2016 தமிழ் சினிமாவின் டாப் கமர்ஷியல் வெற்றிகள்

செவ்வாய், 27 டிசம்பர் 2016 (13:24 IST)
எந்தப் படமாக இருந்தாலும் வெளியான மறுநாள் சூப்பர்ஹிட் போஸ்டர் ஒட்டுகிறார்கள். படத்தின் உண்மையான வசூலை அறிய  வழியேயில்லை. கவுண்டரில் 50 ரூபாய் போர்டை மாட்டி அதே கவுண்டரில் 500 ரூபாய்க்கு டிக்கெட் விற்கிறார்கள்.


 
 
தமிழ்ப் படங்களின் வசூல் நிலவரம் கறுப்புப்பண நடமாட்டத்தைவிடவும் படுரகசியமாக இருக்கும் சூழலில், படங்களின்  கமர்ஷியல் வெற்றியை ஆராயப் புகுவது ஆபத்தானது. என்றாலும் நாம் அறிந்தவரையில் கமர்ஷியல் வெற்றியை ருசித்த  படங்களின் பட்டியலை தருகிறோம்.
 
ரஜினி நடித்த கபாலி படம்தான் 2016 தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படம். அதற்காக அனைத்துத் தரப்பினருக்கும் அதிக  லாபத்தை தந்த படம் இது என்று சொல்ல முடியாது. ரஜினி படம் என்பதால் பெரும் தொகைக்கு கபாலி விற்கப்பட்டது. அந்தப்  பெரும் தொகைக்கு மேல் கிடைப்பதுதான் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும். பல இடங்களில்  போட்ட பணத்தை எடுக்கவே திரையரங்குகள் திணறின. ஆனாலும், யாருக்கும் நஷ்டமில்லை என்பதுதான் இதுவரைக்குமான  முடிவாக உள்ளது.
 
இந்த வருடத்தின் ப்ளாக் பஸ்டர் படங்களில் ஒன்று விஜய்யின் தெறி. சந்தேகமில்லாமல் அனைத்துத் தரப்பினருக்கும்  லாபத்தை அள்ளித் தந்தது தெறி.
 
இன்னொரு பிளாக் பஸ்டர், சிவகார்த்திகேயனின் ரெமோ. படத்தை விமர்சகர்கள் கிழித்தாலும் கல்லா பொங்குமளவு சிறப்பான  வசூல். அனைத்துத் தரப்பினரையும் குஷிப்படுத்திய பிளாக் பஸ்டர் வெற்றி.
 
இந்த மூன்று படங்கள் தவிர மற்ற எந்தப் படத்தையும் ப்ளாக் பஸ்டர் பட்டியலில் சேர்க்க முடியாது.
 
அதேநேரம் 2016 ஜனவரியில் வெளியான சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் மேலே உள்ள படங்கள் அளவுக்கு  வசூலிக்கவில்லை என்றாலும், அனைத்துத் தரப்பினருக்கும் லாபத்தை அள்ளித்தந்தது.
 
ஹிட் லிஸ்டில் இறுதிச்சுற்று, பிச்சைக்காரன், இருமுகன், தற்போது ஓடிக் கொண்டிருக்கும் சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்  ஆகிய படங்களை சேர்க்கலாம். தில்லுக்கு துட்டு, தோழா, அரண்மனை 2, தர்மதுரை, சேதுபதி ஆகியவை முதலுக்கு மோசம்  செய்யாதவை.
 
விசால மனதுடன் இந்தப் பட்டியலை நீட்டித்தால் மருது, மிருதன், இது நம்ம ஆளு, அப்பா, ஆண்டவன் கட்டளை, காதலும்  கடந்து போகும், தேவி, அச்சம் என்பது மடமையடா என்று மேலும் சில படங்கள் தேறும்.
 
பிற மொழிப் படங்களின் வெற்றிப் பட்டியலுடன் ஒப்பிட்டால் தமிழ் சினிமாவின் வெற்றியின் சதவீதம் மிக மெலிந்திருப்பதை  உணர முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்