தொடர்ந்து புறக்கணிக்கப்படும் முரளி கார்த்திக்!

சனி, 13 செப்டம்பர் 2008 (18:30 IST)
webdunia photoFILE
பிஷன் சிங் பேடி, மனீந்தர் சிங் வரிசையில் கையை மேலாக, நன்றாகத் தூக்கி மரபான இடது கை சுழற்பந்து வீசுபவர் முரளி கார்த்திக். அவரது நேரடியான இடது கை சுழற்பந்துகளுடன், ஆர்மர் என்று அழைக்கப்படும் இடதுகை லெக் ஸ்பின்னையும் போடக்கூடியவர். ஃபிளைட், லெங்த், ஆர்க் என்று அழைக்கப்படும் அனைத்திலும் நிறைய மாற்றங்களை செய்து பேட்ஸ்மென்களை எப்போதும் யோசிக்க வைத்தவர், திணறடிப்பவர் முரளி கார்த்திக்.

எந்த ஒரு வீச்சாளரையும் அவரது ஒரு சில ஆட்டங்களை வைத்து முடிவு செய்ய முடியாது. ஆனால் முரளி கார்த்திக் வாய்ப்பளிக்கப்பட்ட அந்த ஒரு சில ஆட்டங்களிலும் நன்றாக வீசி வெற்றிக்கு வித்திட்டவர். உதாரணமாக, ஆஸ்ட்ரேலியாவிற்கு நிர்ணயித்த 103 ரன்கள் வெற்றி இலக்கை அவர்கள் எடுக்க விடாமல் செய்து மும்பையில் டெஸ்ட் போட்டியை வென்று கொடுத்தவர்.

உலகக்கோப்பை இருபதுக்கு 20 வெற்றிக்கு பிறகு ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் மகே‌ந்‌திர ‌சி‌ஙதோனியால் மீண்டும் அணிக்குள் தேர்வு செய்யப்பட்டு அந்தத் தொடரிலும் அபாரமாக பந்து வீசினார் 7 ஒரு நாள் போட்டிகள் தொடரில் இந்தியா வென்றது 2 போட்டிகளில்தான். அந்த 2 போட்டிகளிலும் முரளி கார்த்திக் சிறப்பாக வீசினார். இன்னொரு விஷயம் என்னவெனில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக எந்த ஒரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரும் செய்யாத சாதனையாக 24 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்த போட்டியை வெல்ல வித்திட்டவர் முரளி கார்த்திக்.

தமிழக அணிக்கு ஆடிய பிறகு, ரயில்வே அணிக்கு சென்றார் முரளி. 125 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 424 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர்! இதில் ஒரு முறை ஒரே இன்னிங்சில் 70 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் அவர்.

ஆனால் இந்திய தேர்வுக்குழுவை பொறுத்தவரை அவரது சாதனைகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல் போன்றுதான். ஒவ்வொரு முறையும் நன்றாக திறமையை வெளிப்படுத்தியும் அடுத்தடுத்து அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

மொஹிந்தரும், முரளியும்!

webdunia photoFILE
மொஹிந்தர் அமர்நாத்திற்கு அடுத்தபடியாக இவர் அதிக முறை அணிக்கு திரும்பி வந்தவர் இவராக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 2002 ஆம் ஆண்டு முதல் ஒரு நாள் போட்டியை ஆடியது முதல், 2007இல் கடைசி ஒரு நாள் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது வரை 37 ஒரு நாள் போட்டிகளை விளையாடுவதற்குள் ஒரு வீரர் 13 அல்லது 14 முறை நீக்கப்பட்டு ,பிறகு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அது முரளி கார்த்திக்தான்.

அவரது விக்கெட்-ரன் சராசரியும் சிறப்பானது. விக்கெட் எடுக்காத ஆட்டங்களிலும் ஒரு ஓவருக்கு 5 ரன்கள் என்றுதான் கொடுத்துள்ளார்.

2002- 03 ஆம் ஆண்டு மேற்கிந்திய் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் அனைத்து மேற்கிந்திய வீரர்களையும் திணற அடித்தார் முரளி கார்த்திக். இந்தியா போன்ற ரன்குவிப்பு மட்டை ஆட்டக்களத்தில் தனது ஃபிளைட் மற்றும் புத்தி சாதுரியமான மாற்றங்களால் பெரிய பேட்ஸ்மென்களையும் திணற அடித்தவர் முரளி கார்த்திக்.

2000ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியை ஆடியுள்ளார். 2004ஆம் ஆண்டு கடைசி டெஸ்ட் போட்டியை ஆடியுள்ளார். அதற்குள் அவருக்கு வெறும் 8 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதற்குள் அவரது திறமையை எடை போட்டு விட்டார்களாம் நம் அணித்தேர்வு ஜாம்பவான்கள். இந்திய அணியின் கட்டமைப்பையும் தன்னம்பிக்கையையும் மாற்றிய சௌரவ் கங்கூலி கூட கார்த்திக்கை சரியாக பயன்படுத்தவில்லை. அவரை பயன்படுத்திய டெஸ்ட் போட்டிகளில் நல்ல நெருக்கமான ஃபீல்டிங் அமைத்துக் கொடுத்து விக்கெட் எடுக்க பயன்படுத்தப்படாமல், எதிர்மறை களத்தடுப்பு முறையை பயன்படுத்தி எதிரணியினரின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த மட்டுமே முரளி கார்த்திக் பயன்பட்டார். இதற்கு முரளி பொறுப்பாக முடியாது.

ஆஸ்ட்ரேலிய அணியின் சிறந்த கேப்டன் ஸ்டீவ் வாஹ் மும்பை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் நிலேஷ் குல்கர்னியை விளையாடுவதற்கு மிகவும் கடினமான இடது கை வீச்சாளர் என்று வர்ணித்த போதும், அவரை அணிக்குள் தேர்வு செய்யப்பட்டதும், இதுபோன்று எதிர்மறை களத்தடுப்பிற்கு ரன் கட்டுப்படுத்தும் வீச்சாளராகவே பயன்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் முரளி கார்த்திக் அணியில் இருந்தார். ஆனால் போட்டிக்கு தேர்வு செய்யப்ப்டவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அணியில் இருந்தார் ஆனால் "காயம்"(!) காரணமாக அணியில் இடம்பெறவில்லை. இலங்கை அணிக்கு எதிராக இவர் பெயர் பரிசீலனை கூட செய்யப்படவில்லை. 2005ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இவர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் கார்த்திக் இரண்டாவது இன்னிங்சில் 14 ஓவர்கள் வீசி 6 மைடன்களுடன் வெறும் 17 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இங்கிலாந்தில் கிங்! இந்தியாவில் பகடை!

இதனை யோசித்த கார்த்திக் இங்கிலாந்து கவுண்டி அணியான மிடில்செக்ஸ் அணிக்கு கையெழுத்திட்டார். இருபதுக்கு 20 சாம்பியன் பட்டத்தை மிடில்செக்ஸ் வெல்ல முரளி கார்த்திக்கின் பந்து வீச்சு ஒரு முக்கிய காரணம். புரோ- 40 என்று அழைக்கப்படும் 40 ஓவர்கள் கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை 20.75 என்ற சராசரி விகிதத்தில் கார்த்திக் எடுத்துள்ளார்.

மிடில்செக்ஸ் அணிக்கு விளையாடிய அயல் நாட்டு வீரர்களிலேயே, மேற்கிந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் டெஸ்மன்ட் ஹெய்ன்ஸிற்கு பிறகு சிறந்த வீரர் என்று அந்த கிளப் உயரதிகாரிகளால் கருதப்படுபவர் முரளி கார்த்திக்தான்.

மிடில்செக்ஸ் கவுண்டி சர்க்கிளில் இவரை "ஸ்பெஷல் ஒன்" என்று அழைத்து பெருமை சேர்த்துள்ளனர்.

மிடில்செக்ஸ் அணிக்கு அவர் தொடர்ந்து 3வது முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அயல் நாட்டில் கொண்டாடப்படும் ஒரு இந்திய வீரருக்கு அவரது சொந்த மண்ணில் நடப்பதோ துரோகங்கள்!

webdunia photoFILE
டேனியல் வெட்டோரி, மோண்‌ட்டி பனேசர், நமது முரளி கார்த்திக், நிலேஷ் குல்கர்னி உட்பட உயர் தர இடது சுழற்பந்து வீச்சு மட்டுமல்ல, கென்யா அணியில் இடது கை சுழற்பந்து வீசிய அதிகம் அறியப்படாத ஆசிஃப் கரீம் என்பவரிடம் 1999, 2003, 2007 உலகக் கோப்பை சாம்பியன் அணி
ஆஸ்ட்ரேலியா திணறியுள்ளது. 2003 உலகக் கோப்பை போட்டியில் ஆசிஃப் கரீம் 8 ஒவர்கள் வீசி 6 மைடன்களுடன் வெறும் 7 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு நேரத்தில் ஆஸ்திரேலியாவை தோல்வி அச்சமூட்டினர்.

இடது கை சுழற்பந்து என்றாலே நடுங்கும் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக முரளி கார்த்திக் பெயர் பரிசீலனை கூட செய்யப்படவில்லை என்பதற்கு கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்களே பிரதானமாக இருந்திருக்கலாம் என்ற பலரின் சந்தேகம் நியாயமானதும் கூட!