கோபியில் நேற்று, தனியார் மருத்துவமனைக்கு வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவி ஒருவரை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது, ரத்தப் போக்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, இருவரும் கணவனும் மனைவி தானா என்று விசாரணை செய்யப்பட்டது. அதில், அவர்கள் காதலர்கள் என்பதும், திருமணம் செய்யாமலே வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்தது. இதனை அடுத்து, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்திய போது, சில பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. வாலிபரும் கல்லூரி மாணவியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்யாமலே கணவன்-மனைவி போல் வாழ்ந்தனர்.
அப்போது அந்த கல்லூரி மாணவி கர்ப்பமாகி, பெற்றோருக்கு தெரியாமல் இருந்தார். பிறகு மாணவிக்கு பிரசவ வலி வந்தபோது, வாலிபர் YouTube பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
ஆனாலும், ரத்தப்போக்கு நிற்காததால், வாலிபர் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த விவரம் தெரியவந்ததும், மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.