இதுதான் சல்மான் பவர் - சுல்தானை முன்வைத்து

வெள்ளி, 8 ஜூலை 2016 (18:08 IST)
இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார், வசூல் சக்ரவர்த்தி ரஜினி என்பதை சல்மான் கானும் ஒத்துக் கொள்வார். ஆனால், சல்மான் கானின் வசூல் சாதனை ரஜினி படங்களிலிருந்து மாறுபட்டவை.


 

 
சல்மான் கான் தொடர்ந்து படங்கள் நடிக்கிறார். ஒவ்வொரு படமும் 200, 300 கோடிகளை அனாயாசமாக தாண்டுகின்றன. ரஜினியும் சல்மான் கானைப் போல் தொடர்ச்சியாக படங்கள் நடித்தால், அவரது எல்லா படங்களும் இப்போது போல் கொண்டாடப்படுமா? வசூலை குவிக்குமா? என்பது கேள்விக்குறி.
 
சல்மான் கான் நடித்துள்ள சுல்தான் கடந்த புதன் கிழமை வெளியானது. அது விடுமுறை தினம் அல்ல. இருந்தும் படம் முதல்நாளில் இந்தியாவில் 36.54 கோடிகளை வசூல் செய்தது. இரண்டாவது நாளான வியாழக்கிழமை 37.20 கோடிகளை தனதாக்கியுள்ளது. முதலிரு தினங்களில் இந்திய வசூல் மட்டும் 73.74 கோடிகள். வெளிநாடுகளில் முதல் நாளில் 20.40 கோடிகளை படம் வசூலித்துள்ளது.
 
70 கோடி பட்ஜெட்டில் தயாரான சுல்தான் படத்திற்கு 20 கோடிகள் அளவுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. ஆக, படத்தின் மொத்தபட்ஜெட் 90 கோடிகள். உலக அளவில் முதல் இரு தினங்களிலேயே இந்த பட்ஜெட்டை படம் தாண்டியுள்ளது. வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சுல்தான் படத்தின் முதல்நாள் வசூல் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் படத்தைவிட குறைவு. சல்மான் படங்களிலேயே இது இரண்டாவது அதிகபட்சம்தான். ஆனால், இதனை வைத்து வசூலை கணிக்க முடியாது.
 
முதல்நாளில் 40 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்த ஹேப்பி நியூ இயர் படம் மொத்தமாக இந்தியாவில் 204 கோடிகளே வசூலித்தது. முதல்நாளில் வெறும் 27.25 கோடிகளை வசூலித்த சல்மானின் பஜ்ரங்கி பைஜான் திரைப்படம் மொத்தமாக 320.34 கோடிகளை வசூலித்தது. அதனடிப்படையில் பார்த்தால் சுல்தான் 350 கோடிகளை தாண்டும் என நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
 
முதல் மூன்று தினத்தில் ஷாருக்கானின் பேன் படத்தின் வசூலை (84.10 கோடிகள்) சுல்தான் கடந்துள்ளது. அதேபோல் ஹவுஸ்புல் 3 படத்தின் வசூலையும் (108.71 கோடிகள்) கடந்துள்ளது. நான்காவது நாளில் ஏர் லிப்ட் (128.10 கோடிகள்) படத்தின் வசூலையும் சுல்தான் தாண்டிச் செல்லும். 
 
படத்திற்கு கிடைத்துவரும் நேர்மறை விமர்சனங்கள், படம் இன்னும் அதிக வசூலை எட்டும் என்பதை உறுதி செய்கிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்