திருவிழாவின் இரண்டாம் நாள் முக்கிய நிகழ்வாக, நேற்று காரைக்கால் அம்மையார் கோவில் மண்டபத்தில், காரைக்கால் அம்மையாருக்கும் பரமதத்த செட்டியாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று மூன்றாம் நாள் முக்கிய நிகழ்வாக, பிச்சாண்டவர் ஊர்வலம் மற்றும் மாங்கனி இறைப்பு நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. காலை 9 மணிக்கு கைலாசநாதர் கோவில் எதிரில், பவளக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதி உலா புறப்பட்டார்.
இந்த ஊர்வலத்தின்போது, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில், தங்கள் வீட்டு வாசல்கள், மாடிகள் மற்றும் சாலையின் இருபுறங்களிலிருந்தும் மாங்கனிகளை உற்சாகமாக பக்தர்கள் மீது வீசி எறிந்தனர். ஏராளமான பக்தர்கள் இந்த மாங்கனிகளை ஆனந்தமாகப் பிடித்துச் சென்றனர். இந்த மாங்கனிகளை உண்டால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால், திரளான பெண்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாங்கனிகளைப் பிடித்து சென்றனர்.
இந்த மாபெரும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், ஆலய நிர்வாக அதிகாரி காளிதாசன் மற்றும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.