ஆட்சி அமைக்க ஓ.பி.எஸ்-ஐ ஆளுநர் ஏன் அழைக்கவில்லை? - ஒரு அலசல்

வியாழன், 16 பிப்ரவரி 2017 (13:25 IST)
அதிமுக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் ஓ.பி.எஸ் தரப்பு கொண்டு வர தவறி விட்டது அல்லது முடியாமல் போய்விட்டதே, எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் வாய்ப்பை ஆளுநர் கொடுக்க காரணமாக இருந்துள்ளது என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது..


 

 
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர். இன்று மாலை 4.30 மணிக்கு அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மேலும், இன்னும் 15 நாட்களில் அவர் தன்னுடைய பெரும்பான்மையை சட்டமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
 
பெரும்பாலான மக்களின் ஆதரவு ஓ.பி.எஸ்-ற்கு இருப்பதாக  கூறப்பட்டது. அவரை ஆட்சி அமைக்கவோ அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவோ ஆளுநர் அழைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அதை செய்யவில்லை.. காரணம் இதுதான்...
 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன் அவருக்கு மக்களின் ஆதரவு பரவலாக இருந்தது. சசிகலா குடும்பத்தினரிடமிருந்து அவர் அதிமுக-வை கைப்பற்றுவார் என்றே பலரும் நினைத்தனர். முக்கியமாக, அதிமுக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானோர் தன் பக்கம் வருவார்கள் என அவர் உறுதியாக நம்பினார். இது தெரிந்துதான், சசிகலா தரப்பு அதிமுக எம்.ல்.ஏக்களை கூவத்தூர் விடுதியில் தங்க வைத்தது. எனவே, சுய விருப்பத்தின் படி செயல்படும் சுதந்திரத்தை அதிமுக எம்.எல்.ஏக்கள் இழந்தனர். 


 

 
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை அவர்களை சசிகலா பக்கம் சாய்த்திருக்கலாம். இதில் கோடிக்கணக்கான பணமும், அமைச்சர் பதவிகளும் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதாக  செய்திகள் வெளியானது. அதையும் மீறி,  11 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வந்தனர். ஆனால், அதிரடியாக செயல்பட வேண்டிய ஓ.பி.எஸ், மிகவும் அமைதியாக செயல்பட்டதே, ஆளுநர் முடிவு அவருக்கு பாதகமாக அமைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது..
 
கடந்த 8ம் தேதி ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் சசிகலா. ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்காக ஆளுநர் காத்திருந்தார். தீர்ப்பு சசிகலாவிற்கு பாதகமாக அமைந்து அவரின் அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது. அடுத்து சசிகலா சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதற்கான அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதமும் ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. 
 
ஏற்கனவே, ஆளுநர் தாமதம் செய்து வருவதாகவும், இதன் பின்னணியில் பாஜக இருப்பதகாவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நான் வெளியே வந்தால் குறைந்த பட்சம் 50 எம்.எல்.ஏக்கள் என் பின்னால் வருவார்கள் என மத்திய அரசிடம் ஓ.பி.எஸ் வாக்குறுதி கொடுத்ததாக தெரிகிறது.  அப்படி வந்தால், பெரும்பான்மை இல்லாததை காரணம் காட்டி ஆட்சியை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர முடிவு செய்திருந்தது மத்திய அரசு. ஆனால், ஓ.பி.எஸ் பக்கம் அந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்கள் வரவில்லை. 


 

 
முக்கியமாக கூவத்தூரில் இருந்து எம்.எல்.ஏக்களை வெளியேற்றும் முயற்சியிலும் ஓ.பி.எஸ் தோல்வி அடைந்தார். நாங்கள் இங்கே சுதந்திரமாக இருக்கிறோம். எங்களை யாரும் சிறை வைக்கவில்லை என சில எம்.எல்.ஏக்கள் செய்தியாளர்களிடம் நேரிடையாக பேட்டியளித்தனர்.  எனவே, இதற்கு மேல் ஆளுநர் பொறுமையாக இருக்க முடியாது என்பதால்தான், அரசியலைப்பு சட்டப்படி, அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்.
 
ஆனாலும், எடப்பாடி தனது பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும் என ஆளுனர் கூறியுள்ளார்.  இது முடிவல்ல.. அரசியலில் எந்த நேரமும் எதுவும் மாறும். இதே எம்.எல்.ஏக்கள் நாளை ஓ.பி.எஸ் பக்கம் தாவலாம். 
 
அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளில் பரபரப்புடன் பயணிக்கிறது தமிழகம்...

வெப்துனியாவைப் படிக்கவும்