16 ஆண்டு கால ஆஸ்ட்ரேலிய கோட்டை சரிந்தது!

webdunia photoWD
மெல்போர்ன் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆஸ்ட்ரேலியாவை கிரிக்கெட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வென்றெடுத்து சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்ட்ரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. 1992-93 ஆம் ஆண்டு மேற்கிந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்ட்ரேலியா அதற்குப் பிறகு இப்போதுதான் சொந்த மண்ணில் தொடரை இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணி நிறவெறிக் காரணங்களுக்காக மற்ற நாடுகளால் கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பிறகு மீண்டும் 1992ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டை ஆடத் தொடங்கியது. அந்த வகையில் இப்போதுதான் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்ட்ரேலியாவை முதன் முதலாக டெஸ்ட் தொடரில் வெல்கிறது.

ஆஸ்ட்ரேலியாவில் 1964- 65 ஆம் ஆண்டிலும் 1969ஆம் ஆண்டிலும் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது. அதன் பிறகு இப்போது கிரேம் ஸ்மித் தலைமை தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

ஆஸ்ட்ரேலிய ஊடகங்கள் "மூழ்கும் கப்பல்" என்றும் "சரியும் கோட்டை" என்றும் தங்களது புலம்பல்கலை வெளியிடத்தொடங்கி விட்டன. கோட்டைகள் ஒரு நாளில் சரிவதில்லை. 2001ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஆஸ்ட்ரேலிய அணிக்கு கொல்கத்தாவில் லக்ஷ்மண், திராவிட், ஹர்பஜன் சிங் ஆகியோர் வித்திட்ட நீண்ட இறுதி ஊர்வலத்தின் துவக்கம், 2005 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் மையக் கட்டத்தை எட்டியது. ஆனால் மீண்டும் இங்கிலாந்தை 5-0 என்று வெற்றி கொண்டு இழந்த மதிப்பைப் பெற்றது ஆஸ்ட்ரேலியா. இதற்குக் காரணம் இங்கிலாந்தின் தயாரிப்பின்மையும் மோசமான கிரிக்கெட் ஆட்டமுமே.

webdunia photoWD
சச்சின் டெண்டுல்கர் தலைமையில் கபில்தேவை பயிற்சியாளராகக் கொண்டு ஆஸ்ட்ரேலியா சென்ற இந்திய அணி 3-0 என்று டெஸ்ட் தொடர் முழுதையும் இழந்தது. ஆனால் அப்போது சிட்னி டெஸ்ட் இரண்டாவது இன்னிங்சில் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், பிரட் லீ ஆகியோரது ஆக்ரோஷமான பந்து வீச்சை துவக்க வீரராக களமிறங்கிய லக்ஷ்மண் அடித்து நொறுக்கி 167 ரன்களை எடுத்தார். அந்த இன்னிங்ஸ் பற்றி பின்பு ஸ்டீவ் வாஹ் குறிப்பிடுகையில் அந்த கோடைக் கால கிரிக்கெட் தொடரின் மிகச்சிறந்த இன்னிங்ஸை லக்ஷ்மண் ஆடியதுதான் என்று புகழ்ந்தார்.

அதன் பிறகு கொல்கத்தாவில் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட பிறகு, ஆஸ்ட்ரேலியா தொடர்ச்சியான சாதனை டெஸ்ட் வெற்றிக் கனவுடன் களமிறங்கி முதல் விக்கெட்டையும் விரைவில் வீழ்த்தியது. அப்போது பயிற்சியாளர் ஜான் ரைட், முதல் இன்னிங்சில் அரை சதம் எடுத்து

ஆட்டமிழக்காமல் இருந்த லக்ஷ்மணை கால்காப்பை கழட்ட வேண்டாம், ஒன்றாம் நிலையில் களமிறங்கவேண்டும் என்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தார். லக்ஷ்மணும் அதற்கு ஒப்புக் கொண்டார். திராவிட் எரிச்சலடைந்தார்.

webdunia photoWD
ஆனால் திராவிடின் எரிச்சல் அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. லக்ஷ்மணு‌ம், திராவிடும் ஒரு நாள் முழுதும் விக்கெட்டை இழக்காமல், கிளென் மெக்ரா, கில்லஸ்பி, ஷேன் வார்ன் ஆகியோரது பந்து வீச்சை ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விரட்டி அடித்து 5வது விக்கெட்டிற்கு 300 ரன்களுக்கு சற்று அதிகமான முன்னிலை பெற வைத்து ஆஸ்ட்ரேலியாவிற்கு அதிர்ச்சி அளித்தனர். இது வெற்றியையே, வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்த அந்த ஆஸ்ட்ரேலிய அணியை அதிர்ச்சிகுள்ளாக்கியது.

5ஆம் நாள் தேனீர் இடைவேளை வரை கூட ஸ்டீவ் வாஹ் தன் அணி வரலாறு காணாத தோல்வியைத் தழுவும் என்று எதிர்பார்க்கவில்லை. ஷேன் வார்ன் தனது மாய லெக் ஸ்பின் பந்து வீச்சினால் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு ஆட்டக்களத்தில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தனது லெக்ச்பின் பந்து வீச்சினால் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த ஹர்பஜன் தனது அபாரமான பந்து வீச்சினால் தேனீர் இடைவேளைக்கு பிறகு 7 ஆஸ்ட்ரேலிய விக்கெட்டுகளையும் பெவிலியனுக்கு அனுப்பினார்.

ஆஸ்ட்ரேலியா வாயடைத்துப் போய் விக்கித்து நின்று அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு சென்னை டெஸ்டில் மீண்டும் லக்ஷ்மண் இரண்டாவது இன்னிங்சில் 67 ரன்களை அடித்து 155 ரன்கள் வெற்றி இலக்கை இந்தியா எடுக்குமாறு செய்தார். இடையில் விக்கெட்டுகள் சரிய மீண்டும் ஹர்பஜன் சிங் தனது மனோபலத்தால் கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் பந்துகளை கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட போதும் வெற்றிக்கு இட்டுச் சென்றார். ஆஸ்ட்ரேலியா 1- 2 என்று தொடரை தோற்றது.

webdunia photoWD
'இன்வின்சிபிள்ஸ்' என்று அழைக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய அணியை வீழ்த்திக் காட்டமுடியும் என்று கங்கூலி தலைமையின் கீழ் அன்று இந்தியா நிரூபித்ததிலிருந்து தொடங்கியது ஆஸ்ட்ரேலியாவின் சரிவு.

கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் என்ற இரண்டு மிகப்பெரிய பந்து வீச்சு மேதைகள் பலமான ஆஸ்ட்ரேலிய பேட்டிங் வரிசையுடன் இணைந்திருந்த போது கங்கூலி பெற்ற அந்த டெஸ்ட் தொடர் வெற்றியும், அதன் பிறகு ரிக்கி பாண்டிங் தலைமையில் 2005 ஆஷஸ் தொடரில் அதே முழு பல ஆஸ்ட்ரேலிய அணியை இங்கிலாந்து 2- 1 என்று வெற்றி பெற்றதுமே "இன்வின்சிபிள்ஸ்" ஆஸ்ட்ரேலிய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய சரிவின் தொடக்கப் புள்ளிகளாகும்.

ஆனால் இங்கிலாந்து அணி அதன் பிறகு முக்கிய பந்து வீச்சாளர்களின் காயங்கள் காரணமாகவும், அந்த ஆஷஸ் தொடரை வென்ற மிதப்பில் இருந்தததன் காரணமாகவும் ஆஸ்ட்ரேலியாவில்..

webdunia photoWD
நடந்த ஆஷஸ் தொடரை 5-0 என்று படு மோசமாக தோற்றது. பழிக்கு பழி வாங்கியதில் அளவுக்கு அதிகமான இறுமாப்பு கொண்ட ஆஸ்ட்ரேலிய அணி, அதன் பிறகே எதிரணி வீரர்களை மதிக்காமல் அறிக்கைகளை விடுவதும், மைதானத்தில் எதிரணி வீரர்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்ளுவதுமான அராஜகப் போக்கு முற்றியது.

ஆனால் இந்தியா தொடர்ந்து ஆஸ்ட்ரேலியாவின் இறுமாப்பிற்கு ஆப்பு வைத்துக் கொண்டுதான் இருந்தது. 2003 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் இந்தியா கேவலமாக ஆஸ்ட்ரேலியாவிடம் தோல்வி தழுவியபோது, ஆஸ்ட்ரேலிய வீரர்கள் போட்ட கூச்சலுக்கு அளவேயில்லாமல் இருந்தது. ஆனால் கங்கூலி/ஜான்ரைட்/டெண்டுல்கர் கூட்டணி அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக விளையாடி மகத்தான் வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்ட்ரேலிய சவாலை எதிர் கொண்டது.

பிறகு 2004ஆம் ஆண்டு ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் அந்த புகழ் பெற்ற தொடர் வந்தது. அப்போதும் ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்ட்ரேலிய வீரர்களும், ஊடகங்களும் இந்திய அணியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

webdunia photoWD
ஆனால் ஸ்டீவ் வாஹின் இறுதி டெஸ்ட் தொடர் அவருக்கு கசப்பாக இருக்க வேண்டும் என்று கங்கூலி முடிவு செய்து விட்டார். அடிலெய்டில் வெற்றி பெற்றது இந்திய அணி. மெல்போர்னில் சேவாகின் அபாரமான ஆட்டம் ஆஸ்ட்ரேலியாவிடமிருந்து வெற்றியை பிடுங்கி சென்றிருக்க வேண்டும் ஆனால் மற்ற வீரர்களின் பங்களிப்பின்மையும், பலமான ஆஸ்ட்ரேலிய பேட்டிங்கும் ஆஸ்ட்ரேலியாவிற்கு வெற்றியை பெற்றுத் தந்தது. சிட்னி டெஸ்டில் தோல்வியிலிருந்து ஆஸ்ட்ரேலியா மயிரிழையில் தப்பியது. ஸ்டீவ் வாஹும் மரியாதையான ஒரு ஓய்வுக் கொண்டாட்டங்களில் ஈடுபட முடிந்தது.

அதன் பிறகு தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்ட்ரேலியாவிற்கு பெரிய சவாலாக இல்லதிருந்தபோதும் ஓரிரு போட்டிகளை டிரா செய்து ஆஸ்ட்ரேலியாவை எரிச்சலடையச் செய்திருந்தது.

ஆனால் ரிக்கி பாண்டிங்கின் திமிர் பிடித்த ஆஸ்ட்ரேலிய அணிக்கும் இந்தியா மீண்டும் ஆப்பு வைத்தது. கும்ளே தலைமை இந்திய அணி இந்த ஆண்டில் பெர்த் டெஸ்டில் பழி வாங்கும் வெற்றியை பெற்று ஆஸ்ட்ரேலியாவின் கோட்டையை பெயர்த்தது. மோசடி தொடரான அதில் இந்தியா தோல்வி தழுவினாலும், ஆஸ்ட்ரேலியாவின் ஆட்டம் குறித்த சில மையமான சந்தேகங்களை இந்தியா உண்டாக்கியது.

பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய தொடரில் ஆஸ்ட்ரேலியா முழுதும் சரணகாதி அடைந்து 2- 0 என்று தோல்வியைத் தழுவியது.

இந்த ஆஸ்ட்ரேலிய தோல்விகளிலெல்லாம் இந்தியாவின் லக்ஷ்மண் மிகப்பெரும் பங்காற்றியுள்ளார். மற்ற கிரிக்கெட் அணிகளில் பெரும் பெயர் படைத்த வீரகள் இருந்திருக்கலாம். ஆனால் ஆஸ்ட்ரேலியா என்றால் லக்ஷ்மண்தான், லக்ஷ்மண் என்றால் ஆஸ்ட்ரேலியாதான் என்று நாம் இன்று கூறும் அளவிற்கு அவர்களை பாடாய் படுத்தியிருக்கிறார் லக்ஷ்மண்.

சச்சின் டெண்டுல்கரை தவிர வேறு எந்த வீரரையும் ஒரு பேட்ஸ்மெனாக மதிக்காத..

ஆஸ்ட்ரேலிய திமிர் மனோ நிலையில் லக்ஷ்மண் ஏற்படுத்திய சலனங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

webdunia photoWD
இவ்வாறாக இந்தியாவும், 2005 ஆஷஸ் தொடர் இங்கிலாந்தும் தொடங்கிய ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் இறுதி ஊர்வலத்தை தற்போது கேப்டன் ஸ்மித் கொண்டு போய் அடக்கம் செய்துள்ளார்.

மெல்போர்ன் டெஸ்ட் 3ஆம் நாள் ஆட்டத்தில் 198/7 என்று இருந்த தென் ஆப்பிரிக்க அணியை 459 ரன்கள் வரை கொண்டு சென்றதில் புது முக வீரர் டுமினியின் பங்கும், டேல் ஸ்டெய்னின் பங்கும் அசாத்தியமானது என்றாலும், ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சு எங்கே? என்ற கேள்வியையும் எழுப்பியது. எவ்வளவு மோசமான பந்து வீச்சை கொண்ட அணியும் 8வது விக்கெட்டுக்கு 180 ரன்களை கொடுத்ததாக தெரியவில்லை.

அதுவும் கையிலும் காலிலும் உடம்பிலும் அரிதாக மட்டையிலும் ஆடிய டேல் ஸ்டெய்ன் என்ற, சர்வதேச கிரிக்கெட்டில் 10 அல்லது 15 நிமிடம் கூட ஆடியிராத ஒரு வீரரை 76 ரன்கள் அடிக்க விட்டிருக்கிறது ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சு என்றால் இது நிச்சயம் ஆஸ்ட்ரேலியாவின் எதிர்கால கிரிக்கெட்டிற்கும் அடிக்கப்பட்ட சாவு மணி என்றால் அது மிகையாகாது.

ஆஸ்ட்ரேலியா தனது ஆதிக்க காலத்தில் மற்ற அணிகளை பற்றி குறிப்பாக ஆசிய அணிகளை பற்றி என்ன கூறி வந்தது? இந்த அணிகள் தனி வீரர் ஒருவரையே நம்பியுள்ளது. ஒரு வீரர் வெற்றி பெற்று தருவதில்லை என்றது. மேற்கிந்திய அணியில் பிரைன் லாராவை இது போன்று தனியாக குறிப்பிட்டது. இந்தியாவில் சச்சின் டெண்டுல்கரை குறிப்பிட்டது. இலங்கையில் முரளி இல்லாவிட்டால் அந்த அணியே இல்லை என்றது. தென் ஆப்பிரிக்க அணியை "வெற்றி வாயில் வந்து தோல்வி தழுபவர்கள்" என்று வர்ணித்தது. இங்கிலாந்து அணியை இந்த அளவிற்கு கூட மதிக்கவில்லை.

ஆனால் ஆஸ்ட்ரேலிய அணி என்ன வாழ்ந்தது என்பது இப்போது நமக்கு கண் கூடு. கிளென் மெக்ராவும் ஷேன் வார்னும் தங்களுக்கிடையே 1300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை தங்களது 12 ஆண்டுகால கிரிக்கெட்டில் (அவ்வப்போது காயங்கள், தடை செயப்பட்ட காலக்கட்டங்கள் நீங்கலாக) பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு மேதைகள் ஒரே காலக் கட்டத்தில் ஒரு அணிக்கு அமைவது கடினம். அது ஆஸ்ட்ரேலியாவிற்கு நடந்தது.

webdunia photoWD
கடலில் பெரிய திமிங்கிலங்களுக்கு மேல் சில மீன்கள் செல்லும். ஏனெனில் அந்த திமிங்கிலத்துடன் சென்றால் தங்களுக்கும் சுலபமாக இரை கிடைக்கும் என்றுதான்! அது போலவே ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் 10 ஆண்டுகளுக்க்கும் மேலாக கிளென் மெக்ரா, ஷேன் வார்ன் என்ற இரண்டு பந்து வீச்சு திமிங்கிலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. அந்த திமிங்கிலங்கள் விலகவே பாதையறியாது சென்றுள்ளது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் அணி.

சரி! எதிர்காலம் என்ன?

ஹெய்டன், சைமன்ட்ஸ், ஹஸ்ஸி ஆகியோரது ஆட்டம் அணியில் நீடிக்கும் விதமாக இல்லை. பிரட் லீ விரைவில் அணியிலிருந்து நீக்கப்படுவார். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் தொடர்ந்து இது போன்று தோல்வி தழுவினால் கேப்டன் பதவியை துறக்கலாம் அல்லது உணர்ச்சி வசப்பட்டு நானும் விளையாடவில்லை என்று ஓய்வு அறிவிக்கலாம்.

பொதுவாக 'பெஞ்ச் ஸ்ட்ரெங்ந்த்' பற்றி ஆஸ்ட்ரேலிய அணி தங்களை உயர்வாகக் கூறிக்கொள்ளும். இப்போதைய இடிபாடுகளில் அதன் "பெஞ்ச் ஸ்ட்ரெங்ந்த்" என்ன என்று பார்ப்போம்:

துவக்க வீரர்களை எடுத்துக் கொண்டால் தெற்கு ஆஸ்ட்ரேலிய அணியின் மைக்கேல் க்ளிங்கர். இவர் கடந்த உள் நாட்டு கிரிக்கெட் சீசனில் 90 ரன்கள் என்ற சராசரியுடன் 906 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக கிறிஸ் ரோஜர்ஸ் இவர் 82.22 என்று சராசரி வைத்துள்ளார். ஆனால் இவரது திறன் ஏற்கனவே இந்தியாவிற்கு எதிராக பெர்த் டெஸ்டில் பரிசோதிக்கப்பட்டு ஃபார்மில் இல்லாத இர்ஃபான் பத்தானிடம் ஆட்டமிழந்ததன் மூலம் கேள்விக்குள்ளாகியது.

நியூ சவுத்வேல்ஸ் துவக்க வீரர், 20 வயதேயான பிலிப் ஹியூஸ். இவர் இடது கை வீரர் இவரது சராசரி 56.15.

ஆனால் ஹஸ்ஸி, சைமன்ட்ஸ் திணறிக்கொண்டிருக்கையில் மாற்றாக இட்டு நிரப்ப சிறந்த நடுக்கள வீரர்கள் இல்லை. டேவிட் ஹஸ்ஸி, பிராட் ஹாட்ஜ் ஆகிய இருவர்தான் உள்ளனர் ஆனால் இவர்கள் கடந்த சீசனில் சரியாக விளையாடவில்லை. ஐ.பி.எல். கிர்க்கெட்டில் ஜோதியேற்றிய ஷான் மார்ஷ் ஆஸ்ட்ரேலிய உள் நாட்டு கிரிக்கெட்டில் இன்னமும் மெழுகுவர்த்தி கூட ஏற்றவில்லை.

மார்கஸ் நார்த், போமர்ஸ்பாக், ஃபெர்குசன் ஆகிய வீரர்கள் நன்றாக விளையாடினாலும் இவர்களது சராசரி 35 ரன்களுக்கும் சற்று மேல் உள்ளது அவ்வளவே.

பந்து வீச்சை எடுத்துக் கொண்டால் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. சுழற்பந்து வீச்சு ஏறக்குறைய முடிந்து விட்டது என்று கூறலாம். சற்றே குறைந்த வயதுடைய பியூ கஸ்ஸான் 5 உள் நாட்டு போட்டிகளில் 304 என்ற சராசரியில் ஒரேயொரு விக்கெட்டை எடுத்துள்ளார்.

பீட்டர் சிடில் தவிர, டக் போலிங்கர், பில் ஹைஃபன்ஹாஸ் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் இவர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு தேறுவார்கள் என்று தெரியவில்லை.

ஆகவே ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட்டின் எதிர்காலம் இப்போது விளையாடும் வீரர்களான மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன், பீட்டர் சிடில், மைக் ஹஸ்ஸி, கேட்டிச், ஃபில் ஜாக், சைமன்ட்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் கையில் உள்ளது. இருப்பினும் இவர்களில் எவ்வளவு பேர் சர்வதேச கிரிக்கெட்டின் அதிகபட்ச அழுத்தங்களை சமாளித்து ஒரு ஸ்டீவ் வாக், மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட் என்ற தனிப்பட்ட சிறந்த வீரர்களாக உருவாக முடியும் என்பது கேள்விக்குறியே.

மீண்டும் ஆதிக்க வழிக்கு திரும்ப அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகாலம் பிடிக்கலாம். அதற்குள் எந்த மாதிரியான தோல்விகளை அந்த அணி சந்திக்க வேண்டி வருமோ? ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் மனதை இரும்பாக்கிக் கொள்ளுதல் நல்லது.