ஜெயலலிதா, சசிகலா குற்றவாளிகள்... திரையுலகினரின் ரியாக்ஷன் என்ன?

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (15:07 IST)
ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்து சேர்த்துள்ளனர். இவர்கள் நால்வரும் குற்றவாளிகள் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த நால்வருக்கும் தலா 4 வருட சிறைத்தண்டனை, 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் தண்டனையிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 
இந்த தீர்ப்பு குறித்து திரையுலகினர் என்ன சொல்கிறார்கள்?
 
தமிழகத்தில் அசாதாரண அரசியல் நிலை குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்துவரும் கமல், 'பழைய பாட்டுத்தான்  இருந்தாலும்...' என்று குறிப்பிட்டு, "தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடாகூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம்  வெல்லும்.. " என்று குறிப்பிட்டுள்ளார்.
 
நடிகர் பிரகாஷ்ராஜ், "இது முடிவு இல்லை. தூய்மையின் தொடக்கமே. இன்னும் போக பல மைல்கள் உள்ளன" என்று  கூறியுள்ளார்.
 
"தற்போதைய காபந்து முதல்வராகிய ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் அலுவலகத்துக்கு செல்வதை பார்க்க ஆவலாக உள்ளது.  அவரை முன்மொழிந்து பின்பற்றி அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது பணியை தொடங்க வேண்டும்" என அரவிந்த்சாமி  தனது விருப்பத்தை கூறியிருக்கிறார்.
 
நடன இயக்குனரும், இயக்குனருமான காயத்ரி ரகுராம் 'நச்'சென்று, "கடவுள் இருக்கிறார்" என்று தனது கருத்தை கூறியுள்ளார்.
 
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பயமே இல்லை. "ஓ.பி.எஸ் என்றால் ஓ.பன்னீர் செல்வம் என்று நினைத்தாயா ஆப்ரேஷன்  சசிகலா" என்று கூறியுள்ளார்.
 
"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... மீண்டும் தர்மம் வெல்லும்... இன்று தர்மம் வென்றது.. கொடியவர்கள்  தண்டிக்கபட்டார்கள்... நன்றி இறைவா..." என்று காமெடி நடிகர் பால சரவணனும், "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்"  என்று இயக்குனர் சீனு ராமசாமியும் கூறியுள்ளனர்.
 
தமிழகத்தில் கடந்த 7 நாள்களாக நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெண்கள்கூட மெகா சீரியலைவிட்டு செய்தி சேனல்கள்  பார்க்கிறார்கள். இது மெகா சீரியல் தயாரிப்பாளரான ராதிகாவை பாதித்துள்ளது. இந்த சூழலை, "மெகா சீரியல்களுக்கு இது  மிகப்பெரிய போட்டி" என்று அவர் வர்ணித்துள்ளார்.
 
திமுக தலைவரின் பேரன் அருள்நிதி, "3 பேர் உள்ளே.... 125  பேர் வெளியே.... பத்தரையுடன் முடிந்தது ஏழரை" என்று ஒரே  போடாக போட்டுள்ளார்.
 
இன்னும் காத்திரமான சுவாரஸியமான கமெண்ட்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை பேசாமலிருந்த திரை பிரபலங்கள்  பயமின்றி பேச இதுவொரு சந்தர்ப்பம். சினிமா நட்சத்திரங்கள் இந்த வாய்ப்பை முழு அளவில் பயன்படுத்த பொதுமக்கள் சார்பில்  வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்