இந்திய கிரிக்கெட் பெற்ற மிகச்சிறந்த தலைமை

வியாழன், 22 செப்டம்பர் 2011 (21:44 IST)
FILE
மன்சூர் அலி கான் பட்டெளடி என்கிற பெயர் இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இருந்து மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகனாக இருந்த, இருக்கின்ற ஒவ்வொரு மனிதனின் மனதிலும் என்றென்றும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பொறுப்பு பட்டெளடி மீது அவருடைய 21வது வயதில் திணிக்கப்பட்டது என்பது வரலாறு. 1962இல் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணித் தலைவராக இருந்த நாரி காண்ட்ராக்டர், மேற்கிந்திய அணியின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளராகத் திகழ்ந்த சார்லி கிரிஃபித்தின் பந்தில் காயமுற்றதால், பார்படாசில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் காப்டனானார் பட்டெளடி. இன்றுவரை எவர் ஒருவரும் இத்தனை இளம் வயதில் இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதில்லை.

அதன் பிறகு 40 டெஸ்ட் போட்டிகளில் பட்டெளடி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்தியுள்ளார். இவருடைய தலைமையில் இந்திய அணி 9 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. அந்த காலத்தில் மேற்கிந்திய தீவுகள், ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளில் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர்களைக் கொண்டிருந்தன. அப்போது அணித் தலைமை ஏற்றதில் மட்டுமல்ல, சிறப்பான பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தார்.

70களில் சென்னையில் பட்டெளடி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராகவும் ஆடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், பட்டெளடியின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 சிக்சர்களுடன் 74 ரன்கள் எடுத்தார். இந்த டெஸ்ட் போட்டியில் ஃபீல்டர்களை நிறுத்திய விதம் பெரிதும் பாராட்டப்பட்டது. அணியின் பேட்டிங் சுமாராக இருந்தாலும், சுழற்பந்து வீச்சில் மகாராஜாக்களாகத் திகழ்ந்த பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தி இங்கிலாந்து அணியைத் தோற்கடித்தார் பட்டெளடி. அந்த ஆண்டின் பொங்கல் சமயத்தில் நடந்த இந்த டெஸ்ட் போட்டி மறக்க முடியாததாக இருந்தது.

அடுத்தபடியாக, பில் லாரி தலைமையில் வந்த ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி. ஆஸி அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்க, சென்னை டெஸ்ட் போட்டியை டிரா செய்துவிட துடிப்புடன் களமிறங்கியது இந்திய அணி. இந்திய சுழற்பந்து வீச்சில் ஆஸிக் கோட்டை சரிந்தத்து என்றாலும், டக் வால்டர்ஸின் 102 ரன்கள் அந்த அணியை தூக்கி நிறுத்தியது. அடுத்து ஆடிய இந்திய அணிக்கு 54 ரன்கள் குவித்து எண்ணிக்கையை உயர்த்தினார் பட்டெளடி.

இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சை தாங்க முடியாமல் திணறியது ஆஸி. அணி. ஆனால் தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய இயன் ரெட்பாத் 94 ரன்கள் எடுத்து ஆஸி. அணியின் எண்ணிக்கையை 154 ரன்களுக்கு உயர்த்த, அதுவே ஆஸி. அணி வெற்றி பெற போதுமானதாக இருந்தது.

பட்டெளடி அணித் தலைவராக இருந்து பெற்ற வெற்றிகளில் மிக முக்கியமானது, நியூ ஸீலாந்து நாட்டுப் பயணத்தில் 3-1 என்ற கணக்கில் பெற்ற டெஸ்ட் தொடர் வெற்றிதான். இது நடந்தது 1968இல்.

1967-68 ஆண்டுகளில் இந்திய அணி ஆஸ்ட்ரேலிய பயணத்தின் போது மெல்போர்னில் நடந்த டெஸ்ட் போட்டியில் பட்டெளடியின் ஆட்டம் மிகச் சிறப்பானதாக பேசப்படுகிறது. இந்திய அணி 25 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையில் இருந்தபோது களமிறங்கிய பட்டெளடி (பை ரன்னரை வைத்துக்கொண்டு) காலை நகர்த்த முடியாத நிலையிலும் 75 ரன்களை எடுத்து இந்திய அணியின் எண்ணிக்கையை 162 ரன்களுக்கு உயர்த்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸிலும் மிகச் சிறப்பாக ஆடிய பட்டெளடி, பந்து வீச்சாளர் ராமாகாந்த் தேசாயை வைத்துக்கொண்டு 10வது விக்கெட்டிற்கு 54 ரன்களை எடுத்ததுள்ளார். இரண்டாவது இன்னிங்ஸிலும் அரை சதம் எடுத்துள்ளார்.ஆயினும் அந்த டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்துள்ளது.

1961 முதல் 1975 வரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மன்சூர் அலி கான் பட்டெளடி ஜூனியர், 6 சதங்களுடன் 2,793 ரன்களை எடுத்துள்ளார் (சராசரி 35). இங்கிலாந்து அணிக்கு எதிராக 1964இல் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் எடுத்துள்ளார்.

இளமையில் நடந்த கார் விபத்தில் தனது வலது கண்ணை இழந்தவர் பட்டெளடி. ஆயினும் இவருடைய ஆட்டத்தில் அதனால் ஒரு குறையும் ஏற்படவில்லை. மிகச் சிறந்த அணித் தலைவராக திகழ்ந்த பட்டெளடி, 1975ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஓய்வு பெற்றார்.

இந்தி திரையுலகில் கொடி கட்டிப்பறந்த நடிகை சர்மிளா தாகூர் இவருடைய மனைவியாவார். இவர்களுக்கு சைஃப் அலி கான் என்ற மகனும், சோஹா கான், சாபா கான் ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் மூன்று பேருமே இந்தி நடிகர்களாக உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்