடிய அவரது சிறப்புத் திறமையும் ஆஸ்ட்ரேலிய அணியின் இந்த ரன் கட்டுப்படுத்தும் உத்தியை மடத்தனமாக்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும் சுலபமாக சிங்கிள் எடுக்க முடிகிறதென்றால் சச்சின் பவுண்டரி அடிப்பதற்காக ரிஸ்க் எடுக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். பலவீனமான பந்து வீச்சைக் கொண்டிருப்பதால், ஆஸ்ட்ரேலிய அணி இம்முறை பிரட் லீயை துருப்புச் சீட்டாக அதிரடி பந்து வீச்சிற்கு பயன்படுத்தி மற்றவர்களை ரன் கட்டுப்படுத்தும் விதமாகவே பயன்படுத்தும். இதிலும் சிக்கல் உள்ளது. அவ்வளவு வேகமாக பிரட் லீ வீசினால், காயமடைந்து 2-வது டெஸ்ட்... அல்ல தொடரையே துறக்க நேரிடலாம்.

ஆனால் ஆஸ்ட்ரேலிய அணி 2 சுழற்பந்து வீச்சாளை முழுதுமாக பயன்படுத்துவதுதான் சிறந்தது. ஏனெனில் சமீப காலமாக இந்திய மூத்த வீரர்கள் சுழற்பந்து வீச்சிற்கு மடிந்து வருகின்றனர். இந்த விதத்தில் சைமன்ட்ஸ் இல்லாதது அந்த அணியில் ஒரு மிகப்பெரிய ஓட்டையே.

இந்திய அணியின் பந்து வீச்சில் ஜாகீர் கான், இஷாந்த் ஷர்மா பெரிய அளவிற்கு ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் அவ்வப்போது சில விக்கெட்டுகளை வீழ்த்தி அச்சுறுத்தும் திறமையுடையவர்கள். அனில் கும்ளே ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக இரண்டு நாடுகளிலுமே விக்கெட்டுகளை வீழ்த்திக் குவித்துள்ளார் என்றாலும், சமீபத்தில் அவர் இலங்கையில் வீசியதும், இரானி கோப்பை போட்டியில் வீசியதும் நிச்சயமாக திருப்திகரமாக இல்லை என்றே கூறவேண்டும். இவரை 'மார்க்' செய்து ஆஸ்ட்ரேலிய வீரர்கள் தாக்கினால் இந்திய பந்து வீச்சு அதன் மனோபலத்தை இழக்க நேரிடலாம், ஆனால் எல்லாம் கும்ளே கையில்தான் உள்ளது.

எனவே ஏறத்தாழ ஒரே மாதிரியான பேட்டிங் திறமைகள் கொண்ட அணிகளே இரு அணிகளும். ஒருவருக்கு ஒருவர் என்று ஒப்பிட்டு கூறிவிடலாம். ஆனால் பந்து வீச்சு? இதுதான் ஆஸ்ட்ரேலியாவின் முன் இன்று எழுந்துள்ள கேள்வி.

இந்த தொடரில் ஒரு டெஸ்டில் இரு முறை இந்திய அணியை வீழ்த்தும் பலம் ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சில் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் மறுபடியும் ஒரு கேள்வி, காயமும், அஜந்தா மென்டிஸ், முரளிதரன் ஆகியோர் "அந்த 4 பேர்" உத்திகளிலும் ஏற்படுத்திய ஓட்டைகளும் சந்தேகங்களும் பலமற்ற ஆஸ்ட்ரேலிய வீச்சை பலமானதாக மாற்றிவிடக்கூடியதோ?

சவாலான இந்த இரு கேள்விகளையும் இரு அணிகளும் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதை பொறுத்து வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும் என்பது உறுதி.