இந்தியா பற்றிய ஹெய்டன் கருத்திற்கு பதிலடி!

webdunia photoWD
இந்தியாவில் வந்து டெஸ்ட் தொடரை 2- 0 என்று தோற்ற ஆஸ்ட்ரேலிய அணியின் வீரர்கள் வழக்கம் போல் தங்கள் நாட்டுக்கு சென்று விளையாடி விட்டு வந்த நாட்டை மட்டம் தட்டிப் பேசியுள்ளனர். இதில் குறிப்பாக மேத்யூ ஹெய்டன் இந்தியாவை "மூன்றாம் உலக நாடு" என்று வர்ணித்துள்ளது இந்திய ஊடகங்கள் மற்றும் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாமல், ஒரு டெஸ்ட் தடையை எதிர் நோக்கியிருந்த ரிக்கி பாண்டிங், நாக்பூர் டெஸ்ட் 4ஆம் நாள் ஆ‌ட்ட‌த்‌தி‌ன் தேனீர் இடைவேளைக்குப் பிறகு தனது சுயநலம் கருதி, பகுதி நேர பந்துவீச்சாளர்களை வீச வை‌த்து வெற்றி பெறுவதற்கான மிக மங்கிய வாய்ப்பையும் இழந்தார். ஆனால் அவர் முக்கியப் பந்து வீச்சாளர்களை வீச அழைத்திருந்தாலும் முடிவு மாறியிருக்குமா என்பது கேள்வியே.

ஏனெனில் பெங்களூர் டெஸ்டில் ஹர்பஜனும், ஜாகீர் கானும் ஆஸ்ட்ரேலியாவி‌ன் முக்கிய வீச்சாளர்கள் உட்பட அனைவரது பந்து வீச்சையும் அடித்து நொறுக்கி போட்டியை ஆஸ்ட்ரேலியாவிடமிருந்து பறித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த மேத்யூ ஹெய்டன், "நாங்கள் எப்பவும் இந்திய பேட்ஸ்மே‌ன்கள் முகத்தை நிமிர்த்துவதற்காக, கையை இடுப்பில் வைத்த படி காத்திருக்க வேண்டியதாயிற்று அல்லது சைட்ஸ்க்ரீன் (Sight Screen) அருகே எப்போதும் யாராவது குறுக்கே சென்று கொண்டிருந்தார்கள், இது போன்று மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படும் வெறுப்புகளுக்கு அளவில்லை... இதனுடன் கடும் வெயில் வேறு" என்று திமிராக கூறினார்.

இது தற்போது இந்திய ஊடகங்களின் பதிலடிக்கு இரையாகியுள்ளது. பிரபல இந்திய ஆங்கிலமொழி இணையதளம் ஒன்றில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதிக்குழு தலைவர் ராஜீவ் ஷுக்லா "ஹெய்டனின் கருத்துக்கள் முழுக்கவும் தேவையில்லாதது, மந்தமாக ஓவர்களை வீசுவது உங்கள் பழக்கம் என்றால் இந்தியாவை ஏன் மூன்றாம் உலக நாடு என்று குற்றம்சாட்ட வேண்டும்? இ‌ந்‌தியா ஒரு பெருமைமிக்க நாடு, அவரது கருத்து க‌ண்டி‌க்க‌த்த‌க்கது" என்றார்.


பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூட ஹெய்டனின் இந்த கருத்தை கடுமையாக எதிர்த்துள்ளார், "ஆஸ்ட்ரேலியா தோல்வியடைந்த ஒரு அணி, அவர்கள் தோல்வியடையும் போதெல்லாம் அந்தரங்கத் தாக்குதலில் இறங்குவார்கள், இதெல்லாம் புளித்துப்போன விஷயம், தங்கள் நாட்டிற்கு சென்ற பிறகு இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்று கூறுகிறார்கள், இந்தியா தற்போது ஒரு வல்லரசு, ஆஸ்ட்ரேலியாவைக் காட்டிலும் 100 ஆண்டுகள் முன்னிலயில் உள்ளது, இந்தியாவுடன் ஒப்பிடுகையில் ஆஸ்ட்ரேலியா ஒரு கிராமத்தை விட பெரிது கிடையாது" என்று கூறியுள்ளார் வாசிம் அக்ரம்.

webdunia photoWD
இந்திய அணித் தலைவர் மகே‌ந்‌திர ‌சி‌ங் தோ‌னி, ஹெ‌ய்ட‌ன் தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக வீரராக இருந்தாலும், அவரது இந்த மோசமான கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆஸ்ட்ரேலியா முதல் உலக நாடாக இருந்தாலும் மூன்றாம் உலக நாடாக இருந்தாலும் அவர்கள் ஆட்டம் எந்த விதத்திலும் மாறிவிடவில்லையே என்று கூறியுள்ளார்.

உலகம் முழுதும் ஆஸ்‌ட்ரேலிய அ‌ணி விளையாடியுள்ளது, அங்கெல்லாம் கூட அவர்கள் பந்து வீச எடுத்துக் கொண்ட நேரம் மந்தமாகவே இருந்துள்ளது என்றார் தோனி.

ஆங்கில இணையதளமான ரீடிஃப்.காம் இந்தியாவில் வந்து பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3,75,000 அமெரிக்க டாலர்களைப் பெற்றுக் கொண்ட மேத்யூ ஹெய்டன் அப்போது இது போன்ற புகார்களைக் கூறவில்லை என்று எழுதியுள்ளது.

மற்ற ஊடகங்களும், வளரும் இந்தியப் பொருளாதாரம் பற்றியும், வளரும் நடுத்தர வர்கத்தினரின் வாழ்க்கைத்தரம் பற்றியும் எழுதி, இந்தியாவில் உள்ள கிரிக்கெட் பணத்தில் ஹெய்டனும் பயனடைந்துள்ளார் என்று தாக்கி எழுதியுள்ளன.