ஆம், இது சசிகலாவின் பினாமி அரசுதான். வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அதிமுக

வியாழன், 23 பிப்ரவரி 2017 (21:14 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாதான் தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் உதவியுடன் ஆட்சி செய்து வருகிறார் என்றும் இது சசிகலாவின் பினாமி அரசு என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் ஆம், இது சசிகலாவின் பினாமி அரசுதான் என்று தைரியமாக ஊடகம் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.



'இந்த அரசை பினாமி அரசு என்று சிலர் கூறுகின்றனர். அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த அரசு சசிகலா கண்ட்ரோலில் நடக்கும் அரசாங்கம்தான். சசிகலா கண்ட்ரோலில் தினகரன் மேற்பார்வையில் நடக்கும் அரசு என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறோம். சசிகலாவை ஏழுகடல் தாண்டி, ஏழு மலை தாண்டி சிறை வைத்தாலும், அவர் இடும் கட்டளையை செயல்படுத்துவோம். இதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று அதிமுக பிரமுகர் கெளரி சங்கர் கூறியுள்ளார்.

மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருந்ததால் தான் சசிகலா மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்றதாகவும், அவரால் தான் சிறை தண்டனையை சசிகலா அனுபவித்து வருவதாகவும் கெளரி சங்கர் கூறினார்.

இந்த பேட்டியை பார்த்து தமிழக மக்கள் கொதிப்படைந்து இருப்பது சமூக வலைத்தளங்களில் இருந்து எழுந்துவரும் விமர்சனங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்