மாணவர்கள் மீது தடியடி நடத்தியது இதனால்தான் - ஓ. பன்னீர்செல்வம் பதில்

வெள்ளி, 27 ஜனவரி 2017 (16:45 IST)
குடியரசு தினத்தை சீர்குலைக்க சமூக விரோத கும்பல் திட்டமிட்டிருந்தது. இந்த போராட்டத்தின்போது குறைந்த பட்ச பலத்தை மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தினர் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


 

சட்டப்பேரவையில் இன்று மெரீனாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது 23ஆம் தேதி போலீசார் தடியடி நடத்தியது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ”16.1.2017 அன்று மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 700 பேர் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி வாடிவாசல் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுமார் 227 பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், காவல் துறையினர் அவர்களை 17.1.2017 அன்று கைது செய்தனர்.

இதனையடுத்து, பொது மக்கள் சுமார் 3,500 பேர் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கூடி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரை, கோயம்புத்தூர், மதுரை மாநகர், திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடினர்.

இதனையடுத்து, காவல் துறையினர் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்தனர். விடுவிக்கப்பட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து, காவல் துறையினர் தலையீட்டின் பேரில், பின்னர் அவர்கள் கலைந்து சென்று வாடிவாசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மீண்டும் சேர்ந்து கொண்டனர்.

அன்று, சென்னை மெரினா கடற்கரை, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கதக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி ஆங்காங்கு தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

19.1.2017 அன்று காலை புதுடெல்லியில் பாரதப் பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்திட அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்த உள்ளேன் என்பதையும் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளும் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். நான் புதுடெல்லி செல்வதற்கு முன் எனது வீட்டில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களின் பிரதிநிதிகளை சந்தித்து இது பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினேன்.

19.1.2017 அன்று மதுரை மாநகர், வைகையாற்று பாலத்தில் சுமார் 1,000 பேர் நாகர்கோயிலில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரெயில் வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று, காரைக்கால் பெங்களூர் விரைவு ரெயில் வண்டியை சேலம் நகரில் சுமார் 500 பேர் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மதுரை இரயில்வே சந்திப்பில் பயணிகள் ரெயில் ஒன்றையும், பின்னர் காரைக்குடி ரெயில் நிலையத்தில் குருவாயூர் விரைவு ரெயில் வண்டியையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறித்தனர்.

காவல் துறையினர் தலையிட்டும் அவர்கள் ரெயில் வண்டிகளை செல்ல விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த மறியல் போராட்டங்களினால் சென்னைக்கும் தென் மாவட்டங்களுக்கும் இடையிலான ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பல இடங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல், ரெயில் மறியல், ஊர்வலம், மனித சங்கிலி போன்ற போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

இப்போராட்டங்களின் போது காவல் துறையினர் பொது அமைதிக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். குறிப்பாக சென்னையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்ற போதும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் பார்த்துக் கொண்டனர்.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தவர்களிடையே பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக விரோதிகள் ஊடுருவி ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பும் நோக்கில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை தூண்டிவிட்டதோடு, அவ்வமைப்பினர் பொது இடங்களில் மிகவும் ஆட்சேபகரமாக பேசி வந்தனர்.

இப்போராட்டங்கள் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டு, பொது மக்களின் அன்றாட அலுவலுக்கு இடையூறு ஏற்பட்டது. குறிப்பாக, சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சென்னை, மெரினா கடற்கரையில் 26.1.2017 வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, குடியரசு தினத்தன்று கறுப்புக்கொடி காட்டுதல், குடியரசு தின விழாவை சீர்குலைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன.

போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று விலியுறுத்தினர். தேச விரோத, சமூக விரோத கும்பல்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்பினர். முல்லைப் பெரியாறு, தனித் தமிழ்நாடு என கோரிக்கை எழுந்தது. குடியரசு தினத்தை சீர்குலைக்க சமூக விரோத கும்பல் திட்டமிட்டிருந்தது. இந்த போராட்டத்தின்போது குறைந்த பட்ச பலத்தை மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தினர்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்