1990ஆம் ஆண்டுகளில் உதித்த சச்சின், லாரா என்ற இந்த மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகளில் லாராவின் சாதனை மிகுந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது, சச்சினின் சாதனை சகாப்தம் இன்னமும் தொடர்கிறது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் 77 ரன்கள் எடுத்தால் லாராவின் 11,953 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய உச்சத்தை எட்டவுள்ளார்.
சமகால அல்லது சம திறன் படைத்த வீரர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்குள் ஊறிய ஒரு விஷயம். ஒரு காலத்தில் கபில்தேவ், இம்ரான், கபில்தேவ்-இயன் போத்தம், கவாஸ்கர்-பேரி ரிச்சர்ட்ஸ் என்று நாம் பல வேளைகளில் ஒப்பிட்டுப் பார்த்து நண்பர்களிடம் தகராறு கூட ஏற்பட்டிருக்கும்.
webdunia photo
WD
சச்சினின் இந்த உலக சாதனையை முன்னிட்டு, முன்பு ஓங்கியிருந்த, ஆனால் தற்போது ஓய்ந்து போன சச்சின் - லார ஒப்பிட்டை நாம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்ப்போம். ஆஸ்ட்ரேலியா தற்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளதால். ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சச்சின், லாரா ஆகியோரது ரன் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
131 டெஸ்ட்களை விளையாடியுள்ள பிரையன் லாரா 11,953 ரன்களை 52.88 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். 34 சதங்கள் 48 அரை சதங்கள்; டெஸ்ட் வாழ்வில் 88 சிக்சர்களை லாரா அடித்துள்ளார் 161 கேட்ச்களை பிடித்துள்ளார்.
சச்சின் 150 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். ஏற்கனவே லாராவைக் காட்டிலும் 19 டெஸ்ட் போட்டிகளை கூடுதலாக விளையாடிவிட்டார். 11,877 ரன்களை 54.23 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். 39 சதங்கள் 49 அரை சதங்கள். கேட்ச்கள் 98; சிக்சர்கள் 47.
ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இருவருமே 1991- 92 ஆம் ஆண்டு தொடரில்தான் முதல் போட்டியை விளையாடுகின்றனர். 1992 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான தனது கிரிக்கெட் சகாப்தத்தில் லாரா ஆஸ்ட்ரேலியாவுடன் 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். இதில் 2856 ரன்களை 51.00 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். 9 சதங்கள் அடித்துள்ளார்.
ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 19 டெஸ்ட்களை ஆடியுள்ள லாரா 1469 ரன்களை 41.97 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச சொந்த ரன்கள் 277.
மேற்கிந்திய தீவுகளில் 12 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள லாரா 1387 ரன்களை 66.04 என்ற சராசரி விகிதத்தில் பெற்றுள்ளார். அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கை 213. அவர் அடித்த 9 சதங்களில் 4 ஆஸ்ட்ரேலிய மண்ணில், 5 மேற்கிந்திய தீவுகளில்.
சச்சின் டெண்டுல்கரை எடுத்து கொண்டால் ஆஸ்ட்ரேலியாவுடன் 25 டெஸ்ட் போட்டிகளில் 2352 ரன்களை 56 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 16 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள சச்சின் 1522 ரன்களை 58.33 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். இந்தியாவில் விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் 830 ரன்களை 51.87 என்ற சராசரியில் பெற்றுள்ளார்.
லாராவும் 9 சதங்கள், சச்சினும் 9 சதங்கள். ஆனால் சச்சின் ஆஸ்ட்ரேலியாவில் 6 சதங்களையும் இந்தியாவில் 3 சதங்களையும் அடித்துள்ளார். ஆஸ்ட்ரேலியாவை பொறுத்தவரை சச்சிந்தான் அவர்களுக்கு சிம்ம சொப்பனம் என்று இந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக மோசமான தொடர் என்று எடுத்துக் கொண்டால் பிரையன் லாராவிற்கு 1996ஆம் ஆண்டு தொடர் மிக மோசமானது. 3 போட்டிகளில் வெறும் 77 ரன்களை 12.83 என்ற சராசரியில் லாரா எடுத்துள்ளார். சச்சினுக்கு மிக மோசமான தொடர் என்றால் அது 2003 தொடர்தான். ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக இந்த ஆண்டில் 3 போட்டிகளில் 82 ரன்களை 16.40 என்ற சராசரியில் சச்சின் பெற்றுள்ளார்.
மிக அபாரமான தொடர் என்று எடுத்து கொண்டால் இருவருக்குமே நிறைய உள்ளன. குறிப்பாக ஒன்றை கூறவேண்டுமென்றால் சச்சினுக்கு 1998 தொடர்தான் 3 டெஸ்ட்களில் 446 ரன்களை 111.50 என்ற சராசரியில் எடுத்துள்ளார். லாராவிற்கு 1993, 1999 என்ற இரண்டு தொடர்கள் ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக 85க்கும் மேல் சராசரி பெற்றிருந்த தொடராக அமைந்துள்ளது.
webdunia photo
WD
ஆஸ்ட்ரேலையாவிற்கு எதிராக லாரா 3 இரட்டை சதங்களை அடித்துள்ளார். சச்சின் ஒரேயொரு இரட்டை சதம் மட்டுமே அடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு லாரா ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக அடித்த ஒரு சதம் பின்பு இந்த பத்தாண்டுகளில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று வர்ணிக்கப்பட்டது. எதிர் முனையில் கார்ட்னி வால்ஷை வைத்துக் கொண்டு 314 ரன்கள் இலக்கை ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே வீரராக நின்று வெற்றி பெற்றுத் தந்தார். அன்று அவர் 153 ரன்களை எடுத்து வீழ்த்த முடியாத வீரத் திலகமாக திகழ்ந்தார்.
சச்சின் அது போன்ற ஒரு இன்னிங்சை ஆடாவிட்டாலும், மார்க் டெய்லர் தலைமையில் இந்தியா வந்த ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா பெற்றிருந்த 71 ரன்கள் முன்னிலையை இரண்டாவது இன்னிங்சில் தனது 4 மணி நேர அதிரடி 155 ரன்களால் ஒன்றுமில்லாமல் செய்து அந்த போட்டியை வெற்றிபெறுவதற்கு முக்கியமாக அமைந்தது. ஷேன் வார்ண் பந்து வீச்சை எப்படி அடித்து நொறுக்க வேண்டும் என்று உலக பேட்ஸ்மென்களுக்கு எடுத்துக் காட்டினார் சச்சின்.
அதே போல் உலகின் மற்றொரு தலை சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முரளிதரனை இதே பாணியில் முரளிதரனின் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய பெருமை லாராவைச் சாரும். 3-0 என்று மேற்கிந்திய அணி உதை பட்டாலும், இரண்டு மிகப்பெரிய இரட்டை சதங்களுடன் 650 ரன்களை அந்த தொடரில் லாரா குவித்ததை யாராலும் மறக்க முடியாது.
இந்த இருவரும் ஒரே பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டிருக்கின்றனர். ஆனால் சச்சின் ஆரம்ப காலத்தில் கார்ட்னி வால்ஷ், ஆம்புரோஸ், இயன் பிஷப்,போன்ற மேற்கிந்திய தீவுகளின் பயங்கர வேகப்பந்து வீச்சை எதிர் கொண்டார். லாராவிற்கு அந்த விஷயத்தில் தப்பித்தார். ஆனால் மோசமான தொடர் என்று லாரவிற்கு நாம் கூறவேண்டுமென்றால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு தொடரில் டொனால்ட் அவரை அதிக முறை ஆட்டமிழக்க செய்தார். ஒரு முறை ஹிட் விக்கெட் கூட ஆனார். சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வில் ஹிட் விக்கெட் ஆனதில்லை என்பது அவரது பேலன்சிற்கு ஒரு எடுத்துக்காட்டு. சச்சினுக்கு மோசமான தொடர் என்றால் அது கடந்த இலங்கை தொடராக மட்டுமே இருக்க முடியும்.
எல்லா விதத்திலும் நாம் லாராவையும் சச்சினையும் ஒன்றுக்கு ஒன்று என்று ஒப்பிட்டு காட்ட முடியும். ஆனால் ஒரு விஷயத்தில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது. கடைசி வரை லாரா தன் ஆட்டப் பாணியை மாற்றிக் கொள்ளவேயில்லை. அந்த அதிரடி முறையில்தான் 400 ரன்களையும் தொட முடிந்துள்ளது.
ஆனல் சச்சின் டெண்டுல்கர் சமீபகாலமாக விளையாடி வரும் ஆட்டம் தனது கிரிக்கெட் ஆயுளை நீடிக்க வேண்டி பல வழிகளில் சமரசம் செய்து கொண்ட ஆட்டமாகும். இனிமேல் நாம் மெக்ராவையும், மெக்டர்மட்டையும், இயன் பிஷப்பையும் நடந்து வந்து ஆடிய சச்சினை ஒரு போதும் காணவியலாது. ஆனால் லாரா 40 வயது வரை ஆடியிருந்தாலும் அவரது ஆட்டப் போக்கு மாறியிருக்காது என்பதே இருவருக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளி.
ஷேன் வார்ன் சமீபத்தில் வெளியிட்டுள்ள தனது புத்தகத்தில் தான் பார்த்த 100 சிறந்த வீரர்கள் பட்டியலில் சச்சினை முதலிடத்திலும் லாராவை இரண்டாவது இடத்திலும் வைத்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் சச்சினின் மனோபலம், லாராவைக் காட்டிலும் உறுதியானது என்றார்.