இந்நிலையில், திமுக தலைமைக்கழகம் மாநகராட்சியின் மேயர் யார் என்றும், துணை மேயர் யார் என்றும் அறிவித்துள்ளது. அதேபோல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவிதா கணேசன் கரூர் மாநகராட்சி மேயராகவும், துணை மேயராக தாரணி சரவணன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள மேயர் மற்றும் துணை மேயர்களுக்கான மறைமுக வாக்கு பதிவானது நாளை மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேலும், கவிதா கணேசன் என்பவர், ஏற்கனவே, கரூர் பெருநகராட்சியாக ஆவதற்கு முன்னர் கரூர், தாந்தோன்றிமலை, இனாம் கரூர் ஆகிய மூன்று நகராட்சிகளாக இருக்கும் போது, இனாம் கரூர் நகராட்சியின் நகர்மன்ற தலைவராகவும் இருந்தார். தாரணி சரவணன் ஏற்கனவே வார்டு உறுப்பினராகவும் இருந்தவர் ஆவார். கரூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளில் அமர்பவர்களும் இந்த இருவர் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமில்லாமல், கூட்டணியில், அங்கம் வகிக்கும், காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் எதிர்த்த திமுக வின் சுயேட்சைகள் உள்ளிட்டவைகளுக்கு துணை தலைவர் பதவி இருக்குமா ? என்று எதிர்பார்த்த நிலையில், திமுக கட்சியில் காலம், காலமாக இருந்த கவிதா கணேசனுக்கு இம்முறை திமுக தலைமைக்கழகம் வாய்ப்பு வழங்கியுள்ளது. துணை மேயர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள தாரணி சரவணன் தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு சென்று வந்தவர் ஆவார்.