இந்தியத் தொலைக்காட்சிகளை பிடித்து ஆட்டும் மூன்று!

செவ்வாய், 11 மார்ச் 2008 (16:58 IST)
webdunia photoWD
இந்திய செய்தி தொலைக்காட்சிகளை பிரதானமாக 3 விஷயங்கள் ஆக்கிரமித்து வருகின்றன என்று லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் தயா கிஷன் துஸ்ஸு தனது சமீபத்திய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“பொழுதுபோக்கிற்கென தனியான சானல்கள் தேவையில்லை. செய்திகளையே பொழுதுபோக்குகளாக மாற்றுவது, பொழுதுபோக்கு விஷயங்களையே மேலும் சுவாரஸ்யமான செய்திகளாக மாற்றுவது. இதுவே தற்பொதைய இந்திய செய்தி தொலைக்காட்சிகளின் புதிய தந்திரம” என்கிறார் தயா கிஷன் துஸ்ஸு.

"நியூஸ் ஏஸ் என்டெர்டெய்ன்மென்ட்: தி ரைஸ் ஆஃப் குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட்" என்ற அவரது இந்திய தொலைக்காட்சிகள் பற்றிய ஆய்வு நூலில் சினிமா, கிரைம், கிரிக்கெட் ஆகிய இந்த மூன்று விஷயங்கள் அளவுக்கு அதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தொலைக்காட்சி மட்டுமல்லாது உலக தொலைகாட்சிகளின் பொருளடக்கங்களில் செய்திகள் எவ்வாறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைக்கப்படுகின்றன என்பதோடு, செய்திகளே பொழுதுபோக்கு அம்சமாக மாறி வருவதன் தன்மைகளையும் ஆராய்ந்து எழுதியுள்ளார்.

இதில் குறிப்பாக சினிமா, கிரிக்கெட், கிரைம் என்பது இந்திய செய்தித் தொலைக்காட்சி சானல்களில் அடிக்கடி செய்தித் திரட்டுகளாக மாற்றப்பட்டு நேரத்தை அதிக அளவில் ஆக்ரமித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற செய்தித் திரட்டாக மாற்றும் போக்கு ருபர்ட் முர்டாக்கின் செய்தி நிறுவனங்களின் தாக்கத்தால் ஏற்பட்டவையே என்று வாதிடுகிறார் பேராசிரியர் துஸ்ஸு.

இதுபோன்று செய்திகளையே செய்தித் திரட்டாக காண்பித்து அதனை ஊதிப் பெருக்கி உருவாக்கப்படும் கருத்துகளால் பொது மக்களின் சிந்திக்கும் திறன் கடுமையாக சீரழிந்து வருகிறது என்று சாடியுள்ளார். உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடாக கருதப்படும் இந்தியாவில் செய்தி ஒளிபரப்பு தொலைக்காட்சி சானல்கள் ஏற்படுத்தும் கருத்துருவாக்கங்கள் மக்கள் சிந்தனைகளை ஆக்கிரமித்து நிலை நிறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளின் பாலிவுட்மயமாக்கம் பற்றியும் ஒரு தனி அத்தியாயத்தில் இவர் எழுதியுள்ளார். மேலும் இந்திய செய்தி ஒளிபரப்பு தொலைக்காட்சிகள் தற்போது செய்தி-பொழுதுபோக்குமய உலகளாவிய போக்குகளை இந்திய தொலைக்காட்சிகள் பிரதிபலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் தொலைக்காட்சி வளர்ந்த விதம் குறித்தும் வரலாற்றுபூர்வமாக அவர் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.

உலகமயமாதல், தாராளமயமாதல் காலக்கட்டத்தில் ஊடகங்களின் போக்குகள் எவ்வாறு மாறிவருகின்றன என்பதை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் தயா கிஷன் துஸ்ஸு, ஊடகங்களின் பன்னாட்டு விளைவுகள் குறித்து எழுதியிருக்கும் 6வது புத்தகமாகும் இது.

வெப்துனியாவைப் படிக்கவும்