இரண்டாவது 20- 20 உலகக் கோப்பை யாருக்கு?

வியாழன், 4 ஜூன் 2009 (17:39 IST)
webdunia photoWD
ஐ.சி.சி. இரண்டாவது இருபதிற்கு20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் நாளை முதல் இங்கிலாந்தில் துவங்குகிறது. போட்டிகள் லார்ட்ஸ், ஓவல், டிரென்ட் பிரிட்ஜ் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

இந்தியா, ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூஸீலாந்து ஆகிய 8 உயர் மட்ட அணிகளுடன் வங்கதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் களத்தில் இறங்கியுள்ளன.

கடந்த முறை தகுதி பெற்ற கென்யா, ஜிம்பாப்வே அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை.

அணிகள் 4 பிரிவுகளாக ஒரு பிரிவிற்கு 3 அணிகள் வீதம் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது:

பிரிவு ஏ - இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து
பிரிவு பி - இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து
பிரிவு சி- ஆஸ்ட்ரேலியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை
பிரிவு டி - தென் ஆப்பிரிக்கா, நியூஸீலாந்து, ஸ்காட்லாந்து

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்- 8 சுழல் சுற்றுக்கு தகுதி பெறும்.

சூப்பர் - 8 சுற்றில் இந்த அணிகள் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடும், இந்த சுற்றில் முதல் 4 இடங்களில் வரும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

பிரிவுகள் ஏ, பி, டி ஆகியவற்றில் ஒரு பலவீனமான அணி இடம்பெற்றுள்ள வேளையில் பிரிவு சி-யில் ஆஸ்ட்ரேலியா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை என்று மூன்று முக்கிய அணிகள் இடம் பெற்றுள்ளதால் முதல் சுற்று முடிவில் ஏதாவது ஒரு முக்கிய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும். இதனால் வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து அணிகளில் ஏதாவது ஒரு அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றேயாக வேண்டும்.

இந்தியா இருபதிற்கு20 உலகக் கோப்பை சாம்பியன் என்ற சிறப்புடன் களமிறங்குகிறது. அணிச் சேர்க்கையில் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கும் தற்போதைய அணிக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை.

ஆனால் கடந்த முறை 20- 20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றன. இந்த முறை இரண்டு ஐ.பி.எல்.தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் உலகக் கோப்பை 20- 20 போட்டிகள் நடைபெறுகிறது.

இரண்டு உலக கோப்பை போட்டிகளுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடாக இதனை கருதலாம். ஏனெனில் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகள் மூலம் தற்போது இந்த வகை ஆட்டத்தின் போக்குகளையும் உத்திகளையும், ஓரளவிற்கு பெருமளவு வீரர்களும் உலக அணிகளும் புரிந்து கொள்ள துவங்கி விட்டன.

கடந்த முறை இது என்ன மாதிரியான கிரிக்கெட் என்று புரிந்து கொள்வதற்குள் தோல்வியோ வெற்றியோ நிகழ்ந்து விட்டது. அதனால்தான் ஜிம்பாப்வேயிடம் ஆஸ்ட்ரேலியா தோல்வியைத் தழுவியது.

இந்த முறை இது போன்ற அதிர்ச்சிகளுக்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றாலும், பெரிய அணிகள் உத்திகள் அளவில் ஓரளவிற்கு தயாராக உள்ளன.

இருந்தாலும் இம்ரான் கான் மிகச்சரியாக கூறுவது போல் மட்டையை சுழற்றுவது, மாட்டினால் உண்டு இல்லையேல் அவுட் என்ற வகையான இந்த ஆட்டத்தில் எந்த அணியும் அந்த குறிப்பிட்ட நாளில் எந்த ஒரு பலம் வாய்ந்த அணியையும் வீழ்த்திவிடும் வாய்ப்பு உள்ளது.

இதனால்தான் ஏ பிரிவில் உள்ள இந்தியா, வங்கதேச அணியையும், அயர்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.


முக்கிய அணிகளின் பலமும் பலவீனமும்:

இந்தியா

webdunia photoWD
20- 20 உலக சாம்பியன் இந்திய அணியிலிருந்தே நாம் துவங்குவோம். ஐ.பி.எல். கிரிக்கெட் என்ற நீண்ட நாள் தொடருக்கு பிறகு இந்திய வீரர்களுக்கு ஒரு விதமான களைப்பும் சோர்வும் ஏற்பட்டிருக்கலாம். சோர்வும், களைப்பும் இல்லவே இல்லை என்று ஒருவரும் கூற முடியாது.

இதனால்தான் ஜாகீர் கான், சேவாக், யுவ்ராஜ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். தோனியும் கூட தனது அலுப்பையும், சலிப்பையும் மறைத்துக் கொண்டுதான் உற்சாகமாக இருப்பது போல் காண்பிப்பதாக தெரிகிறது.

ஆனால் ஒரு அணியாக பார்த்தால் இந்திய அணி பலமாகவே உள்ளது. சேவாக், கம்பீருடன் துவக்கம், பிறகு சுரேஷ் ரெய்னா, யுவ்ராஜ் சிங், ரோஹித் ஷர்மா, யூசுஃப் பத்தான் தோனி, ரவிந்தர் ஜடேஜா அல்லது இர்ஃபான் பத்தான், ஹர்பஜன் சிங் என்று பேட்டிங் பலம் சிறப்பாக உள்ளது.

குறிப்பாக சுரேஷ் ரெய்னா சமீபமாக விளையாடி வரும் அதிரடி ஆட்டம் எதிரணியினருக்கு பெரிய அச்சுறுத்தல்தான். ரோஹித் ஷர்மா, கம்பீர், சேவாக், யூசுஃப் பத்தான் இவர்களுக்கு ஆட்டம் பிடித்துக் கொண்டு விட்டால் அன்று எதிரணியினருக்கு பெரும் பிரச்சனைதான்.

webdunia photoWD
பந்து வீச்சில் ஜாகீர் கான் காயத்திலிருந்து மீண்டு எப்படி வீசுவார் என்று தெரியவில்லை. பிராக்யன் ஓஜா, ஹர்பஜன் சிங் அபாரமாக வீசுகின்றனர். இஷாந்த் ஷர்மா நியூஸீலாந்து அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறப்பாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சரியான ஃபீல்டிங், சிறப்பான பேட்டிங் இவை இருந்து விட்டால் பந்து வீச்சின் பலவீனத்தையும் மீறி இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.

உலக கோப்பையை இந்தியா தக்கவைத்துக் கொள்ளும் என்று ஆரூடம் கூற முடியாது. ஏனெனில் எல்லா அணிகளும் இந்த வகை கிரிக்கெட்டில் தற்போது ஓரளவிற்கு நிபுணத்துவம் அடைந்துள்ளன.

கடந்த முறை போல் இந்தியா எளிதாக வெல்ல முடியாது, கஷ்டப்பட்டுத்தான் வெல்ல வேண்டும். அரையிறுதி வரை முன்னேறும் என்று வேண்டுமானால் கூறலாம். அரையிறுதிக்கு பிறகு யார் வேண்டுமானாலும் கோப்பையை வெல்லலாம் என்பது நிபுணர்கள் துணிபு.

ஆஸ்ட்ரேலியா

webdunia photoWD
ஆஸ்ட்ரேலியாவிடம் இல்லாத ஒரே உலகக் கோப்பை இந்த கோப்பையாகத்தான் இருக்கும். இதனால் ரிக்கி பாண்டிங், தான் ஓய்வு பெறுவதற்கு முன் 20- 20 உலகக் கோப்பையையும் ஆஸ்ட்ரேலியாவிற்கு வெற்றிபெற்று தருவது என்ற முனைப்புடன் விளையாடுவார்.

ஆஸ்ட்ரேலிய அணி சமீப காலமாக நியூஸீலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற கடினமான அணிகளுக்கு எதிராக இருபதுக்கு 20 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும் அந்த அணி இயல்பாகவே நல்ல ஃபீல்டிங் திறமை உள்ள அணி. இதனால் 20 அல்லது 25 ரன்களை இவர்கள் தங்கள் ஃபீல்டிங்கினால் எதிரணியினருக்கு குறைத்து விடுவார்கள்.

பந்து வீச்சில் பிரட் லீ, மிட்செல் ஜான்சன், பீட்டர் சிடில், ஷேன் வாட்சன், பிராக்கன் என்று திறமையான வரிசையை கொண்டுள்ளது ஆஸ்ட்ரேலியா, பேட்டிங்கில் கடந்த ஐ.பி.எல். தொடர் நாயகனான ஷேன் வாட்சன், புதிய அதிரடி விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின், பாண்டிங், சைமண்ட்ஸ், டேவிட் ஹஸ்ஸி, மைக் ஹஸ்ஸி, மைக்கேல் கிளார்க் என்று அனைவரும் மிகத்திறமை படைத்த வீரர்களாக உள்ளனர்.

webdunia photoWD
ஆனால் ஆஸ்ட்ரேலியா உள்ள ‘சி’ பிரிவில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் இருப்பதால், அன்றைய தினம் கிறிஸ் கெய்லுக்கோ அல்லது இலங்கைக்கு எதிராக ஜெயசூரியாவோ, தில்ஷானோ அதிரடி ஆட்டம் ஆடி பந்துகள் மட்டையில் சிக்கத் தொடங்கினால் ஆஸ்ட்ரேலியா தோல்வியடைய வாய்ப்பிருக்கிறது.

ஆனால், சிறந்த கேப்டனுடன், முதல் தர பேட்ஸ்மென்கள், சிறப்பான பந்து வீச்சாளர்கள், பொறி பறக்கும் பீல்டிங் ஆகியவற்றுடன் ஆஸ்ட்ரேலியா ஒரு சாம்பியன் அணியாக திகழ்கிறது. இந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.


தென் ஆப்பிரிக்கா

webdunia photoWD
சமீபத்தில் பெற்ற வெற்றிகளுடன், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெற்ற சிறப்பான அனுபவத்துடனும், உரிய முறையில் வழி நடத்த கேப்டன் ஸ்மித்தும் இருக்கையில் தென் ஆப்பிரிக்க அணிதான் இந்த முறை கோப்பையை வெல்ல தகுதி பெற்ற அணி என்றே கூறலாம்.

ஸ்மித், கிப்ஸ், டீவிலியர்ஸ், காலிஸ், டுமினி, ஆல்பி மோர்கெல், மார்க் பௌச்சர் ஆகிய சிறந்த வீரர்களுடன் டேல் ஸ்டெய்ன், பார்னெல், போத்தா போன்ற சிறந்த, சிக்கனமான பந்து வீச்சாளர்களையும் கொண்டு தங்களது ஃபீல்டிங்கினால் எந்த பலம் வாய்ந்த அணியையும் மண்ணைக் கவ்வ வைக்கும் திறமை தென் ஆப்பிரிக்கா அணியிடம் உள்ளது.

ஆனால் இவர்களது பலவீனம் என்னவெனில், மிகப்பெரிய போட்டிகளின் போது வெற்றி வாய்ப்பிற்கு அருகில் வந்து கோட்டை விடுவது. இதன் மீது கவனம் செலுத்தினால் தென் ஆப்பிரிக்கா முதன் முறையாக் ஒரு உலகக் கோப்பையை வெல்லும், வெல்ல முடியும். இந்த தொடரில் உலகக் கோப்பையை வெல்ல சகல விதத்திலும் சாதகம் பெற்ற அணி ஒன்று உண்டென்றால் அது தென் ஆப்பிரிக்க அணியாகவே இருக்க முடியும்.

இங்கிலாந்து

பால் காலிங்வுட் தலைமையில், தங்கள் சொந்த நாட்டில் இங்கிலாந்து அணி விளையாடினாலும், ஒரு மாதிரியான பாரம்பரிய மனம் படைத்த வீரர்களாக இருப்பதால் இந்த கிரிக்கெட்டில் சோபிப்பது கடினம்.

எப்பவும் ஆஷஸ் தொடர் பற்றியே கவனம் செலுத்தி இடையில் வரும் தொடர்களில் கன்னாபின்னாவென்று தோற்கும் ஒரு அணியாகவே இங்கிலாந்து அணி காலம் காலமாக இருந்து வருகிறது.

webdunia photoWD
முதலில் அவர்களுக்கு இந்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நம்பிக்கையே இருப்பதில்லை. இத்தனைக்கும் 20 ஓவர் கிரிக்கெட்டை முதன் முதலாக உருவாக்கியதே இங்கிலாந்துதான். ரவி பொபாரா, காலிங்வுட், மஸ்கரென்ஹாஸ், கெவின் பீட்டர்சன், ஓவைஸ் ஷா போன்ற முதல் தர வீரர்களை வைத்துக் கொண்டு பயிற்சிப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக தட்டுத் தடுமாறி வெற்றி பெற்றது இங்கிலாந்து.

ஓரளவிற்கு நல்ல பேட்டிங், பந்து வீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சைட் பாட்டம், ஸ்டூவர்ட் பிராட், சிறந்த ஆஃப் ஸ்பின்னரும் அதிரடி வீரருமான கிரகாம் ஸ்வான் ஆகியோருடன் இங்கிலாந்து ஒரு அணியாக நன்றாகவே உள்ளது. ஆனால் இருபதுக்கு 20 கிரிக்கெட் குறித்த அவர்களது எதிர்மறை மன நிலை அவர்களை வெற்றிக்கான உந்துதலிலிருந்து தடுத்து நிறுத்தி விடும். இந்த மனத் தடையை நீக்கினால் மட்டுமே இந்த அணி பெரிய எல்லைகளை தொட முடியும்.

இதற்காக இந்த அணி ஒன்றும் தேறாது என்று கூறுவதற்கில்லை. உத்வேகத்துடன் நம்பிக்கை வைத்து ஆடினால் பல அணிகளுக்கு இந்த அணியால் அதிர்ச்சியளிக்க முடியும்.


பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி சமீப காலமாக எதிர் கொண்டு வரும் உள் குழப்பங்களும், அந்த நாட்டில் சென்று மற்ற அணிகள் கிரிக்கெட் விளையாட மறுத்ததனால் போதிய சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை விளையாட முடியாத நிலைமையினாலும் அந்த அணி சற்றே பலவீனமடைந்துள்ளது.

மேலும் ஐ.சி.எல். கிரிக்கெட்டிற்கு ரசாக், இம்ரான் நசீர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள், பந்து வீச்சாளர்கள் சென்று விட்ட நிலையில் அந்த அணியில் புதிய வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். இதுவும் அந்த அணியின் பலவீனத்தை அதிகரித்துள்ளது.

ஆனால் இவையெல்லாவற்றியௌம் மீறி அன்றைய தினத்தில் அவர்களுக்கு ஆட்டம் சூடு பிடித்தால் எவ்வளவு பெரிய அணியும் தோற்கடித்துவிடும்.

webdunia photoWD
சல்மான் பட், மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான், கம்ரன் அக்மல், ஷாஹித் அஃப்ரீடி என்று பேட்டிங் திறமையிருந்தாலும், இவர்களில் யூனிஸ் கான் தவிர மற்றவர்களை நம்ப முடியாது. அடித்தால் ஒரேயடியாக அடிப்பது இல்லையேல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுவது என்பது இந்த வீரர்களின் வரலாறாக இருந்து வருகிறது.

என்ன செய்யும் என்று கணிக்க முடியாத ஒரு அணி பாகிஸ்தான், இதனால் இந்த அணியைப் பற்றி நாம் அவ்வளவு சுலபத்தில் முடிவுக்கு வர முடியாது. ஒரு நாள் படு மோசமாக தோற்ப்பார்கள். மறு நாள் பெரிய அணியை எளிதில் வீழ்த்துவார்கள். இதனால் இந்த அணி ஒரு அபாயகரமான அணி என்று கூறலாம்.

நியூஸீலாந்து

உண்மையில், சமீப காலமாக தோல்விகளிலும் மனம் தளராது வெட்டோரி தலைமையில் உற்சாகத்துடன் விளையாடி வருகிறது நியூஸீலாந்து அணி. எந்த ஒரு பெரிய தொடரிலும் நியூஸீலாந்தின் ஆட்டம் சிறப்பாக அமைந்துள்ளது என்பதை வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.

இந்தியாவை இரண்டு 20 - 20 போட்டியிலும் நியூஸீலாந்து அணி அங்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது வென்றது. மேலும் ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் சரிக்கு சமமாக 20- 20 போட்டிகளில் விளையாடியது நியூஸீலாந்து.

webdunia photoWD
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அனுபவம் பெற்ற பிரெண்டன் மெக்கல்லம், டேனியல் வெட்டோரி, ராஸ் டெய்லர் ஆகியோர் சோபிக்காவிட்டாலும் கும்ளேயின் தலைமையில் விளையாடிய ஜெஸ்ஸி ரைடர், கில்கிறிஸ்ட் தலைமையின் கீழ் விளையாடிய ஸ்காட் ஸ்டைரிஸ், தவிர மார்டின் குப்டில், ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்கிளின், அதிரடி மன்னன் ஜேக்கப் ஓரம் பந்து வீச்சில் வெட்டோரி, கைல் மில்ஸ் என்று ஒரு அணியாக சிறப்பாக உள்ளது நியூஸீலாந்து.

எப்போதுமே நல்ல ஃபீல்டிங் அணியாக இருந்து வரும் நியூஸீலாந்து அணிக்கு இந்த முறை கோப்பையை வெல்ல ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.


மேற்கிந்திய தீவுகள்

மற்றொரு கணிக்க முடியாத அணி கிறிஸ் கெய்ல் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியாகும். பாகிஸ்தானைப் போலவே அன்றைய தினம் மைதானத்தில் என்ன நடக்கிறதோ அதுதான் முடிவு. ஒன்று அபார வெற்றி, இல்லையேல் படு மோசமான தோல்வி என்ற இந்த இரு முனைகளிலும் இருந்து வரும் அணி.

webdunia photoWD
இந்த அணி உள்ள ‘சி’ பிரிவில் கடினமான ஆஸ்ட்ரேலியா, ஓரளவிற்கு பலமான இலங்கை ஆகிய அணிகளை வெல்ல மேற்கிந்திய அணி கடுமையாக பாடுபடவேண்டி வரும். பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல், சர்வாணைத் தவிர மற்ற வீரர்கள் பற்றி ஒன்றும் கூறுவதற்கில்லை. பந்து வீச்சு பலமாக உள்ளது பிடல் எட்வர்ட்ஸ், ஜெரோம் டெய்லர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் 20- 20 கிரிக்கெட்டில் பந்து வீச்சின் பலம் மட்டும் போதாது.

அன்றைய தினம் ஓரிரு வீரர்களுக்கு ஆட்டம் பிடித்தால் அதாவது கெய்ல் பேட்டிங்கிலும் பிடல் எட்வர்ட்ஸ் அல்லது டெய்லர் பந்து வீச்சிலும் அசாதாரணமாக இருந்தால் ஆஸ்ட்ரேலியாவையும் வீழ்த்த முடியும் இந்த அணியால். கோப்பை வெல்வது என்பதெல்லாம் மேற்கிந்திய தீவுகளைப் போறுத்த வரை எட்டாக்கனியாகவே முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

இலங்கை

இருபதுக்கு 20 கிரிக்கெட்டை அதிக அளவில் விளையாடாத அணி இலங்கை. இருப்பினும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சங்கக்காரா, ஜெயவர்தனே, மலிங்கா, மஹரூஃப், ஜெயசூரியா, முரளிதரன், மென்டிஸ் ஆகியோர் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர்.

பேட்டிங்கில் அதிரடி துவக்க வீரர்களான ஜெயசூரியா, தில்ஷான் ஆகியோரும், கேப்டன் சங்கக்காரா, ஜெயவர்தனே, மஹரூஃப், குலசேகரா, துஷாரா ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் மலிங்கா, முரளிதரன், மஹரூஃப், அஜந்தா மென்டிஸ், குலசேகரா, துஷாரா ஆகிய திறமையான வீரர்கள் உள்ளனர்.

பயிற்சி போட்டிகளில் இலங்கை அணி வங்கதேசத்துடன் போராடியே வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக 109 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது.

webdunia photoWD
அனுபவ வீரர்களும், முத்தையா முரளிதரன், அஜந்தா மென்டிஸ், மலிங்கா போன்ற அபாய பந்து வீச்சாளர்களையும், ஜெயசூரியா, தில்ஷான் போன்ற அதிரடி பேட்ஸ்மென்களுடன் ஓரளவிற்கு நல்ல ஃபீல்டிங் திறமையும் கொண்ட இலங்கை அணி இந்த இருபதுக்கு 20 உலகக் கோப்பையில் ஒரு சவாலாக திகழும்.

ஆனால் இந்த அணி பிரிவு ‘சி’ பிரிவில் ஆஸ்ட்ரேலியாவையும் மேற்கிந்திய அணியையும் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. முதல் சுற்றில் இந்த இரு அணிகளையும் இலங்கை வீழ்த்தியது என்றால் இறுதி போட்டி வரை முன்னேறும் பலமும் திறமையும் கொண்ட ஒரு அணியாகவே இலங்கை விளங்குகிறது.


பலவீனமான அணிகள்

webdunia photoWD
இந்த உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய பலம் குறைந்த அணிகள் உள்ளன. ஆனால் இதில் வங்கதேச அணி மிகவும் அபாயகரமான அணியாகும். பயிற்சிப் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவின் 218 ரன்கள் இலக்கை துரத்தும் போது 13 ஓவர்கள் வரை இலக்கை எட்டும் விதமாகவே வங்கதேசம் விளையாடியது. கடைசியில் 20 ஓவர்களில் 181 ரன்களைக் குவித்தது வங்கதேசம்!

இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியை இலக்கை எட்ட விடாமல் செய்ய அனைத்து விதமான சவால்களையும் ஏற்படுத்தி 158 ரன்கள் இலக்கை எடுக்க கடைசி ஓவர் வரை இலங்கையை இழுத்தடித்தது வங்கதேசம்.

தமீம் இக்பால், அஷ்ரஃபுல், ஷாகிப் அல் ஹஸன், முஷ்ஃபிகுர் ரஹிம் என்று அதிரடி வீரர்களை தன்னகத்தே கொண்டுள்ள வங்கதேசம் பந்து வீச்சில் மோர்டசா, ஷாகிப் அல் ஹஸன், ரஸாக், போன்ற திறமையான வீச்சாளர்களை கொண்டுள்ளது.

பிரிவு சி-யில் ஒரு முக்கிய அணி சூப்பர்- 8 சுற்றில் விளையாட தகுதி பெறாது என்ற நிலையில் பிரிவு ஏ-யில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் சூப்பர் - 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஸ்காட்லாந்து, அயர்லாந்து அணிகளில் பலர் இங்கிலாந்து உள் நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அணியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கலக்கிய டிர்க் நேனஸ் தவிர மற்ற வீரர்கள் பற்றி அதிகம் தெரியவில்லை.

வங்கதேசம் சூப்பர்- 8 சுற்றில் நுழைகிறது என்றால் பெரிய அணிகளை வீழ்த்தும் ஒரு அசாதாரண தன்மை அந்த அணியிடம் உள்ளது.

webdunia photoWD
எனவே இந்த இருபதுக்கு 20 உலகக் கோப்பை கடந்த உலகக் கோப்பை போல் அல்லாமல் கடும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கும். நெருக்கடி தருணங்களில் அழுத்தை எதிர்கொள்ளாமல் நிதானமாக செயல் படும் அணிகள் வெற்றி பெறும். அந்த வகையில் இந்தியாவிற்கு 20- 20 உலக சாம்பியன் என்ற ஒரு விஷயம் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஜூன் 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விறுவிறுப்பான கிரிக்கெட் ஆட்டங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

webdunia photoWD
20-20 உலகப் கோப்பை போட்டிகளின் முடிவுகள் மட்டுமின்றி, ஆட்டத்தின் பல்வேறு திருப்பங்களை உடனுக்குடன் செய்தியாக்கி மிக விரிவான தொகுப்பை உங்களுக்கு அளிக்க உள்ளது தமிழ்.வெப்துனியா.காம