குழந்தை வரம் தரும் அங்காள பரமேஸ்வரி
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:05 IST)
சென்னை மாநகரின் மத்திய பகுதியான சூளையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயம் பொதுவான அங்காளப் பரமேஸ்வரி ஆலயங்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது. அம்மன் என்றதும் உக்கிரமாகவோ, நின்ற கோலத்திலோ அல்லாமல், தன் குழந்தையான பாவாடைராயனை தனது மடியில் வைத்து காட்சி தரும் இந்த அம்மன், குழந்தை இல்லாத தம்பதியரின் மனக் குறைகளை போக்கி, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அளிக்கிறார். அங்காளபரமேஸ்வரி - காசி விசுவநாத சுவாமி கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த கோயிலுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகள், கோயிலில் பூஜித்துத் தரும் எலுமிச்சையை பிரசாதமாக உண்கிறார்கள். இந்த கோயிலில் முதுலில் முனீஸ்வரர் காட்சி தருகிறார். அதனைக் கடந்து விநாயகர், விஸ்வபிரம்மாவையும், தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து, காசி விஸ்வநாதர் சந்நதியை அடையலாம். கொடிமரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சந்நதியின் பிரகாரத்தில் சூரியனையும், சந்திரனையும் வணங்குகிறோம். இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் மிளகு, முந்திரி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ள நோய்கள் குணமாகும். தேங்காய் உடைத்து அதில் நெய் விளக்கு ஏற்றி வந்தால் கடன்கள் அடையும். கோயிலில் ஈசனின் சந்நதிக்கு அருகில் உள்ள மண்டப சுவரில் அங்காளபரமேஸ்வரி வரலாறு மிக அழகாக சுதைச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. தனி சந்நதியில் வள்ளி - தெய்வானை சமேத சுப்ரமணியர் அருள்கிறார். இங்கு தல விருட்சம் வன்னி மரமாகும். அதனூடே மரமல்லி மரமும் மணம் பரப்பி நிற்கின்றது. வன்னி மரத்தடியில் புற்று அம்மனுக்கும், நாகருக்கும் அருகே மிக பிரம்மாண்டமான புற்றுக் கோயில் உள்ளது. அருகில் நவக்கிரகமும் அமைந்துள்ளது. இங்கிருந்து நேராக அன்னை சந்திக்குச் செல்ல வேண்டும். கொடிமரம் கடந்து சென்று பாவாடைராயனை வணங்கி உள்ளே சென்றதும், மிகப்பழமையான அன்னையின் கருவறையில், மடியில் குழந்தையுடன் அங்காளபரமேஸ்வரி காட்சி அளிக்கிறார். விழாக்கள் : ஆண்டுதோறும் மாசி அமாவாசை அன்று இத்தலத்தில் நடக்கும் மயானக் கொள்ளை உற்சவம் மிக பிரசித்தம். நம்பிக்கை : இந்த கோயிலுக்கு குழந்தை இல்லாதவர்கள் வந்தால் குழந்தை வரம் கிட்டும். திருமணமாகாதவர்கள், மஞ்சள் கயிறு வாங்கி வந்து அம்மன் பாதத்தில் வைத்து அதனை அங்கிருக்கும் அரச மரத்தில் கட்ட விரைவில் திருமணம் நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்று நம்பப்படுகிறது. அமைவிடம் : சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள சூளையில் இந்த கோயில் அமைந்துள்ளது. புரவைவாக்கத்தில் இருந்தும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்தும் ஏராளமான பேருந்துகள் சூளைக்கு செல்கின்றன.
செயலியில் பார்க்க x