வங்கதேசத்திற்கு எதிராக சிட்டகாங்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ‘கிரிக்கெட் அல்லாத காரணங்களால்’ திடீர் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய அணித் தலைவர் விரேந்திர சேவாக், வங்கதேச அணியை "சாதாரண அணி" என்று வர்ணித்து விட்டார். ஆனால் இந்தியா 243 ரன்களுக்கு சுருண்டது.
முதலில் சேவாக் கூறியது வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை வைத்து கூறப்பட்ட ஒரு கூற்று, அந்த அணியின் திறமை குறித்த மதிப்பீடு அல்ல என்ற சிறிய அளவிலான சுவாதீனம் கூட நம் முசுட்டுப் பத்திரிக்கையாளர்களிடம் இருப்பதில்லை.
உடனே அன்றைய தின செய்தியாளர்கள் கூட்டத்தில் சேவாகின் கூற்றை வைத்தே செய்தியாளர்கள் வருவோர் போவரிடத்திலெல்லாம் கேள்வி மழை பொழிந்தனர்.
கிரிக்கெட்டிற்கான் பிரத்யேக முதல் தர இணையதளம் "Shakib and Shahadat dominate 'ordinary' India என்று ஆர்டினரி என்ற வார்த்தையை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தி செய்தி வெளியிட்டது.
செய்தியாளர்கள் கூட்டத்தில் சச்சின் டெண்டுல்கரிடம், சேவாக் கூற்று குறித்து கேட்டபோது அவர் கடுகடுப்பாகி, அதையெல்லாம் சேவாகிடம் கேளுங்கள் என்று கடுப்படித்துள்ளார்.
மேலும் கோபமுற்று இந்த டெஸ்ட் போட்டி இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் அதே கடுப்புடன் கூறினார்.
ஆஸ்ட்ரேலிய இணையதளச் செய்தி ஒன்றில் சேவாக் வங்கதேசத்தை ஆர்டினரி என்று கூறிய பிறகு இந்தியாவின் பேட்டிங் கர்வத்தை வங்கதேசம் உடைத்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
சேவாக் கூறியது ஒன்று என்றால், அதனால் இந்தியா பேட்டிங் சரிவடைந்தது என்று கூறுவது மீண்டும் வங்கதேசத்தின் திறனை ஒப்புக் கொள்ளாததற்கு சமமே.
சேவாக் கூறியது போல் நேற்று இந்தியா விக்கெட்டுகளை இழக்காமல் 500 ரன்களைக் குவித்திருந்தால்... சேவாக் கூறியது சரியானது என்று இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூறுவார்களா? அல்லது ஷாகிப் அல் ஹசன் இந்தியா பற்றி கூறியபோது சரியான இடங்களில் பந்து வீசினால் அவர்கள் தவறு செய்வார்கள் என்று கூறியது பொய்த்துப் போய்விட்டது, ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டை முதலில் கற்கவேண்டும் என்று கூறமாட்டார்களா?
பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் அறுவையாகி வருவதால் அதனை உயிரூட்ட இதுபோன்ற கூற்றுகளைக் கூறுவது என்பது எல்லா அணிகளுக்குமான வழக்கமாக உள்ளது. இது ஒரு மார்க்கெட்டிங் உத்தி. சேவாக் கூறியது அந்த வகையைச் சார்ந்ததே என்பது கிரிக்கெட்டை விவரமாகப் பார்ப்போருக்கு விளங்கியிருக்கும்.
FILE
சச்சின் டெண்டுல்கரும் இதற்கு கடுப்பாக வேண்டிய தேவையில்லை. ஜாலியாக இதனை எதிர்கொண்டு, சேவாக் தனது மட்டையை சுழற்றுவார் இந்த முறை நாக்கை சுழற்றியுள்ளார். இதில் ஒன்றும் பெரிதாக இல்லை என்று கூறியிருக்கலாம். ஆனால் அவர் கடுப்பானதுதான் இப்போது சேவாக்கின் கூற்றிற்கு பெரிய விளம்பரம் ஆகிவிட்டது.
சரி விட்டுவிடுவோம். வங்கதேச அணியை கிரிக்கெட் அணிகள் மட்டுமல்லாது, இன்று வரிந்து கட்டிக் கொண்டு சேவாக்கை குறைகூறும் பத்திரிக்கைகள் இதற்கு முன்னர் எவ்வளவு கேவலமாக எழுதியுள்ளன என்பதை அந்தப் பத்திரிக்கைகள் மறக்கலாம். ஆனால் ஒரு நடுநிலை பார்வையாளராக நாம் மறக்க முடியாது. ஏனெனில் பத்திரிக்கைகள் தினசரி நடந்து கொண்டிருப்பதே மறதியின் அடிப்படையில்தானே?
சேவாக் இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா சென்ற போது இதே போன்ற ஒன்றைத்தான் கூறினார். அதாவது அவர் நல்ல துவக்கங்களைக் கொடுத்தார். ஆனால் சதம் எடுக்கவில்லை. அப்போது அவரிடம் கேட்டபோது, 'ஆம், நான் ஒன்றிரண்டு சதங்களை இந்நேரம் அடித்திருக்கவேண்டும், நிச்சயம் அடுத்த டெஸ்ட்டில் சதத்தை எடுப்பேன் என்றார். அடுத்த டெஸ்ட் போட்டிதான் அந்த மெல்போர்ன் டெஸ்ட். ஆஸி. பந்து வீச்சாளர்களுக்கு படையல் நடத்தி தேநீர் இடைவேளையின் போது 195 ரன்களைக் குவித்தார்.
அப்போது ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களுக்கு தன்மானமே இல்லை என்று யாராவது கூறினார்களா அல்லது எழுதினார்களா? நாம் எது தன்னம்பிக்கை, எது இழிவுபடுத்துவது என்ற இரண்டிற்குமான வேறுபாடுகள் குறித்த ஒரு நிலையற்ற, அசட்டுத்தனமான முன் அனுமானங்களைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. சேவாக் அப்போது கூறி, செய்து காட்டியது தன்னம்பிக்கை, இப்போது கூறுவது அகராதித் தனமா?
ஏதோ சேவாக் அது போன்று கூறியதால்தான் வங்கதேச அணி நேற்று அவ்வளவு சிறப்பாக வீசியது என்று கூறினால் மறுபடியும் வங்கதேச அணிக்கு இயல்பிலேயே திறமை இல்லை என்று கூறுவது போல் அல்லவா ஆகிறது. இது சேவாக்கின் கூற்றைவிட மிக மோசமானதாகி விடாதா?
FILE
ஒரு முறை ஆலன் டோனல்ட் பற்றி நம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது இந்த இடத்தில் எடுத்துரைப்பது சாலப்பொருந்தும். ஆலன் டோனல்ட், பந்தின் தையலை பேட்ஸ்மெனுக்கு காண்பித்துக் கொண்டு நேரே நேரே வந்து மோதுவார் என்றார். இது ஒரு துவக்க வீரரின் தன்னம்பிக்கை. உடனே ஸ்ரீகாந்த் அவரிடம் ஆட்டமிழந்தால் திமிராக பேசி ஆட்டமிழந்தார் என்று கூறமுடியுமா?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமீபத்தில், உண்மையில் திமிருக்குப் பெயரெடுத்த ஆஸ்ட்ரேலிய அணி அங்கு பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அணி பற்றி பேசியதும், அந்தப் பத்திரிக்கைகள் எழுதியதும் நாராசமானவை. இதை எந்த பத்திரிக்கையாளர்களாவது பாண்டிங்கிடமோ அல்லது ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்களிடமோ கேட்டனரா? கடைசியில் மதிப்பிற்குரிய வர்ணனையாளர் டோனி கோசியர் ஒரு கட்டுரை எழுதி, 80களில் ஆஸ்ட்ரேலிய அணி இருந்த நிலைமையை எடுத்துரைத்து ஒரு வாங்கு வாங்கவும்தான் அந்தப் பத்திரிக்கைகள் பொத்திக்கொண்டு அடங்கின.
ஜேமி பண்டாரம், மால்கம் கான் போன்ற பத்திரிக்கையாளர்கள் ஆஸ்ட்ரேலியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் அணிகளை நாகரிகமில்லாத முறையில் வசை பாடி எழுதுவதைத்தான் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர். அந்த அணியின் கேப்டனும், வீரர்களும் அந்த மனோநிலை உள்ளவர்கள்தான். ஏன் நம் நம்பர் ஒன் கிரிக்கெட் இணையதளம் இதையெல்லாம் எதிர்த்து எழுதுவதில்லை?
2005ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்கு முன் கிளென் மெக்ரா 5-0 என்று இங்கிலாந்தை வெல்வோம் என்று கூறி மண்ணைக் கவ்வினர். அப்போதாவது மெக்ரா அணியில் இருந்தார்.
ஆனால் சமீபத்திய ஆஷஸ் தொடருக்கு முன் இதே கிளென் மெக்ரா மீண்டும் தன் அணியின் பலவீனங்கள் தெரியாமல் 5-0 என்று ஆஸ்ட்ரேலியா வெல்லும் என்றார். மீண்டும் மண்ணைக் கவ்வினர். இப்போது யாராவது கிளென் மெக்ராவிடமோ அல்லது பாண்டிங்கிடமோ சென்று இவ்வாறு கூறலாமா என்று கேட்டார்களா?
அதாவது காலனியாதிக்கம் விதைத்த அடிமை மனோநிலை இன்னமும் நம் பத்திரிக்கைகளிடையே, குறிப்பாக விளையாட்டு பற்றி எழுதும் பத்திரிக்கையாளர்களிடையே உள்ளது.
ஒரு விஷயத்தை ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து செய்தால் அது அவர்களது Tough Mentality- யைக் காண்பிக்கிறது. அதையே இங்குள்ளவர்க்ள் செய்தால் அது திமிராகி விடுகிறது!
FILE
சமீபத்திய மேற்கிந்திய தீவுகள் விவகாரத்திலும் இதுவே நடந்தது. ஒரு பத்திரிகையாளர்கள் கூட பாண்டிங்கிடமோ, ஸ்டீவ் வாஹிடமோ இதுபோன்று உங்கள் பத்திரிக்கைகள் எழுதுகின்றனரே நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்றோ அல்லது பத்திரிக்கைகள் அவர்கள் எதிரணி பற்றி கூறும் கூற்றுகளை வைத்து அப்படி கூறலாமா என்றோ கேட்டதில்லை. ஆனால் சேவாக் கூறியதுதான் பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.
காரணம் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்ததுதான். இதுவும் தற்காலிகமானதுதான். இதனை தோனி உள்ளிட்டவர்கள் உணர்ந்துதான் வைத்திருக்கிறார்கள்.
ஒரு முறை மேற்கிந்திய அணி இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டது. லாய்ட், கிரீனிட்ஜ், ரிச்சர்ட்ஸ், ஹோல்டிங், ராபர்ட்ஸ், ஹோல்டர் என்ற பலமான அணியுடன் சென்றது மேற்கிந்திய அணி. அப்போது ஒரு நேர் காணலில் இங்கிலாந்து கேப்டன் டோனி கிரேக் "we will make them grovel" என்றார். அதாவது அவர்களை அடிமையாக்குவோம் என்று இதற்குப் பொருள். இதனை நிறவெறி என்று யாரும் அப்போது கூறவில்லை. ஏனெனில் இங்கிலாந்து கிரிக்கெட்டை சவாலாக விளையாடுகிறது, அதனால் இதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுவர்.
இங்கிலாந்துடன் முன்பெல்லாம் இந்தியா விளையாடும்போதெல்லாம். இங்கிலாந்து 250 ரன்கள் எடுத்து சுருண்டிருக்கும். ஆனால் இந்தியா 51 நோ லாஸ் எனும்போது கூட இங்கிலாந்து வானொலி வர்ணனையாளர்கள் இந்தியா ஃபாலோ ஆனைத் தவிர்த்தது என்று கூறுவர். யாராவது இதையெல்லாம் கேட்டார்களா?
ஒரு முறை இயன் சாப்பல் இங்கிலாந்து அணி பற்றிக் கூறியதை இங்கு குறிப்பிடுவது அவசியம், அந்த அணி தங்களது ஆட்டத்தை மேம்படுத்தவில்லையெனில் ஆஷஸ் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாட வேண்டும், அந்த அணிக்கு இதுதான் தகுதி என்றார்.
அப்போது யாராவது இயன் சாப்பலிடம் சென்று 'இவ்வளவு திமிராக பேசுகிறீர்களே' என்று கேட்டார்களா? இதையெல்லாம் திமிர் என்றோ அல்லது எதிராக தன்னடக்கம் என்றோ நாம் பொதுப்புத்திக் கூறுகளுடன் அணுக முடியாது.
இது போன்ற உதாரணங்கள் ஏராளமானதை நாம் கூற முடியும்.
வங்கதேசத்தை மற்ற அணிகளும், வாரியங்களும், பத்திரிக்கைகளும், முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் பண்டிதர்களும் மட்டம் தட்டியதை விட சேவாக் கூறியது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
FILE
சமீபத்தில் ஷேன் வார்ன் உள்ளிட்ட பெருந்தலைகள் மேற்கிந்திய அணி, ஜிம்பாவே, வங்கதேசம் போன்ற அணிகளை தனியே பிரித்து 2 அடுக்கு டெஸ்ட் முறையைக் கொண்டு வரவேண்டும் என்று எழுதினார். கிம் ஹியூஸ் மேற்கிந்திய அணியை தடை செய்ய வேண்டும் என்று எழுதினார். அப்போதெல்லாம் நமது நம்பர் ஒன் கிரிக்கெட் இணையதளம் ஆஹா! அவர்கள் கூறினால் சரியாகத்தான் இருக்கும்! என்று வாளாயிருந்தன.
ஜக்மோகன் டால்மியா வங்கதேசத்திற்கு டெஸ்ட் அந்தஸ்தை வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்தார், அவரையும் வங்கதேச அணியையும் இன்று வரை யாரும் விட்டு வைக்கவில்லை. ஆனால் இன்று சேவாக் கூறியதும் புதிய கரிசனம் இந்த அணி மீது பத்திரிக்கைகளுக்கு பொத்துக் கொண்டு ஊற்றுகிறது.
வங்கதேச அணியை டெஸ்ட் போட்டியிலிருந்து விலக்குவதற்கான அனைத்து லாபியும் இன்று வரை மேலை அணிகளால் (இந்தியா நீங்கலாக) முயற்சி செய்யப்பட்டுக் கொண்டுதான் வரப்படுகிறது. ஆனால் என்ன செய்வது? வங்கதேசத்திற்கு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டிற்கு வரும் கூட்டம் அபரிமிதமானது. அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அல்லவா?
எந்த அணியாவது வங்கதேசத்தை தங்கள் நாடுகளுக்கு வரவழைத்து விளையாடுகின்றனரா? இல்லை. மேற்கிந்திய அணிதான் சமீபத்தில் அழைத்தது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, இந்தியா போன்ற அணிகள் வங்கதேசத்தை அழைப்பதில்லை. எதிர்காலப் பயணத் திட்டத்தில் (FTP) சம வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இதையெல்லாம் எந்த பத்திரிக்கையிலாவது எழுதிவிட்டு, அதன் பிறகு அந்த அணிக்காக சேவாக் கூறியதை எதிர்த்து கொதிப்படைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வங்கதேச அணி ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும், ஒரு நாள் போட்டியிலும் தோற்கும்போதெல்லாம் அந்த அணியின் 'சாதனை' களை பட்டியலிட்டு கட்டம்கட்டி எழுதி, அந்த அணி சர்வதேச கிரிக்கெட்டிற்கு லாயக்கில்லை என்பதை சூசகமாக எடுத்துரைத்து, அந்த அணியை பின்னுக்குத் தள்ளும் போக்கைத்தான் நாம் கண்டிருக்கிறோம்.
ஜிம்பாப்வே, பாகிஸ்தான் நாடுகளில் உள்ள அரசியல் சூழல்களை வைத்து அந்த அணிகளையும் ஓரம் கட்டும் போக்கும் ஐ.சி.சி.யிடம் காணப்படுகிறது. இதையெல்லாம் பற்றி தார்மீக ஆவேசம் பொங்க எழுதும் இணையத் தளங்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் மட்டும்தான் சேவாக் வங்கதேசம் பற்றி கூறிய கருத்திற்கு ஆவேசம் காட்ட உரிமையுண்டு என்பதை வலியுறுத்த நமக்கும் உரிமையுண்டு.
நாம் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும், கிரிக்கெட் என்பது கனவான்களின் விளையாட்டு என்பதெல்லாம் மலையேறிவிட்டது. எந்த ஒரு அணியும் எந்த ஒரு அணி மீதும் பெரிய மரியாதையெல்லாம் வைத்துக் கொள்வதில்லை. இது காலங்காலமாக உள்ளதுதான். இப்போது கிரிக்கெட் விளையாட்டு அதிகாரம் துணைக் கண்டத்திற்கு மாறியுள்ளதால், மரியாதை பற்றியும், தன்னடக்கம் பற்றியும் திமிர் பற்றிய விளக்கங்களும் நமக்கு அளிக்கப்படுகிறது.
இதைக்கூறும் போது சேவாக் கூறியதை நியாயப்படுத்தியதாகக் கருத இடமில்லை. இதனைப் பெரிய விவகாரமாக்க, வங்கதேசத்தையும், ஜிம்பாப்வேயையும், பாகிஸ்தானையும், மேற்கிந்திய தீவுகளையும் பற்றி மோசமாக எழுதி வரும் நம்பர் ஒன் (உள் நாட்டு, வெளிநாட்டு) ஊடகங்களுக்கு உரிமையில்லை என்பதே நமது விண்ணப்பம்.