ஊக்க மருந்து சோதனை- இந்திய கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு நியாயமானதே
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2009 (13:11 IST)
உலகின் அனைத்து விளையாட்டு வீரர்களும் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை போட்டிக்கு முன் எடுத்துக் கொள்ளக்கூடாது, இதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் (W A D A) விதிகளை ஏற்படுத்தி அந்த குறிப்பிட்ட படிவத்தில் விளையாட்டு வீரர்கள் கையெழுத்திட வேண்டும் என்று விளையாட்டு அமைப்புகளை வலியுறுத்தி வருகிறது.
இந்த விதிமுறைகளில் சமீபமாக புதிதாக ஒரு விதி சேர்க்கப்பட்டது. அதாவது வீரர்கள் 3 மாதத்திற்கு முன்பே தங்களது இருப்பிடத்தை ஊக்க மருந்து தடுப்பு கழக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற அந்த புதிய விதியை தற்போது முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்பு காரணம் கருதி எதிர்த்து வருகின்றனர்.
மேலும் ஆண்டிற்கு 10 மாதங்கள் கிரிக்கெட் மைதானங்களில் செலவிடும் இந்திய அணி வீரர்கள் ஓய்வு நேரங்களில் ஊக்க மருந்து சோதனை என்ற ஒன்றின் மூலம் தங்கள் சொந்த வாழ்க்கையில் குறுக்கீடு செய்யப்படுகிறது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
webdunia photo
WD
இதனை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், வீரர்கள் தரப்பில் இருக்கும் நியாயங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் (ஐ.சி.சி.) எடுத்து கூறி, உலக ஊக்க மருந்து தடுப்பு கழகத்திடமிருந்து விலகி கிரிக்கெட்டிற்கென்று தனியான ஒரு ஊக்க மருந்து சோதனை நடைமுறையை பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
ஊக்க மருந்து சோதனையில் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படக் கூடாது, தலை சிறந்த நீச்சல் வீரர் பெல்ப்ஸ், 100மீ தடகள உலக சாம்பியன் உசைன் போல்ட் இவர்களை விட சச்சின் டெண்டுல்கரும், தோனியும், யுவ்ராஜ் சிங்கும் என்ன பெரிய கொம்பா? என்றும், கையெழுத்திடாவிட்டால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து, விளையாட்டுத் துறை மத்திய அமைச்சர் எம்.எஸ்.கில் உட்பட கூறி வருகின்றனர்.
அமெரிக்க கால்ஃப் நட்சத்திரம் டைகர் உட்ஸ் உட்பட பிற விளையாட்டைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் இந்த புதிய விதிமுறையை ஆதரித்தே பேசி வருகின்றனர். ஆனால் இவர்கள் ஏதோ கிரிக்கெட் வீரர்கள் மட்டும்தான் இதனை எதிர்த்து வருவது போல் - அதுவும் இந்திய வீரர்கள் மட்டுமே - அவர்களுக்கு கண்டனம் மேல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்ப்பது கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல.
உலக விளையாட்டுகளில் முதன்மையானதாக கருதப்படும் கால்பந்து ஆட்ட வீரர்களும், அமைப்புகளும் முன்பே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
webdunia photo
WD
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிபா (FIFA), ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான யு.இ.எஃப்.ஏ. ஆகிய இரு பெரும் கால்பந்து அமைப்புகள் ஊக்க மருந்து தடுப்புக் கழகத்தின் இந்த புதிய விதிமுறையை கடுமையானது என்று வர்ணித்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. பி.சி.சி.ஐ. போலவே இந்த அமைப்புகளும் கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெறாத காலங்களில் வீரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்தும் விதிமுறைகளில் இருந்து வீரர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் கடந்த ஏப்ரலில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இந்த புதிய விதிமுறைக்கு முழுதும் இணங்கியது. ஆனால் அதனுடன் சேர்ந்த இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பு தங்களது வீரர்களை இந்த புதிய விதிமுறையிலிருந்து வெற்றிகரமாக காத்துள்ளது. இந்த செய்தி ஆகஸ்ட் மாத கார்டியன் இதழில் வெளி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கால்பந்து, கிரிக்கெட் மட்டுமல்ல, கூடைப்பந்து, ஐஸ் ஹாக்கி, வாலிபால் போன்ற பிற விளையாட்டு அமைப்புகளும் இந்த புதிய விதிமுறை குறித்து மேலும் தெளிவு பெற விரும்புகிறோம் என்று கூறியுள்ளது.
webdunia photo
WD
இது தவிர ரோஜர் ஃபெடரர், ஆண்டி முர்ரே, நடால் உள்ளிட்ட முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்கள் சார்பு நிலை மட்டுமே ஏதோ தவறானது என்று உலக அளவில் வெகு ஜன ஊடகங்கள் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பி.பி.சி. இணையதளம் வெளியிட்ட ஒரு செய்தி நம் வாதத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாய் உள்ளது. உலக ஊக்க மருந்து தடுப்பு கழகக்தின் விதிமுறைகள் ஐரோப்பிய் யூனியனின் தனியுரிமைக் கொள்கைகளில் தலையிடுவதாய் உள்ளது என்று பெல்ஜியத்தை சேர்ந்த 65 விளையாட்டு வீரர்கள் சட்ட ரீதியாக வழக்கு தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து வீரர்களுக்கு ஆண்டொன்றிற்கு 20,000த்திற்கும் மேற்பட்ட ஊக்க மருந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதில் குறைந்தது 10 வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபணமாகியுள்ளது என்பதெல்லாம் உண்மை என்றாலும், கால்பந்து கூட்டமைப்புகள் புதிய விதிமுறைகளை எதிர்த்தே வருகின்றன.
ஊக்க மருந்து தடுப்புக் கழகத்தின் விதிமுறைகள் கடுமையாக உள்ளன, தனியுரிமை கொள்கைகளில் தலையிடுவதாய் உள்ளது என்ற எதிர்ப்பில் நியாயம் இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும், ஊக்கமருந்து இல்லாத தூய்மையான விளையாட்டுத் துறை தேவை என்பதும் நியாயம். ஆனால் ஊக்கமருந்து இல்லாத விளையாட்டை நிறுவும் தூய்மை வாதிகள் அரசியல் இல்லாத பரிசோதனை முறைகளுக்கு உறுதியளிக்கிறதா என்ற கேள்வி முக்கியமானது.
உதாரணத்திற்கு: பரிசோதனையில் தவறு நிகழ்ந்து அது தெரியாமலேயே அல்லது வெளி உலகிற்கு கூறப்படாமலேயே போனால் அந்த குறிப்பிட்ட வீரரின் விளையாட்டு எதிர்காலம் என்ன ஆவது? அது போன்று நடக்க வாய்ப்பில்லை என்று ஒருவரும் உறுதியாக கூறிவிட முடியாது.
டேவிட் எல். பிளாக் என்ற ஒரு ஆய்வாளர் மேற்கூறிய தவறுகள் நிகழ்ந்ததாக கருதப்படும் ஒரு 20 தடகள வீரர்களின் ஊக்க மருந்து சோதனை அனுபவங்களை வைத்து, "ஊக்க மருந்து கட்டுப்பாட்டு பரிசோதனை, கொள்கைகளும், நடைமுறைகளும்: ஒரு விமர்சனம்" என்று ஒரு ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.
ஊக்க மருந்து தடுப்பு சார்ந்த வழக்குகளில் வெளியான விவரங்களை வைத்துப் பார்க்கும்போது ஊக்க மருந்து குறித்த நடப்பு சோதனை முறைகள், மறு பரிசீலனை விசாரணை நடைமுறைகள் ஆகியவற்றில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனைகள் பெரும்பாலும் பரிசோதனை நிலைய ஊழியரின் பணியை நம்பியே உள்ளது. இவர்தான் பரிசோதனைக்கான முறைகளை வடிவமைக்க வேண்டும், அந்த முறைகள் சரியானது என்று அவரே நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் தடயவியல் ரீதியாக கட்டாயமாக தேவைப்படும் சீரிய பகுப்பாய்வு பற்றிய ஆவணமாக்கங்கள் நடைபெறுவதில்லை என்கிறார் டேவிட் பிளாக்.
தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சான்றிதழ் வழங்கும் முறைகளில் விமர்சன ரீதியான மேல் ஆய்வுகள் நடைபெறுவதில்லை. மேலும் தடை செய்யப்பட்ட மருந்துகளிலும் பிரச்சனைகள் உள்ளன.
உதாரணமாக ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் "சல்பூடமால்" என்ற மருந்தை வாய் வழியாகவோ அல்லது 'இன்ஹேலர்' மூலமோ எடுத்துக் கொள்வார்கள். இது விளையாட்டு வீரர்களுக்கு தடை செய்யப்பட்ட மருந்தாகும். இந்த மருந்தின் படிவுகள், எச்ச சொச்சங்கள் உடலில் இருக்கத்தான் செய்யும். ஆனால் 6 மாதம் கழித்து இந்த மருந்து உடலில் இருக்கிறது என்று தெரிய வரும்போது, அது இப்போது ஊக்க மருந்தாக செயல்படுமா என்பதை ஆய்வு முறைகள் பரிசீலிப்பதில்லை. பரிசோதனை செய்யும் போது 6 மாதத்திற்கு முன் ஒரு வீரர் ஆஸ்துமா நோய்க்கு சிக்சிச்சை பெற்றிருக்கலாம். உடனே நம் ஊக்க மருந்து தடுப்பு அதிகாரிகள் அப்போது அவர் கலந்து கொண்ட விளையாட்டுப் போட்டிகளில் இதனால்தான் வெற்றி பெற்றார் என்று கூறுவது நியாயமாகுமா?
மேலும் டெஸ்டஸ்டெரோன் என்ற ஒரு சுரப்பியை அதிகம் சுரக்கச் செய்வதன் மூலம் விளையாட்டில் வேகம் காட்ட முடியும் என்பது உண்மைதான். ஆனால் உடலில் இயற்கையாக உள்ள இந்த சுரப்பி வெளியிலிருந்து உட்கொண்ட மருந்தால் செயற்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை அறியும் சோதனை முறைகள் சவாலானது என்று குறிப்பிடும் டேவிட் பிளாக், இயற்கையிலேயே ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்கு உள்ள டெஸ்டர்ஸ்டெரோன் அளவு ஒன்றுதான் என்று கூறுகிறார்.
தற்போதுள்ள ஊக்க மருந்து சோதனை நடைமுறைகளில் செயற்கையாக டெஸ்டஸ்டெரோன் அதிகரிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்கான போதிய வசதிகள் இல்லை என்று கூறுகிறார் டேவிட் பிளாக்.
இது போன்ற போதாமைகளை சுட்டிக்காட்டி முன்னாள் அமெரிக்க தடகள வீரர் பட்ச் ரெனால்ட்ஸ் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடையை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் சர்வதேச தடகள கூட்டமைப்பு (IAAF) அவரது தடையை நீக்கவில்லை!
இதுபோன்று பாதுகாப்பின்மைகளும், பரிசோதனை முறைகளில் பூடகமும் இருப்பதால் வீரர்கள் தங்கள் விளையாட்டு எதிர்காலத்தை இழந்து விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். வீரர்கள் அச்சத்தில் நியாயம் இருக்கிறது.
webdunia photo
WD
வீரர்களை அந்தந்த நாட்டு விளையாட்டு கூட்டமைப்புகள்தன் காக்கவேண்டும். அந்த வகையில் தற்போது பி.சி.சி.ஐ. தற்போது கையிலெடுத்திருக்கும் ஊக்க மருந்து விஷயத்தை வரவேற்கவேண்டும்.
கிரிக்கெட் வீரர்களை குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களையும், "பணம் கொழுத்தது" என்று கூறி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தையும் கண்டனம் செய்வதை விடுத்து, குறைந்தது கிரிக்கெட் அமைப்பாவது ஊக்க மருந்து தடுப்பு கழகத்தின் விதிமுறகள் குறித்த ஒரு உலகளாவிய விவாதத்தை கோரியுள்ளதே என்று மற்ற விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சியடையவேண்டும்.